கந்தக மலர்கள்...- எஸ்.பி.ராஜேந்திரன்
சிரியா விவகாரத்தில் ராஜிய ரீதியான பேச்சுவார்த்தைகளே தீர்வு என்றும், ஈரானுடன் கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடிவு செய்திருப்பதாகவும், தமது வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி விரைவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஒபாமா, உலக நாடுகளின் தலைவர்களிடையே அறிவித்தார். மனித நேயம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் உலகத் தலைவர்களுக்கு அவர் ஒரு வகுப்பே எடுத்துவிட்டார்.
‘நாங்கள் தனித்துவம் மிக்கவர்கள்’ என்று சில வாரங்களுக்கு முன்பு சிரியாவை தாக்கும் வெறியோடு இதே ஒபாமா வாஷிங்டனில் பேசினார். அப்போது அமெரிக்க மக்களுக்கு எழுதிய திறந்த மடல் வாயிலாக பதிலடி கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின், ‘இறைவனின் படைப்பில் உலக மக்கள் அனைவரும் சமமே; தனித்துவம் மிக்கவர்கள் என்று எவரும் இல்லை’ என்று கூறினார்.
சிரியா மீது அமெரிக்காவின் வெறித் தாக்குதலை தடுக்கும் பொருட்டு, ரசாயன ஆயுதங்களை கண்காணிக்க ஒப்புக் கொள்வது என சிரியாவிடம் பேசி, அமெரிக்காவையும் நிர்ப்பந்தித்தது ரஷ்யா. உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிராக எழுந்த உணர்வலைகளையும், தனது சொந்த நாடாளுமன்றத்திலேயே எழுந்த கடும் எதிர்ப்பாலும் வேறுவழியின்றி சிரியா மீதான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது ஒபாமாவின் நிர்வாகம்.சிரியாவை தாக்குவதன் மூலம் ஈரானையும், அந்த போரில் இழுத்து அந்நாட்டையும் தாக்கி மிகப் பெரும் போராக மாற்றுவதே ஒபாமா நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது.
இதை உணர்ந்தே, ரஷ்யா உறுதியுடன் தலையிட்டது. நிர்ப்பந்தம் காரணமாக பின்வாங்கிக் கொண்ட அமெரிக்கா, சிரியாவுடன் மட்டுமல்ல, ஈரானுடனும் ராஜிய ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதே இப்போதைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த சிரியாவையும் கொடிய போர்மூலம் அழிக்கத் துடித்த ஒபாமா, ஐ.நா. சபையின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு திடீரென ஜனநாயகத்தையும், மனிதநேயத்தையும் பற்றி பேசியது மனமாற்றத்தின் காரணமாக அல்ல... உலகோரின் நிர்ப்பந்தம் காரணமாக!
ஆனால், மனிதநேயத்தையும், ஜனநாயகத்தையும் பற்றி பேசிய அதே ஒபாமா, ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப் பெரும் மிரட்டலையும் பகிரங்கமாக விடுத்தார்.“எங்களது அடிப்படையான நலன்களை மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் பாதுகாக்கும் பொருட்டு, எங்களது அதிகாரத்தின் அனைத்து அம்சங்களையும் பிரயோகிப்பதற்கு தயாராக இருக்கிறோம்; தேவைப்பட்டால் ராணுவத்தையும் பயன்படுத்துவோம். அந்தப் பிரதேசத்திலிருந்து எரிசக்தி என்பது தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே அடிப்படையானது” என்று ஒபாமா மிகத் தெளிவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தை இதே ஐ.நா. சபைக் கூட்டத்தில் முன்வைத்தார்.
உண்மையில் இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை சாராம்சம். இதைத்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதிகள் உலக மேடையில் முன்வைத்து வருகிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 1992ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததில் இருந்தே, தன்னை தட்டிக் கேட்க உலகில் எவரும் இல்லை என்ற அசாத்திய துணிச்சலோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா. பொதுச்சபைக்கூட்டங்களில் தனது போர்த் திட்டங்களை முன்வைத்து வருகிறது.ஐசநோவரிலிருந்து, ஜிம்மி கார்ட்டரிலிருந்து, சீனியர் புஷ், ஜூனியர் புஷ் என வளர்ந்து இன்றைக்கு ஒபாமா வரையிலும் ஒவ்வொரு ஜனாதிபதியும், எங்களது சொற்படி கேட்காவிட்டால் அடிப்போம் என்று பகிரங்கமாகவே ஐ.நா. கூட்டங்களில் பேசுகிறார்கள்.
வெறும் பேச்சு மட்டுமல்ல... லெபனான் மீது தாக்குதல், 1991ல் வளைகுடா யுத்தம், 2001ல் ஆப்கானிஸ்தான் யுத்தம், 2003ல் இராக் யுத்தம், 2010 - 11ல் லிபியா யுத்தம்... இன்னும் எண்ணற்ற நாடுகளில் கணக்கிலடங்காத குண்டுவீச்சு தாக்குதல்கள் - என இந்த ஜனாதிபதிகளின் ‘தனித்துவம்’ லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்திருக்கிறது.ஒபாமாவின் இன்றைய இனிப்பான பேச்சிலும், அந்தப் பயங்கரம் ஒளிந்திருக்கிறது. சிரியாவையும், ஈரானையும் தாக்காமல், அந்தநாடுகளின் எண்ணெய் வளங்களோடு ஒட்டுமொத்த வளைகுடா பிரதேசத்தையும், எண்ணெய் வளத்தையும் கைப்பற்றாமல் ஏகாதிபத்தியத்தின் லாபவெறி அடங்கி விடாது. போர் என்பது அமெரிக்காவை பொறுத்தவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடி கீழே வேகமாக விழுந்து முட்டிமோதி, அதே வேகத்தில் லேசாக எழும்போது பெரும் முதலாளிகளின் லாபம் மீண்டும் எழுவதுபோல இன்றைக்கு காட்சியளிக்கிறது. மீண்டும் மிக விரைவாகவே அந்த லாபம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும். அப்போது மீண்டும் சிரியா மீதும், ஈரான் மீதும் போர்ப் பிரகடனத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்க ஆளும் வர்க்க ஆயுத வியாபாரிகள் ஏற்படுத்துவார்கள்.அதுவரையிலும் ஒபாமா ஜனநாயகம் பற்றியும், மனிதநேயம் பற்றியும் பேசுவதற்கு அவர்களால் பணிக்கப்பட்டிருக்கிறார்.
என்றாலும், இவருக்கு முந்தைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஐ.நா. சபையில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு சென்றபோது, அடுத்த நிமிடம் அதே இடத்தில் நின்று உரையாற்ற வருகை தந்த வெனிசுலாவின் மறைந்த மகத்தான தலைவர் சாவேஸ், ‘கந்தகத்தின்நெடி வீசுகிறது’ என்று ஜார்ஜ் புஷ்சின் போர்வெறியை நேருக்கு நேர் கடுமையாக விமர்சித்தார்.ஜனநாயகம் - மனிதநேயம் என்ற மலர்களோடு உரையாற்ற வந்திருந்தாலும், ஒபாமா அவர்களே, அந்த மலர்கள் கந்தகத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட கொடூரமான மலர்களாகவே காட்சியளிக்கின்றன!
No comments:
Post a Comment