Tuesday, May 27, 2014

உலக பாரம்பரியச் சின்னம் பட்டியலில் சேர்க்க திட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் துறையினர் ஆய்வு



குழித்துறை, மே 27-உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 500 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. முழுவதும் தேக்கு மரத்தால் கட்டப்பட்ட இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள இடைகல் குகை ஆகியவை உலக பாரம்பரிய நினைவு சின்னங்களின் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை தயார் செய்து ஒப்படைக்கும் பணிக்காக கேரள கலா மண்டலம் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரேஷ் தலைமையில் சிறப்பு அலுவலர் எலிசபெத் மற்றும் ஊழியர்கள் கொண்ட தனிக்குழு கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை குறித்த விவரங்கள், படங்கள், வரைபடம் அடங்கிய ஆவணங்களை தயார் செய்யும் பணிகளை இந்தக்குழு தொடங்கியுள்ளது.
இப்பணிகளை இந்த குழுவினர் அரண்மனையில் தங்கியிருந்து மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்குமார் கூறுகையில், “கேரள அரசின் முயற்சியால் இந்த பணிகள் நடந்து வருகிறது. 5 மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்று ஆவணங்கள் தயார் செய்யப்படும். அதை தொடர்ந்து ஆவணங்கள் யுனெஸ்கோவிடம் தாக்கல் செய்யப்படும். மேலும் அரண்மனையின் முன் காலியாக உள்ள பகுதியில் டிக்கெட் கவுண்டர், வரவேற்பு அறை, காவலர் அறை, தகவல் மையம் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வுக்கான இடம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்

Wednesday, May 21, 2014

தோழர் ஆர். உமாநாத் தனிச்சிறப்புமிக்க கம்யூனிஸ்ட்
பிரகாஷ் காரத்

தோழர் ஆர்.உமாநாத் தனது 93வது வயதில் திருச்சியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். மார்க்சிய, லெனினிய கோட்பாட்டை முழு அர்ப்பணிப்புடன் ஆழ்ந்து பயின்று ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் எவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்ப்பவராக பரிணமிக்க முடியும் என்பதற்கு தோழர் உமாநாத் ஒரு தனித்துவம் மிக்க உதாரணமாகும்.ஆலைத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துபவராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் துவக்கிய ஆர்.உமாநாத். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னணித் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய 70 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை என்பது உழைக்கும் வர்க்க இயக்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக இருந்தது.
மார்க்சிய லெனினியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின்பாற்பட்டது அவருடைய இயக்க வாழ்க்கை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை ராஜதானியின் கீழிருந்த காசர்கோட்டில் கொங்கணி மொழி பேசும் குடும்பம் ஒன்றில் ஆர்.உமாநாத் பிறந்தார். கோழிக்கோட்டில் அவர் பள்ளிப்படிப்பு பயின்றுகொண்டிருந்த போது விடுதலைப்போராட்ட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் இடதுசாரி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அவரை ஈர்த்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உயர்படிப்புக்காகச் சென்ற அவர் அந்த வளாகத்தில் இயங்கி வந்த கம்யூனிஸ்ட் குழுவில் இணைந்தார். 1939ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ரகசியமாக இயங்கிவந்தபோது அவர் தனது கல்வியைத் துறந்து கட்சியின் உறுப்பினரானார். இந்த முடிவுதான் இளம் மாணவராக இருந்த அவரை போர்க்குணம் மிக்க புரட்சிகர போராளியாக மாற்றியது.
அன்றைய கம்யூனிஸ்டுகளைப் போன்று ஆர்.உமாநாத்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக்காலத்தில் அவர் தலைமறைவாகவும் வெளிப்படையாகவும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். கோயம்புத்தூரில் ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1948ம் ஆண்டு அவர் கோவை சிறையிலிருந்து தப்பினார். திருச்சியில் செயல்பட்ட ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் அவர் இணைந்து பணியாற்றினார். 1950களில் தமிழகத்தில் வலிமைமிக்க தொழிற்சங்கத் தலைவராக ஆர்.உமாநாத் உருவானார்.
