Sunday, September 29, 2013

தோழர் பி.சீனிவாசராவ் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!
ஜி.ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்ட அறிவிப்பு காரணமாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை ஒழிந்தது. இதைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் தேநீர் அருந்திய தலித் மக்கள்
கடந்த ஜூலை 1 அன்று புதுதில்லி யில் நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக கடைபிடிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மாற்றுப் பொருளாதார - சமூகக்கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.
10 அம்சங் களைக் கொண்ட மாற்றுக் கொள்கைத் திட்டத்தில், கடந்த 22 ஆண்டு காலமாக மத்திய அரசு அமலாக்கி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை யை எதிர்த்தும், நலிவடைந்த பிரிவினரான தலித், பழங்குடி, பெண்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோரது பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கிய தாகவும் பிரகடனம் அமைந்துள்ளது.
மேற்கண்ட மாற்றுக் கொள்கையில் ஒரு அம்சமான தலித் மக்களின் சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்காக 30.9.2013 அன்று பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி மாநில அளவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகவும், கட்சி சார்பாகவும் தீண் டாமை ஒழிப்பு இயக்கம் நடைபெற வுள்ளது. மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவும் சில மையங்களை தேர்வு செய்து இந்த இயக்கம் நடை பெறுகிறது.
ஏழு மையங்களில் அறிவிக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கை களில் ஐந்து இடங்களில் அரசு நிர்வாகம் தலையிட்டு, பேச்சுவார்த்தைகள் நடை பெற்று தீண்டாமைக் கொடுமைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இ.முத்துலிங்கபுரம் கிராமத்தில் பொதுத் தொட்டியில் அருந்ததிய மக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை; மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முடித் திருத்தகங்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு; தஞ்சை மாவட்டம் ஈஞ்சம்பாடி கிராமத்தில் தேனீர் கடைகள் மற்றும் முடிதிருத்தகங்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு; ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தில் சத்தீஸ்வரன் ஆலயத்திற்குள் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுப்பு மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலித் மக்கள் பொதுப் பாதையில் செல்வதை தடுக்கும்விதமாக பாதையை மறித்து இரும்புகேட் அமைப்பு ஆகியவற்றை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்திருந்த நேரடி நடவடிக்கை போராட்டங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட்டு வெற்றிபெற்றுள்ளன.
இது பாராட்டத்தக்கது ஆகும். செப்டம்பர் 30 தோழர் பி. சீனிவாச ராவின் நினைவு தினம் திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் தென்கனராவில் பிரா மணக் குடும்பத்தில் பிறந்த தோழர் சீனி வாசராவ், பெங்களூரில் படிக்கின்ற போது மாணவர்கள் எல்லாம் சுதந்திரப்போராட் டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அண்ணல் காந்திஜி விடுத்த அழைப்பை ஏற்று கல்லூரியை விட்டு வெளியேறி சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண் டார். அந்நியர் ஆட்சிக்கு எதிராக சென்னை யில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையின் தாக்குத லுக்கு உள்ளாகி பலமுறை சிறையி லடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் உரு வான முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை யில் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், சி. சுப்பிரமணியம் போன்ற தோழர்களோடு சீனிவாசராவும் உறுப்பினரானார். அடுத் தடுத்து கட்சி வளர்ச்சியடைந்து மாநிலக் குழு உருவாக்கப்பட்ட போது தோழர் சீனிவாராவ் விவசாயிகளைத் திரட்டு வதற்காக தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றார். 1940களின் துவக்கத்தில் களப் பால் குப்புவின் கிராமத்தில் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடு மைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர் களையும் திரட்டுவதில் முக்கியப் பங்காற் றினார்.
1940களில் துவங்கி கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வலுவாக நடை பெற்ற போராட்டத்தின் விளைவாக, ஒப்பீட்டளவில் தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தோழர் சீனிவாச ராவின் பங்கு பிரதானமானது. கேரளத்தில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைப்போல் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டு மென்று வலியுறுத்தி 1961ம் ஆண்டு மாநில அளவிலான விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சென்று விவசாயிகளைத் திரட்டுவதில் அயராது பணியாற்றிய தோழர் பி. சீனிவாசராவ் உடல்நலம் குன்றி செப்டம்பர் 30 அன்று காலமானார். பல்லா யிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அவருடைய இறுதி நிகழ்ச்சி திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. தோழர் பி.எஸ்.ஆர். என்று அன்புடன் அழைக்கப்பட்ட சீனிவாராவ், தஞ்சை மாவட்டத்திற்கு செல்வதற்கு முன் அவருக்கு தமிழில் பேச முடியும்; ஆனால் தமிழில் சரிவர எழுதப்படிக்க தெரியாது.
