Saturday, September 21, 2013

சென்னையை எம்டன் தாக்கிய நூறாம் ஆண்டு


எம்டன் கப்பலில் பணியாற்றிய இந்தியர் தியாகி செண்பகராமன் /1914 செப்டம்பர் 22 அன்று எம்டன் கப்பலால் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள்சென்னை துறைமுகத்தில் எரிந்த காட்சி / சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாசலில் வைக்கப்பட்டுள்ள எம்டன் கப்பல் தாக்கிய நினைவு கல்வெட்டு
1914ம் ஆண்டின் செப்டம்பர் 22 நவராத்திரியின் மூன்றாம் நாள். காலைப்பொழுதில் சென்னை நகரின் வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்கப்படும் நேரம் அது.
நடந்து வரும் முதலாவது உலக யுத்தம் பற்றிய செய்திகள் மக்களின் உதடுகளில் அரைபட்டுக் கொண்டிருந்தன. மாலையில் கொலு பார்க்கச் செல்லும் பெண்களும் சிறுமிகளும் பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். மவுண்ட் ரோட்டில் இருந்த பிரபலமான மோசஸ் அண்ட் கம்பெனி ஐரோப்பா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உல்லன் கோட்டுகள் மற்றும் உள்ளாடைகள் பற்றிய விளம்பரத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணி இருபதாம் நிமிடத்தில் சென்னை நகரம் பெரும் நடுக்கத்துக்குள்ளாகியது.முதலாம் உலகப்போரின் போது 22 - 9 - 1914ம் ஆண்டில் ஜெர்மன் யுத்தக்கப்பல் எம்டன் சென்னை துறைமுகத்தை தாக்கியது. அமைதிப்பூங்காவாக இருந்த சென்னையில் வாழ்ந்த மக்கள் பீதியடைந்தனர். நாளொன்றுக்கு இருபதாயிரம் பேர் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் கூறின.
இவன் பெரிய எம்டண்டா என்று சர்வசாதாரணமாக ஊரை ஏமாற்றி திரியும் பேர்வழிகளை அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் அன்று முதல் புழக்கத்துக்கு வந்தது. சென்னை நகரைத் தாக்கிய கப்பலில் தியாகி செண்பகராமன் பணியாற்றி வந்தார் என்று வரலாறு கூறுகிறது. காந்தி மண்டபம் அருகில் செண்பகராமனின் நூறாவது பிறந்த நாளையொட்டி, அவருடைய நினைவாக நிறுவப்பட்ட சிலையை 1991ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.ஜெர்மனியில் உள்ள எம்டன் நகர மக்கள் நன்கொடையாக அளித்த போர்க்கப்பலுக்கு எம்டன் அந்த நகரத்தின் பெயரே சூட்டப்பட்டது. 3600 டன் எடையுடைய இக்கப்பலில் 22 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. நாகம் அழகாக இருக்கிறது என்று கூறுவது போல் இதுவும் அழகாக இருந்தது.
ஜெர்மனியின் எதிரிகளான பிரிட்டிஷார் கூட இக்கப்பலை ‘கிழக்கத்திய அன்னம்’ என்று வர்ணித்தார்கள் எம்டன் கப்பலின் தலைவன் வோன் முல்லர் சென்னை தாக்கப்பட்டது குறித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். வர்த்தகக் கப்பல்களை அழிப்பதற்காக இக்கப்பல் கிழக்கத்திய கடலில் வலம் வந்தது. எந்தவொரு எதிர்ப்பும் சிரமமும் இன்றி பிலிப்பைன்ஸ் கடல் வழியாக வங்காள விரிகுடாவில் நுழைந்த எம்டன் சென்னை கடற்கரையை நெருங்கியது. பிரிட்டிஷ் கப்பல்கள் போன்று நான்கு புகைபோக்கிகளுடன் அது இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
நான்காவது புகைபோக்கி வோன் முல்லரின் வியூகத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைபோக்கியாகும். இரண்டு எண்ணெய்க் கப்பல்களை தகர்த்த பின்னர் அது வேடிக்கையாக நகரை நோக்கி சுட ஆரம்பித்தது. பழைய கலங்கரை விளக்கத்தின் மின்கலம் அருகே நின்று எம்டன் கப்பல் குண்டு வீசுவதை பார்த்த தி இந்தியன் ரிவியூ பத்திரிகையின் செய்தியாளர் டி.ஸ்காட் பீரங்கி குண்டுகளின் துகள்களும், உலோகக்குண்டுகளும், பூந்தமல்லி ஹைரோடு, சூளைமேடு, காசா மேஜர் சாலை, நுங்கம்பாக்கம் வரை சிதறிக் கிடந்ததாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட் டிரஸ்ட் கட்டிடம், மெட்ராஸ் செயிலிங் கிளப்பின் போட் ஹவுஸ், புதிய நேஷனல் பேங்க் ஆப் இந்தியா கட்டிடத்தின் முகப்பு ஆகிய இடங்களில் குண்டுகளின் சிதறல்கள் கிடந்தன. வெடிக்காத சில குண்டுகளும் சிதறிக் கிடந்தன. மொத்தத்தில் மூன்று பேர் மடிந்தனர். பதின்மூன்று பேர் காயம் அடைந்தனர். மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் குண்டுவீச்சு பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒருவேளை பிரிட்டிஷ் அரசு செய்திகளை வெளியிடக்கூடாது என்று தடை விதித்திருக்க வேண்டும். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவத்தொடங்கின. எம்டன் கப்பல் மீண்டும் நகரைத் தாக்கக்கூடும் என்று நகரெங்கும் பேசப்பட்டது. மக்கள் உறக்கமின்றித் தவித்தனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற முடியாதவர்கள் பேருந்துகளிலும், மாட்டுவண்டிகளிலும் நகரை விட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். மாநில ஆளுநர் பெண்ட்லாண்ட் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவர் குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். எம்டன் குண்டு வீசிய மூன்றாம் நாள் அதாவது செப்டம்பர் 25 அன்று சென்னை வந்திறங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். மத்திய மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தார். காலை பத்தேகால் மணிக்கு அவர் தனது மாளிகைக்கு திரும்பி விட்டார். ஓரிரு நாட்கள் கழித்து அவர் ஊட்டி திரும்பிவிட்டார்ஆனால் எம்டன் பற்றிய உண்மைச்செய்திகளுக்கு கூட காதும் மூக்கும் வைத்து அதை ஒரு அசுரனாக சித்தரிக்கும் செய்திகள் நாடெங்கும் பரவின.
கோகோஸ் தீவுகள் அருகே கடல் கேபிள்களை சீரழிக்க முயன்ற எம்டன் கப்பலை ஆஸ்திரேலிய போர்க்கப்பல் சிட்னி நேருக்கு நேர் எதிர்த்தது. கடுமையான சண்டைக்கு பின் எம்டன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இச்சம்பவம் நவம்பர் ஒன்பது அன்று நடந்தது. சென்னை நகருக்கு இத்தகவல் நவம்பர் 11 அன்று கிட்டியது. நகரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

No comments:

Post a Comment