தோழர் ஆர்.உமாநாத் கிளர்ச்சியூட்டக்கூடிய வகையில் உரையாற்றும் வல்லமைமிக்க மிகச்சிறந்த பேச்சாளர். தனித்துவமிக்க மூத்த தலைவரான தோழர் பி.ராமமூர்த்தி போன்று தோழர் ஆர்.உமாநாத்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுச்சிமிக்க பேச்சாளராக உருவானார். நான் கட்சியில் சேர்ந்த காலத்தில் தோழர் உமாநாத் கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் தொழிற்சங்கக் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகள் என்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962 மற்றும் 1967ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குழுவின் சார்பாக ஆற்றல்மிக்க தலையீடுகளை நிகழ்த்தினார்.
1977 மற்றும் 1980ல் தமிழக சட்டப்பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தைப் போன்றே சட்டமன்றத்திலும் அவருடைய செயல்பாடு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். கட்சி மையத்தில் இணைந்து பணியாற்றிய அவர், 1995ம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற 15வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். தொழிலாளர் வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு செறிவான அனுபவத்தைப் பெற்றிருந்த அவர், மார்க்சிய அணுகுமுறையை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்த்ததில் வல்லவராக திகழ்ந்தார். அவர், தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்க்கும் தலைவராகவும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் திறம்பட செயலாற்றும் தலைவராகவும் விளங்கினார்.
அவருடைய இந்த அனுபவம் கட்சியின் அகில இந்திய மையத்தில் ஸ்தாபன மற்றும் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் உதவியாக அமைந்தது.கட்சித்திட்டத்தை மேம்படுத்தும் பணியின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழுவில் நடைபெற்ற உள்கட்சி விவாதத்தில் அவருடைய பங்களிப்பு மகத்தானதாக அமைந்திருந்தது. 2000ம் ஆண்டில் கட்சித்திட்டம் மேம்படுத்தப்பட்டபோது அவருடைய மார்க்சிய ஞானம் பல்வேறு அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு பேருதவியாக அமைந்தது. உள்கட்சி விவாதங்களின்போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் அனுபவ அறிவோடும் வெளிப்படுத்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார். தனக்கு தவறென்று படும் விஷயங்களில் அவர் தன்னுடைய விமர்சனத்தை பகிரங்கமாக முன்வைப்பார்.
இந்த விமர்சனத்தால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அவர் கவலைப்படமாட்டார். அதேநேரத்தில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு செயல்பட்ட அவர் இத்தகைய விஷயங்களை கட்சி அமைப்புகளுக்கு வெளியில் ஒருபோதும் பேசமாட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மையத்தில் அவரோடு இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்குக்கிட்டியது. அனைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் மத்தியக்குழு உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை கவனமாக எடுத்துக்கொள்வார்கள். பல்வேறு சர்வதேச தேசிய அரசியல் நிகழ்வுகளில் உறுதியான வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
தோழர் உமாநாத் சொந்த அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர். தன்னுடைய கடைசிக் காலம் வரையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கட்சியிடம் முழுமையாக கொடுத்துவிட்டு கட்சி கொடுத்த ஊதியத்திலேயே வாழ்க்கையை நடத்தியவர். அவரும் அவரது துணைவியார் பாப்பா உமாநாத்தும் கட்சிக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள். கட்சியின் முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட இருவரும் தங்களது இல்வாழ்க்கையை அதற்கேற்பவே அமைத்துக்கொண்டனர். தங்களது மகள்களையும் அரசியல் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக வளர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் மே 15ம் தேதி திருச்சிக்குச் சென்று அவரை நான் சந்தித்தேன். அப்போது சுய நினைவுடன் அவர் இருந்தார். “உங்களைச் சந்திப்பதற்காகவே நான் திருச்சிக்கு வந்துள்ளேன்“ என்று அவரிடம் கூறியபோது புன்னகைத்த அவர், “ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன்“ என்ற பழமொழியை கூற நினைத்து “ஆபத்தில் உதவும் நண்பன்“ என்பதை மட்டும் கூறினார். நமது நேசமிக்க தோழரை இழந்து ஆழ்ந்த துயர் கொள்கிறோம். அதே நேரத்தில் தன்னிகரற்ற கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்த அவர் கட்சிக்கும், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் அளித்துள்ள மகத்தான பங்களிப்பை நினைவு கூர்கிறோம்.
தொழிலாளர்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர்
சிஐடியு தமிழ் மாநிலக்குழு புகழஞ்சலி!


தோழர் வி.பி.சிந்தனுடன் ஆர்.உமாநாத் (கோப்பு படம்)/ தோழர் ஆர்.உமாநாத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் செங்கொடி தாழ்த்திமூன்றுநாள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:சிஐடியுவின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவிற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.உமாநாத் என்ற உன்னதத் தலைவரின் பாதை, பயணம் ஒரு மகத்தான மனிதரின் ஜீவ சரித்திரம் ஆகும். நாட்டை ஆண்ட பண்டித நேரு, ராஜாஜி, காமராஜ், அண்ணா போன்ற தலைவர்களுக்கெல்லாம் தோழர் உமாநாத் நன்கு அறிமுகமானவர். கல்லூரி படிப்பின் போது சுப்ரமணிய சர்மா, பி.கிருஷ்ணப் பிள்ளை போன்ற தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வர்க்கப் போராட்டத்தை ஆலை யில், தெருவில், நடத்துவது எப்படி? சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத்தில், நீதிமன்றத் தில், சிறைச் சாலையில் நடத்துவது எப்படி? இவை அனைத்திலும் உமாநாத் சுடர்விட்டு பிரகாசித்தார்.தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக சிம்ம கர்ஜனை செய்த வர். பல தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டம் உதவியது. ஆலை பிரச்சனை முதல் உலக பிரச்சனை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் இவர் நிகரற்றவர்.
சக போராளியாக
உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சகபோராளியாக வாழ்ந் தவர். 1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகி யாகவும், முதல் மாநாட்டிலிருந்து மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் திறம்பட செயல்பட்டார்.உமாநாத் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவையாகும். இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என்று அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். உயிர்போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை.புதுக்கோட்டை கணபதி மில், நமன சமுத் திரம், புகளுர், டால்மியா சிமெண்ட் ஆலையில் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதுடன் பெரும் வெற்றியும் பெற்றன.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்று தந்ததில் தோழர் உமாநாத் பங்கு மகத்தானது.
சிரமங்களுக்கு மத்தியிலும்...
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் சட்ட சலுகை களையும், உரிமைகளையும் பெறுவதற்கு தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வழிகாட்டி, வெற்றி கரமான வேலை நிறுத்தங்களை நடத்தி காட்டியவர் தோழர் உமாநாத்.தொழிலாளர்களை திரட்டிட சென்ற உமாநாத்துக்கோ எல்லாமே சவால். பணம் கிடையாது. முழுநேர ஊழியர் சம்பளம் என்பது கிட்டதட்ட கிடையாது. படுக்கப் பாய் கூட பிரச்சனை தான். சாப்பாட்டு சிரமம் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட அரைப்பட்டினி. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் தொழிற்சங்கப் பணி வேகமாக நடந்தேறியது.
கடும் அடக்குமுறைகளை சந்தித்தவர்
சங்கம் உருவாவதை விரும்பாத முத லாளிகளும் - சுயநலமி சங்கங்களும் ரவுடிகளை ஏவி தாக்குதல் தொடுப்பது சர்வ சாதா ரண நிகழ்ச்சிகளாகிவிட்டன. போலீசாரும் முதலாளிகளுக்கும், ரவுடிகளுக்கும், துணை நின்றனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை, உணர்வுகளை, புரிந்து கொள்வது என்பது மிக சிரமம். அதற்கு அவர்களோடு பேச வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும். உமாநாத்திற்கோ ஆங்கிலமும், மலையாளமும் தெரியும். தமிழில் சரளமாக பேச வராது. தமிழ் தெரியாமல் உழைப்பாளிகளிடம் பணியாற்ற இயலாது. எனவே சுயகல்வி மூலமும், தொழிலாளர்கள் துணையுடனும் தமிழ் கற்க துவங்கினார். தோழர் கே.ரமணி விடுதலை ஆன பின் அவருடன் பங்கேற்ற ஆலைவாயிற் கூட்டங்களும், ஊழியர் கூட்டங்களும் உமாநாத்திற்கு தமிழ் பயிற்சி அளித்தன.செங்கொடி இயக்கத்தின் கடுமையான முயற்சியின் பயனாக கோவை நகரம், பாப்ப நாயக்கன் பாளையம், லட்சுமி மில், திருப்பூர் நகர மில்களில் செங்கொடி இயக்கம் வலுவாக வேரூன்றியது. இத்தொழிலாளர்களை வென் றெடுக்கும் பணியில் உமாநாத் தனியாளாக அல்ல: ஒரு படையாக செயல்பட்டார். முன்அனுபவம் ஏதுமற்ற உமாநாத் சுயமாக தொழி லாளர் பிரச்சனை, உணர்வுகள் இவற்றைக் கற்று ஊழியர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது பெரும் சாதனை!
காவேரி மில் போராட்டம்
புதுக்கோட்டை காவேரி மில்லில் கடும் வேலைப்பளுவால் உழைப்பாளிகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர். முதுகெலும்பு முறியும் வேலைப்பளுவால் நொந்து போயிருந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் கத வடைப்பு செய்தது. தொழிலாளர்கள் வெளியேற மறுத்தனர். அவர்களை வெளியேற்ற போலீஸ் ஆலைக்குள் நுழைந்தது. மோதல் உக்கிரமானது. தடியடி பலரின் மண்டையை பிளந்தது. கதவடைப்பை எதிர்த்து தொழிலாளி - விவசாயி சகோதர ஆதரவு திரட்ட உமாநாத் பம்பரமாக சுழன்றார். தினசரி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து அணிதிரட்டப்படாத பீடித் தொழிலாளர் மத்தியில் பணியாற்ற அவர் களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தது உமாநாத்தின் செயல்திறனுக்கு மெருகூட்டியது.
பண முதலைகளை எதிர்த்து வெற்றி
1962ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை வேட்பாளராக கட்சி நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார். 1977-80 பின்னர் 80-84 என இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் உமாநாத் தேந்தெடுக்கப்பட்டார்.திருச்சியில் தோழர் உமாநாத் பங்கேற்று வழிநடத்திய போராட்டங்கள் எண்ணி லடங்கா! ஒவ்வொன்றும் ஒருபாடம் சொல்லும். ஒவ்வொன்றும் ஒரு காவியமாகும். 1990ம் ஆண்டு கருணாநிதி முதல்வர். ஊர் வலம் போகக்கூடாது, உண்ணாவிரதம் இருக்கக்கூடாது, ஆள் அரவமே இல்லாத சுடுகாடுகள் பக்கம் தான் போராட்ட ஆர்ப் பாட்டங்களெல்லாம் என்று வம்பு செய்தது போலீஸ். இதை மீறுவது என்பது சிஐடியு முடிவு. அண்ணாசாலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சிஐடியு முடிவு. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக ஆதரவு அளித்தது.
செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
இத்தகைய நெடும்வரலாற்றுக்கு சொந்தமான தோழர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவு தமிழக தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல இந்திய உழைப்பாளி வர்க்கத்துக்கு பேரழிப்பாகும்.அன்னாரை பிரிந்து வாடும் மகள்கள் உ.வாசுகி, உ.நிர்மலாராணி உள்ளிட்ட குடும்பத் தினர் அனைவருக்கும் சிஐடியு தமிழ் மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 5, 2014

சாண்டர்ஸ் வழக்கு முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயரே இல்லை

புதுதில்லி, மே 5-பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பத்து மூன்று ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்குதொடர்பான ஒரிஜினல் முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.உண்மையில் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, வீரப்புகழ் பெற்றவிடுதலைப் போராளியான பகத்சிங் இவ்வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர் என்பதும், குற்றமற்றவர் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது பகத்சிங்கின் புகழை மேலும் பன்மடங்குஉயர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி, பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார். பகத்சிங் மேற்படி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர்சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள். உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கைஅனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாததுப்பாக்கி வைத்திருந்தவர்’ (‘unknown gunmen’)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இதில்முறையிடுபவரும் கண்ணால் கண்டசாட்சியுமாவார். அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை பின்தொடர்ந்ததாகவும், அவர்5 அடி 5 அங்குலம் உயரம் உடையவராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும்வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது.
குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தபோதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கவில்லை என்றும் கூறினார். குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்த வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். “சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன்’’ என்று அவர் கூறினார்.லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது. (ந.நி)
கையளவு செல்பேசி... கடலளவு கொள்ளை
என்.பகத்சிங்
இந்தியாவில் அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித்துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத்துறைகளிலும் தனதுஆக்டோபஸ் கரங்களை நுழைத்து கொள் ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின் குறியீடாக இங்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச்சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம் வாரியிறைக்கப்படுகிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப்பாடற்ற சுதந்திர போக்கு மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படுகிறது. இவர்களின் எதிர்பார்ப்பின்படி இம்முதலீடுகள் நாட்டை வளமாக்கவில்லை. மாறாக இந்திய அரசு அளிக்கும் அத்துனை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, சட்டவிரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்“ என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன விவகாரங்களை கொண்டே விளங்க முடியும்.
தமிழக அரசின் ஒப்பந்தம்
ஏப்ரல் 2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் நோக்கியாவிற்கும் மாநில அரசுக்குமிடையே ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2006ல் திமுக பதவியை பிடித்தது. ஒப்பந்தத்தை பொதுமக்களின் பார்வைபடாதவாறு காத்தது. “சிட்டிசன்ஸ் ரிசர்ச் கலெக்டிவ்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், மூன்றாண்டு போராட்டத்திற்கு பின் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை வெளியுலகின் பார் வைக்கு கொண்டு வந்தது. நோக்கியா என்ற ஆக்டோபஸின் கரங்களில் தமிழகம் சிக்கியுள்ளது அம்பலமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஏக்கருக்கு ரூ.3.75 லட்சம் என்ற கணக்கில் 210.87 ஏக்கர் சிப்காட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திற்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வீதம் கிட்டத்தட்ட ரூ.480 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது. இந்த குத்தகையை பதிவுசெய்வதற்கான 4 சதவீத முத்திரைத் தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்த துடன், தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலத்தை பிற நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும் நோக்கியாவிற்கு வழங் கியது தமிழக அரசு.நோக்கியா தனது செல்பேசியை உள்நாட்டில் விற்பனை செய்வதன் மூலம் செலுத்தும் வாட் வரியையும், மத்திய விற்பனை வரியையும், தமிழக அரசு திருப்பி செலுத்தும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய சலுகை.
செல்பேசி வாங்கும் இந்திய குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் அரசின் கஜானாவுக்கு போகாமல்,நோக்கியாவிற்கே திருப்பி விடப்பட்டுள் ளது. இச்சலுகையின் கீழ் 2005 முதல் 2011ம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.850 கோடிகளை தமிழக அரசு நோக்கியாவிற்கு தாரை வார்த்துள்ளது. மற்ற சலுகைகளையும் கணக்கில் சேர்த்தால் இதுவரை ரூ.2,500 கோடி அளவுக்கு மக்கள் பணத்தை தமிழக அரசு நோக்கியாவிடம் இழந்துள்ளது.
மைய அரசின் சலுகைகள்
தமிழக அரசின் சலுகைகள் ஒருபுறமிருக்க நோக்கியா நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்பட்டு வருவதால் மைய அரசு இந்நிறுவனத்திற்கு சுங்கவரி, உற்பத்தி வரி விலக்குகளை அளித்துள்ளது. இந்த வரி விலக்குகளின் மூலம் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.681.38 கோடிகளை மைய அரசு இழந்துள்ளது. இவை தவிர வருமான வரிச்சலுகை, ஏற்றுமதி வரிச்சலுகைப் போன்ற நேரடி சலுகைகளால் நோக்கியா தனதுமுதல் ஐந்தாண்டுகளில் மட்டும் அடைந்த மொத்த லாபம் ரூ.10ஆயிரம் கோடிகளுக்கும் மேல். நோக்கியா ஸ்ரீபெரும்புதூரில் தொழில் துவங்க போட்ட மொத்த முதலீடு வெறும் 650கோடிகள்தான் என்பதனை இச்சலுகை களோடு ஒப்பிட்டால் நோக்கியா அடித்திருக்கும் பகற்கொள்ளையின் பரிமாணம் நமக்கு பிடிபடும். இந்தக் கொள்ளையில் நோக்கியா தனது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையடித்ததை கணக்கில் கொள்ளவில்லை.
வர்த்தக நேர்மை
சாதாரண ஒரு சிறு வியாபாரியிடம் இருக்கும் வர்த்தக நேர்மை கூட நோக்கியாவிடம் இல்லை. இங்குஉற்பத்தி செய்யப்படும் கைப்பேசிகளில் 50சதவீதத்தை ஏற்றுமதி செய்ய வுள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நோக்கியா, உற்பத்தியின் 80சதவீதத்தை இங்கேயே சந்தைப்படுத்தியது. இந்த வர்த்தக பித்தலாட்டத்தால் ரூ.681.36கோடி சுங்க வரியாக வர வேண்டியது நோக்கியாவால் ஏமாற்றப்பட்டு மைய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
வரி ஏய்ப்பு
நோக்கியா நிறுவனம் ரூ.21 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்புசெய்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. இங்கு தயாரிக்கப் படும் செல்பேசிகளுக்கான மென் பொருளை பின்லாந்திலுள்ள தனது தாய் நிறுவனமான நோக்கியா கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. நோக்கியா இந்தியா, இப்படி இறக்குமதி செய்யும் மென்பொருளுக்கு அதற்கான விலை யோடு ராயல்டி தொகையும் செலுத்தி வருவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த ராயல்டி தொகை மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிகள், இதில் பத்து சதவீதம் வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரியை நோக்கியா கட்டவே இல்லை.
இந்த ராயல்டி வரிமட்டுமின்றி வெவ்வேறு இனங்களில் இந்திய அரசுக்கு சேர வேண்டிய ரூ.21 ஆயிரம்கோடிகளை வரி ஏய்ப்பு செய்து பின்லாந்திற்கு கடத்தியுள்ளது நோக்கியா. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக மைய அரசுக்கும், நோக்கியா இந்தி யாவுக்கு இடையே சட்டபோராட்டம் நடந்து கொண்டிருக்க, கம்பெனியை மைக்ரோ சாஃப்ட் என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்திற்கு மடைமாற்றி விற்றுவிட்டு கம்பி நீட்ட தயாரானது நோக்கியா.கடந்த டிசம்பரில் நோக்கியாவின் இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாற்றிவிட வேண்டு மென முடிவாகியிருந்த நிலையில், வருமான வரித்துறை தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு நோக்கியா இந்தியா நிறுவன சொத்துக்களை முடக்கியது.
இதற்கு பின்னரும் வரிபாக் கியை கட்ட நோக்கியா தயாராக இல் லை. ஒரு சொத்து என்ற முறையில் சென்னை ஆலைக்கு எந்த மதிப்பும் கிடையாது. நாங்கள் அந்த ஆலையின் பயன்பாட்டு உரிமையைத்தான் மைக்ரோசாப்ட்டுக்கு விற்கிறோம். அதனை பயன்படுத்துவதோ, கைவிடுவதோ மைக்ரோ சாப்ட்டின் விருப்பம், எங்கள் சொத்துக்களை விற்க எங்களுக்கு உரி மையுள்ளது. தடைகளை விலக்கினால் தான் சொத்துக்களை விற்கமுடியுமென வாதிட்டது. இறுதியில் தீர்ப்பு அதற்குச் சாதகமாகவே அமைந்தது.முடக்கப்பட்ட நோக்கியா நிறுவன சொத்துக்களை விடுவித்ததும் இடைக் கால தொகையாக ரூ.2 ஆயிரத்து 250கோடிகளை மத்திய அரசுக்கு செலுத்து வதோடு, முழுத்தொகையைச் செலுத் துவதற்கான வாக்குறுதியை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்படியொரு சமரச ஏற்பாட்டை செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கை பறிபோய்விடுமென சாக்கும் சொல்லப்படுகிறது. வரி ஏய்ப்பு, வியாபார பித்தலாட்டம், சுரண்டல், கொத்தடிமைத் தனம், கொலை, விபத்து என பலவித மான கிரிமினல் குற்றங்களை செய் துள்ள நோக்கியா இந்திய கைப்பேசி சந்தையில் 50 சதவீதத்தைத் தன்ன கத்தே கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. ஏய்த்த வரியை கட்டச் சொன்னவுடன் இந்தியாவில் தனக்கு நீதிமறுக்கப் பட்டதாக வாதாடுகிறது. இந்தியாவும் - பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின்படியும், இரட்டைவரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படியும் இந்த வரியை இந்திய தேசத்திற்கு கட்டத் தேவையில்லையென வாதிடுகிறது.இந்த சூழலில்தான் மைக்ரோ சாப்ட் என்ற பகாசுர நிறுவனத்திற்கு நோக்கியாவை 5.44 பில்லியன் யூரோ (சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்)வுக்கு மடைமாற்றிவிடப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்கள் லாப நோக்கில் ஒன் றையொன்று விழுங்குவது உலகமய நிகழ்ச்சி நிரலில் வெகு சாதாரணம். ஸ்டேட் வங்கி, எல்ஐசி போன்ற நிதியாதாரங்களை அதிகமாக கொண்ட இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பிற கம்பெனிகளையும், பங்குகளையும் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு களையும், தடைகளையும் போடும் மைய அரசு மைக்ரோ சாப்ட் போன்ற பன்னாட்டு பகாசுரர்களுக்கு மட்டும் பட்டுக் கம்பளம் விரித்து தாராளம் காட்டுகிறது.
பன்னாட்டு தொழிற்குழுமங்களை யும், அந்நிய முதலீடுகளையும் பட்டு கம்பளம், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் மத்திய அரசு, இரட்டை வரி தவிர்ப்பு, இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என புதுப்புது பெயர்களில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஏறத்தாழ 80 நாட்டு நிறுவனங்களுடன் போட்டு வைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் எல்லாவகையான பாதுகாப்புச் சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யுமளவுக்கு ஷரத்துக்களை உள்ளடக்கியது. அந்நிய முதலாளிகள் இந்தியாவை சூறையாட கொடுத்த லைசென்சாகவும் உள்ளது.நோக்கியா போன்ற நிறுவனங்கள் இந்தளவுக்கு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதை அரசு கைகட்டி வேடிக்கையே பார்த்துள்ளது.
இந்திய திருநாட்டையும், உழைப் பவன் உரிமைகளையும் பாதுகாக்க கார்ப் பரேட்டுகளின் கொள்ளை இலாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, மதவாதத்திற்கு எதிராக கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து உழைப்பவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என இம் மேதினத்தில் சபதமேற் போம்.
கட்டுரையாளர் : சிஐடியு, மாநில பொதுச்செயலாளர்
பேராவூரணி, மே 5 -பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க, பெருமுதலாளிகள்,நிலச்சுவான்தார்கள் ,ஜமீன்தார்கள் அதிகாரத்திலும் , ஆணவத்திலும் மிதந்து ,பாட்டாளிகளை கொடுமைப்படுத்தி வந்த காலம் ....ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் போர்க்குரலாக பொதுவுடமை இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வந்தன.
ஒரு கட்டத்தில் இயக்கங்கள் தடை செய்யப்பட தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு மக்கள் நலப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருக்கு எதிராக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.துரோகிகளால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஜாம்புவானோடை சிவ ராமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மணலி கந்தசாமி தலைமறை வாக இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆசை வார்த்தை காட்டியபோது, தெரியாது என மறுத்துவிட்டார். நீ ஓடி தப்பித்து போய் விடு என காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, `சிவராமன் தப்பி ஓடினான். சுட்டுக்கொன்றோம் என்று சொல்வாய். நான் ஒன்றும் கோழை அல்ல. தப்பி ஓட... என்று கூறி நெஞ்சில் சுட்டா... ஏவல்துறையே... என்று கூறி நெஞ்சில் குண்டு தாங்கி வீரமரணத்தை தழுவினார் தியாகி ஜாம்புவானோடை சிவராமன் .ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு கிராமத்தில் பிறந்த வீரத்தியாகி ஆறுமுகம். அப்பகுதியில் செங்கொடி யை சுடர்விட்டு பிரகாசிக்க பெரும்பங் காற்றினார். அதிகார வர்க்கம் செங் கொடியை, கம்யூனிச இயக்கத்தை, அதன் விவசாய சங்கத்தை அழிக்க திட்டம் தீட்டி சமயம் பார்த்து காத்திருந்தனர்.மதுக்கூரை அடுத்த வாட்டாகுடியில் பிறந்த வீரத்தியாகி இரணியன் மலேசிய தேசத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்.
மலேசியாவில் பிரிட்டிஷ் அரசு இரணியனை தேடத்தொடங்கியதும் தமிழகத்திற்கு தப்பி வந்த இரணியன் மறவக்காடு கிட்டு போன்ற தோழர்களுடன் இணைந்து இப்பகுதியில் இயக்கத்தை கட்டி எழுப்பினார். ஏழை-எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசு ஜமீன்தார்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது.ஜமீன்தார்கள், நிலச்சுவான் தார்கள், அவர்களின் அடிவருடி கள் செல்வச்செழிப்பில் கொழிக்க, நாளெல்லாம் கழனியில் பாடுபடும் உழைப்பாளியோ பசியும் பட்டினியு மாகக் கிடந்து பெரும் சித்ரவதை அனுபவித்து வந்தனர். அவர்களுக்காக போராடி வந்த இரணியனை காவல்துறை தேடி வந்தது.இந்நிலையில் வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகிய இருவரும் துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டனர் , வடசேரி சவுக்கு காட்டில் வைத்து காவல்துறையால் கட்டி வைத்து சுடப்பட்டனர்.
புரட்சி ஓங்குக...செங்கொடி வாழ்க என வீரமுழக்கத்தோடு இருவரும் வீரமரணத்தை தழுவினர் .இந்த மூன்று வீரத்தியாகிகளும் பட்டுக்கோட்டை கரிக்காட்டில் அந்த காலகட்டத்தில் காவல்துறையால் தகனம் செய்யப்பட்டனர் .அந்த வீரத்தியாகிகள் மூவரின் 64 வது நினைவு தினத்தையொட்டி மே 5