இருப்பினும் விவசாயிகளையும், விவ சாயத் தொழிலாளர்களையும் திரட்டும் பணியில் ஈடுபட்ட தோழர் பி.எஸ்.ஆர். மக்கள் மொழியைக் கற்று மக்களைத் திரட்டினார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான, நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராளியாக மட்டுமல்ல; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ் நிலை, நிலக்குவியல், தீண்டாமைக் கொடுமை போன்ற நிலைமைகளை துல் லியமாக ஆய்வு செய்து அதனடிப் படையில் கோரிக்கைகளை உருவாக்கி இயக்கத்திற்கு பி.எஸ்.ஆர். தலைமை தாங்கினார். தீண்டாமைக் கொடுமையும், நிலப் பிரபுத்துவ சுரண்டலும் (நில உறவும் - சாதிக் கொடுமையும்) பின்னிப் பிணைந் துள்ளது என்று சுதந்திரப்போராட்டக் காலத்திலேயே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து மாநில அளவில் இரண்டு கொடுமைகளையும் எதிர்த்து இயக்கம் நடத்தியது. குறிப்பாக கீழத் தஞ் சையில் உள்ள அரசியல் - பொருளாதார - சமூக நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற சிறுபிரசுரத்தை தோழர் பி.எஸ்.ஆர். தயாரித்து கட்சியின் அன் றைய மாவட்டக்குழு 1947ம் ஆண்டே (விடுதலைக்கு முன்பு) வெளியிட்டுள்ளது.
“சமூகத்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் நசுக்கப்பட்டுக் கிடந்த இந்த மக்களுக்கு கிசான் சபை ‘உயிர் காக்கும் தோழனாக’ ஆகி விட்டது. பொதுக் கிணறு களில் தண்ணீர் எடுப்பதற்கு இந்த மக்களை ஜாதி இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்காவிட்டாலும் போகிறது. சேரிகளிலாவது கிணறுகள் உண்டா? அதுவுமில்லை. தொல்லை இத்துடன் நிற்கவில்லை. ஜாதி இந்துக் களை தூரத்தில் பார்த்துவிட்டாலும் உடனே தரையில் விழுந்து கும்பிட வேண்டும். இதுதான் அவர்களுக்கு மரி யாதை செய்யும் விதம். தம் எஜமானர் களின் கட்டளைப்படி கீழ்த்தர வேலை கள் அத்தனையும் இந்த ஆதிதிரா விட மக்களே செய்ய வேண்டும். ஜாதி இந்துக் கள் ஹரிஜன மக்களை எவ்வாறு நடத்து கிறார்கள் என்பதைப் பற்றி தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியு மாதலால், நான் அதைப்பற்றி விரிவுபடக் கூற வேண்டிய அவசியமில்லை.” (ஆதாரம்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? பிஎஸ்ஆர் - பாரதி புத்தகாலயம்)இக்கட்டுரையாளரின் முன்னுரை யுடன் 2008ல் மறுபதிப்பான மேற்கண்ட பிரசுரத்தில், அக்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் நிலஉறவு, தீண்டாமைக் கொடுமை நிலச்சுவான் தார்களுக்கு அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் ஆதரவாக நின்ற விதம் போன்ற பல்வேறு அம்சங்கள் விளக்கப் பட்டுள்ளன. 1940களில் துவங்கி தஞ்சை மாவட் டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக் காகவும் நடைபெற்ற எண்ணற்ற போராட் டங்களில் தோழர் பி.எஸ்.ஆர். மகத்தான பங்காற்றியிருக்கிறார்.
அவருடைய மறைவிற்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தி யுள்ளது; நடத்தியும் வருகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக விளங் கிய தோழர் பி.எஸ்.ஆர். நாட்ட்டின் சுதந் திரத்திற்காகவும், நாடு விடுதலைப் பெற்ற பிறகும் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களுக்காகவும், தீண்டாமை ஒழிப் பிற்காகவும் நடந்த வீரம் செறிந்த சிறப்பு மிக்க போராட்டங்களில் முக்கியப் பங்காற் றியவர்.
அவர் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவருடைய நினைவு தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்கிறது.மிக நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதி யாகவே இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளில் பெற் றுள்ள வெற்றி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment