Friday, July 25, 2014

கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் பட்ஜெட்
பி.ராஜீவ் எம்.பி.


பட்ஜெட் உரையில் முதல் வரியிலேயே நிதி அமைச்சர் அவர்கள் `மாற்றம்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தார். ஆனால் அந்த வார்த்தைக்கு எந்த உட்பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐமுகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் தேஜகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அதனால்தான் ஆனந்த சர்மாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் எங்கள் பட்ஜெட் பாணியில்தான் இதுவும் இருக்கிறது என்கின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதே தொனியில் இவர்களைப் பாராட்டியிருக்கிறார். காங்கிரஸ் சார்பான ஐஎன்டியுசி சங்கம் ஐமுகூ சமர்ப்பித்த பட்ஜெட்டையும் விமர்சித்தது. பாஜகவுடன் நெருங்கிய உறவுகொண்டுள்ள பிஎம்எஸ் சங்கம், இப்போது ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளது. குடியரசுத் தலைவர் உரையின்மீதான விவாதத்தின்போது சீத்தாராம் யெச்சூரி சரியாகச் சுட்டிக்காட்டியதைப்போல இடைமாற்று ஓட்டப் பந்தயத்தில் குறுந்தடியை வாங்கிக்கொள்வதைப் போல பாஜக, காங்கிரசிடமிருந்து குறுந்தடியை வாங்கிக் கொண்டுள்ளது. இப்போது காங்கிரசார் ஓடியதைவிட வேகமாக இவர்கள் ஓடிக்கொண் டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு அவர்களைவிட மிக வேகமாக சலுகைகளை வாரி வழங்கிட முன்வந்திருக் கிறார்கள்.
அதேபோன்று அவர்களைவிட மிகவும் அதிகமான அளவில் மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தநிலை. நம் ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம் மிகவும் சுருங்கிவிட்டது. ஜனநாயகத்தில், தேர்தல்களில் மக்கள்ஓர் அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவருக்கு வாக்களிப்பார்கள். அந்த அரசியல் கட்சி ஒரு சித்தாந் தத்தை மற்றும் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் இப்போ துள்ள நிலை என்ன? இருவருமே ஒரேவிதமான கொள்கைகளையே பிரதிபலிக் கிறார்கள். இதுதான் இன்று நம் நாட்டில் ஜனநாயகத்தின் நிலை.இருந்தாலும் ஐமுகூ பட்ஜெட்டின் மீது சில காவி ஒப்பனைப் பொருள்களை சேர்க்க ஜெட்லி முயற்சித்திருக்கிறார். தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு “காவி உதட்டுச்சாயத்துடனான ஒரு சிதம்பரம் பட்ஜெட்’’ என்று மிகச்சரியாகவே ஒரு நல்ல தலைப்பை பட்ஜெட்டுக்குக் கொடுத்திருக்கிறது. அதனை பட்ஜெட் முழுவதும் பார்க்க முடிகிறது.
பிரதமர் அவர்களும், இதர அமைச்சர் களும் சீன மாடல் குறித்து எப்போதும் பேசுகிறார்கள். சீன மாடலின் அனுபவம் என்ன? பொது முதலீடுகளின் மூலம்உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் நாம் நிதி நெருக்கடிக் கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நான் இந்த நிதி நெருக்கடி மந்திரத்திற்கு முற்றிலும் எதிரானவன். வருவாய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால் நிதிப் பற்றாக்குறை குறித்து என்ன? நாம் நம் பணத்தை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத் தினால், அது வேலைவாய்ப்பை அதி கரித்திடும். மக்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். அவற்றின்மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். அதனால் உள்நாட்டில் சந்தையில் தேவைகள் அதிகமாகும். தேவைகள் அதிகமாவதால் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் மேலும் பெருகும். மக்களிடம் பணம் தாராளமாகப் புழங்கும். இது பொருளாதாரத்திற்கு ஓர் உந்துசக்தியைத் தந்திடும்.
ஆனால், இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் நிதிநெருக்கடி மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருந்தீர்களேயானால், அதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அதிக சலுகைகளை அளிப்பீர்களேயானால், அது நாட்டிற்குப் பயன்படாது. வருவாயைப் பெருக்கிட எவ்வித நடவடிக்கையும் இல்லை. முந்தைய நிதியமைச்சர் இந்த அவையில் கூறியபதில் ஒன்றில் 5.10 லட்சம் கோடிரூபாய்க்கும் மேலான வரி வசூலிக்கப்பட வில்லை என்றார். நிதி நெருக்கடி எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு இதுவும் இருக்கிறது. இந்த வரி பாக்கியை வசூலித் திருந்தார்களானால், நிதி நெருக்கடி வந்திருக்காது. ஆனால் அதனைச் செய்யாது நிதி நெருக்கடியைக் காரணம் சொல்லி மானியங்களை வெட்டுகிறார்கள், அனைத்துச் செலவினங் களையும் வெட்டுகிறார்கள். இவ்வாறு வசூலிக்காத வரி பாக்கியில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை குறித்து எவ்வித பிரச்சனையும் கிடையாது. ஆயினும் அரசின் சார்பில் வசூலிக்கத் தயங்குகிறார்கள். வரி பயங்கரவாதம்பிரதமரும் நிதி அமைச்சரும் வரி பயங்கரவாதம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனந்த் சர்மா கூட வரி பயங்கரவாதம் குறித்து குறிப்பிடு கிறார்.
வரி பயங்கரவாதம் என்பதற்கான வரையறை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் பொருள் என்ன? இவர்களின் கருத்தை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன். நம் நாட்டில் மொத்த வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி (கூயஒ-ழுனுஞ சயவiடி) விகிதாச்சாரம் கிட்டத்தட்ட 10 சதவீதம் மட்டுமே.இங்கிலாந்தில் இது 26.9 சதவீதம். நார் வேயில் இது 27.3 சதவீதம். டென்மார்க்கில் 34.1 சதவீதம். பெல்ஜியத்தில் 25.7 சதவீதம். ஒரு சதவீதத்தை நாம் உயர்த்தினோம் என்றாலும் நமக்கு கஜானாவிற்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் வரும். நாம் நம்முடைய வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரத்தை இங்கிலாந்துக்கு இணையாக மாற்றியமைத்தோமானால் நம் கஜானா விற்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்கூடுதலாக வரி வருவாய் கிட்டும். நார்வேக்கு இணையாக மாற்றியமைத் தோமானால் கூடுதலாக 30 லட்சம் கோடிரூபாய் கிடைக்கும். இது வரி பயங்கர வாதமா?
பட்ஜெட் ஆவணங்களில் காணப் படும் மற்றோர் உண்மை. வரி தொடர்பாக ரிடர்ன்ஸ்( tax returns)தாக்கல் செய்துள்ள 6 லட்சத்து 18 ஆயிரத்து 806 கம்பெனிகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 069 கம்பெனிகள் ஒரு காசு கூட வரியாக செலுத்தவில்லை. இணையதளம் மூலம் அமேசான் அல்லது ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் உங்களுக்கு ஏதேனும் வரி செலுத்துகின்றனவா? சொத்துவரியை எடுத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இது மொத்த வரி வருவாயில் 0.40 சதவீதம் மட்டுமே. பிரிக்ஸ் நாடுகளின் சராசரி 4.85 சதவீதம். ஜி-20 நாடுகளின் சராசரி 7.6 சதவீதம். இது வரி பயங்கரவாதமா? உண்மையில் வரி பயங்கரவாதம் என்ற பெயரில் இவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவத்தான் இச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்தபோது கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.
அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றின. ஆனால் பின்னர் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சராக வந்தபோது பார்த்தசாரதி ஷோம் என்பவர் தலை மையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துநாடாளுமன்றத்தின் இரு அவை களும் இயற்றிய சட்டத்தை ரத்து செய்துவிட்டார். கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றுகிறது. 2008ம் ஆண்டு கொண்டு வந்த இச்சட்டத்தை 1987ம் ஆண்டிலிருந்தே நடைமுறைப் படுத்துகிறது. அவர்கள் செய்யும்போது, நாம் ஏன் செய்யக்கூடாது? இப்போது இதை அருண்ஜெட்லியும் செய்யத் தயாரா யில்லை. பின்னர் எப்படி வரி பயங்கரவாதம் என்று கூறுகிறீர்கள். உண்மையில் இவ்வாறு நீங்கள் கூறுவதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் சலுகை களை வாரி வழங்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாகும். பட்ஜெட் ஆவணங்களின்படி கார்ப் பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 922 கோடி ரூபாய் ரத்து செய்திருக்கிறீர்கள். இது அரசின் நிதிப்பற்றாக்குறை தொகை யைவிட அதிகமாகும்.
இவ்வாறு இவர் களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வரிச்சலுகை என்பது 36.5 லட்சம் கோடி ரூபாய்களாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள போதிலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளில் 5 சதவீதம்தான் கூடியிருக்கிறது அல்லது 15 சதவீதம்தான். 1991க்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அனைத்து அரசாங்கங்களும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவான ஒன்று.
பட்ஜெட் மீதான விவாதத்தில்பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து.

Sunday, July 20, 2014

ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...
சு.பொ.அகத்தியலிங்கம்
சென்ற பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி என்சிஇஆர்டி ஸசூஊநுசுகூ] அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி.ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.
அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்: புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)அ.மார்க்ஸ், எழுதிய ‘ஆட்சியில் இந்துத்துவம்‘, நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் இவை .
தகுதியற்ற நியமனம்
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார். பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல. சென்ற முறை பி.ஆர்.குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர்மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
ICSSRஅமைப்பின் தலைவராக பி.எல்.சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதிய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHRல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி. சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு - ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:
“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”
இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு? வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:”அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென” இந்த விவரங்களை முகநூலில் அ.மார்க்ஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அவுட்லுக்கில் வித்தியாசமான கட்டுரை ஒன்று படித்தேன். நான் புரிந்து கொண்டது இது. என்கிற குறிப்புடன் விபாவி என்பவர் ஹைதராபாத்திலிருந்து எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு”நாங்கள் 68 கறிக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு கொண்டோம்.அவர்கள் அனைவருக்கும் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பணம் கொடுக்க முயன்று வருகிறோம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பலித்னாவில் (Palitana) இனிமேல் கறிவெட்ட மாட்டோம் என்ற உறுதிப்பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டியதுதான்” என்று சொல்கிறது அங்குள்ள ஜைன அடிப்படைவாத அமைப்பு.ஏனென்றால் பலித்னா ஜைனர்களின் புனிதஸ்தலம். 24 தீத்தங்கரர்கள் தரிசித்த மலை. சத்ருன்ஜேயா மலையில் மட்டும் 3000 ஜைன கோவில்களும், 27000 சிலைகளும் இருக்கின்றன. எங்கள் புனித நகரத்தில் ஏன் இப்படி உயிர்வதை செய்கிறீர்கள் என்பது அவர் வாதம்.
வெங்காயம், பூண்டையும் எதிர்த்தால்...
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். பலித்னா நகரம் எங்களுக்கும் சொந்தம். நாங்கள் 25 சதவிகிதம் இருக்கிறோம். எங்கள் உணவு பழக்கம் மாமிச உணவு உண்பது. நீங்கள் யார் எங்கள் உரிமையில் தலையிட”. இது பலித்னா நகரத்தில் வாழும் முஸ்லிம்களின் பதில்.கோவிலைச் சுற்றி 250 மீட்டரில் கறிவெட்டக்கூடாது, உண்ணக்கூடாது என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இந்த ஜைனர்கள் நகரத்தை தங்கள் வீடாக்கப் பார்க்கிறார்கள்.இது தவறான உதாரணம் ஆகிவிடும். இன்று பலித்னாவில் கறி சாப்பிடுவதை எதிர்க்கும் ஜைனர்கள் நாளை வெங்காயம், வெள்ளைப் பூண்டையும் எதிர்த்தார்கள் என்றால் அதையும் சாப்பிடக்கூடாதா? இது என்ன அநியாயம். இது சமூக ஆர்வலர்களின் குரல்.பலித்னா இருப்பது குஜாரத்தில். பாஜகவின் அமித் ஷா ஒரு ஜைனர்.
அதனால் பலித்னா ஜைனர்கள் அவர்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் அங்குள்ள முஸ்லிம்கள்.குஜராத் சைவ மாநிலம் என்பது மாதிரியான தகவல்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. 68 சதவிகித, அதாவது எழுபது சதவிகித குஜராத் மக்கள் மாமிசம் உண்பவர்கள் தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என்கிறார் இன்னொரு சமூக ஆர்வலர்.இதற்கு அவரால் முடிந்த ஒரு வழியைச் சொல்கிறார் எழுத்தாளர் ரேணுகா நாராயணன். இசைக்கலைஞர் ”உஸ்தாத் பதே குலாம் அலிகான்” சென்னை வந்தாராம். வந்தவர் எம்.எல் வசந்தகுமாரியின் வீட்டில்தான் தங்குவேன் என்று ஹோட்டலை மறுத்து எம்.எல்.வியின் வீட்டுக்கு வந்தாராம். எம்.எல் வசந்தகுமாரி சைவம்.
ஆனால் அலிகானோ மாமிச உணவில் ஈடுபாடு உடையவர். எம்.எல். வசந்தகுமாரியின் கணவர், சொன்ன யோசனைப்படி உஸ்தாத் பதே குலாம் அலிகான் மாடி போர்ஷனில் சாப்பிட்டுக் கொண்டாராம். சென்னையிலுள்ள பிரபல மிலிட்டிரி ஹோட்டலில் இருந்து அசைவ உணவு போகுமாம்.இதுமாதிரி பலித்னாவிலும் மக்கள் அட்ஜஸ்ட் செய்து போனால் நல்லது என்று சொல்கிறார் எழுத்தாளர்.
வயிற்றிலடிப்பது
இங்கே சில இந்து அமைப்புகளும் மதவெறியர்களும் கோவிலிருக்கும் ஊரில் கறிக்கடை வேண்டாம் ; கோவிலுக்கு போகும் முன்பும் பின்பும் அசைவ உணவு கூடாது என்கிறார்கள். கூடவே ஒரு நாளும் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஒரு நாளும் கறி, மீன் சாப்பிடக்கூடாது என்பதுதானே! இது உழைப்பாளிகள் வயிற்றிலடிக்கும் செயல் அல்லவா ? இதனைத் தொடர்ந்து நான் முகநூலிலிட்ட பின்னோட்டம்
“கோவிலருகே இறைச்சிக்கடை கூடாதுகோவிலுக்கு போகும்போது இறைச்சி வேண்டாம்மனம் உருக வேண்டினார் உபதேசிகண்ணப்பரின் சிவனைஎப்போது நாடுகடத்தினீர் ?ஏழை பக்தனின் எளிய கேள்வி...”
அது இருக்கட்டும் இந்த அமித் ஷா மீது இப்படி நம்பிக்கை வைப்பது இவர் மட்டுமா ? இல்லை. பஞ்சாபில் சீக்கியர்கள் மனமுவந்து முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுக்கிற படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள சுப்பிரமணியன் சாமி அதில் குறிப்பிட்டிருக்கிறார் அமித் ஷாவை பஞ்சாபுக்கு அனுப்பி இவனுகளை திருத்த வேண்டும். என்கவுண்ட்டர் புகழ் - கலவர புகழ் அமித் ஷா என்ன பணி செய்யப் போகிறார் என்பதற்கு இது அறிகுறி. அமித் ஷா சைவ உணவு பழக்கம் உள்ளவர் .
சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மென்மையானவர்கள், அகிம்சாவாதிகள் என கூறுவோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கொலைவெறிக்கு காரணம் உணவு அல்ல; வெறிவுணர்வு என்பதறிக! சமஸ்கிருதத்தை எல்லாமொழிக்கும் தாயென்பதும்இந்தியை திணிப்பதும் இன்னொரு தாக்குதல் . உணவு , மொழி , வரலாறு அனைத்திலும் ஒற் றைப் பண்பாட்டு ஆதிக்க திணிப்பு-பிராமணிய ஆதிக்கப் பண்பாட்டுத் திணிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கிறது நாம் எதிர்கொள்ளும் சவால் கொஞ்சமல்ல என்பதுணர்க !

Sunday, July 13, 2014

சூதாட்டக் களமாகும் தேசம்



ஊடகங்களின் அர்த்தமற்ற ஆரவாரங்களுடன் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விவாதம் என்ற பெயரில் கேலிக்கூத்துகள் அநேக தொலைக்காட்சி சேனல்களில் அரங்கேறியுள்ளன. உண்மையில் மோடியின் பட்ஜெட்டின் தன்மை என்ன, உழைப்பாளி மக்களையும் நாட்டையும் அது எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா...
மோடிஅரசின் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக பன்னாட்டுநிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாகஉயர்த்தும். காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்யும். இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும். அது மட்டுமின்றி, இப்படிசெய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.
பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்தினால், பல ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தி செய்ய பன்னாட்டு மூலதனம் வரும் என்ற பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் அப்படியே வந்தாலும், தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அவை கொடுக்கும் என்றஉத்தரவாதமும் கிடையாது. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் தேசப்பற்று உள்ளஅனைவரும் எதிர்க்க முன்வரவேண்டும்.
வங்கிகள் நாசமாகும்
மற்றொரு அபாயகரமான முன்மொழிவு ஒன்று பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் கூறுகிறது. முதலில், பன்னாட்டு நிதியம் முன்மொழியும் பாசில் நெறிமுறைகள் (க்ஷயளடந சூடிசஅள) அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அடித்தளம் அமைய வேண்டுமா என்பதே சர்ச்சைக்கு உரிய பிரச்சனை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளாக இருப்பதால் இவை வாடிக்கைதாரர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளன.
கடந்த காலங்களில், இந்தியன் வங்கி போன்ற வங்கி களைப்பற்றி தனியார் வங்கி ஆதரவாளர்களும் ஊடகங்களும் பெரும் பீதியைக் கிளப்பிவிட்ட போதும்மக்கள் தொடர்ந்து தங்கள் சேமிப்புகளை பொதுத்துறை வங்கிகளில் தான் கொண்டுசேர்த்தனர். கடனை திருப்பித்தராமல் மோசடி செய்யும் சில பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் அரசு நிர்ப்பந்தத்தில் கடன் தரும் நடவடிக்கையால் சில வங்கிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் கூட, பொதுத்துறை வங்கிகள் இன்றும் பொதுமக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே உள்ளன. அப்படியே இந்த வங்கிகளின் மூலதன அடித்தளத்தை உயர்த்த வேண்டும் என்று கருதினால் அதை அரசே மூலதனம் அளித்து செய்ய வேண்டும். சாதாரண மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயரில் விற்கப்பட உள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் அவர்கள் நேரடி பொதுத்துறை வங்கி உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற கவர்ச்சிகரமான ஆனால் தவறானவாதத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
உண்மையில் இவ்வாறு பொது மக்கள் வாங்கும் பங்குகள் அவர்கள் கையில்நிலைத்து நிற்காது. அவர்கள் விற்கும் பங்குகளை பெருமுதலாளிகள் வாங்கி காலப்போக்கில் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் செல்வாக்கு ஓங்கும். பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதுதான் அரசின் உண்மையான நோக்கமும் கூட. எனவே இதுவும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அம்சம் ஆகும்.
வெற்று அறிவிப்புகள்
நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. இவைபட்ஜெட்டில் இடம் பெறாது. எடுத்துக்காட்டாக, வேளாண் துறைக்கு வங்கிகள் மூலம் எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன்அளிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான். இது அரசின் வரவு-செலவு-தொடர்பான விஷயம் அல்ல. மேலும் இப்படி கடன்கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. செலவு மேலாண்மை ஆணையம் ஒன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு பற்றி தெளிவு எதுவும் இல்லை. இப்படி ஏராளமான ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறாத பெரிதும் சிறிதுமான அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அமைச்சர் அள்ளி வீசிஉள்ளார்.
அவைஅனைத்தையும் பற்றி இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த அறிவிப்புகளை அமலாக்கும் பொழுதுதான் அவற்றின் விளைவுகள் புலப்படும். எனினும் அவற்றில் பல அபாயகரமானவை என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் சூதாட பெரும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வரிவிகிதங்கள் நிலையாக இருக்கும், மாற்றப்படமாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்புகள் முன்தேதியிட்டு மாற்றப்படாது என்ற வாக்குறுதி வோடபோன் போன்ற கம்பெனிகளை குஷிப்படுத்தும் விளைவை கொண்டது. (ஆனால் நாம் உள்நாட்டில் ரயில்பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் டிக்கட் வாங்கிய தேதியில் ஒரு விலை, அது பின்னர் மாற்றப்பட்டு ரயிலில் நாம் ஏறியவுடன் கூடுதல் கட்டணம் தரும் நிலை என்பது தொடர்கிறது!)தேக்கம் தொடரும்
பட்ஜெட் முன்வைத்துள்ள வரவு- செலவு கணக்குகள் மற்றும் முன்மொழிவுகளுக்குள் செல்வோம். அவற்றை எடைபோட, முதலில் எத்தகைய பொருளாதாரச்சூழலை நாடு சந்திக்கிறது என்பதைக் காண வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. அதிலும், தொழில்துறை தேக்க நிலையில் உள்ளது. வேளாண் துறை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது, ஆனால் மொத்தத்தில் அதன் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. பன்னாட்டுப் பொருளாதாரம் நெருக்கடியில் தொடர்கிறது.
இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்த கிராக்கியை அதிகப்படுத்தும் வகையில் அரசு கூடுதல் திட்ட ஒதுக்கீடு செய்வதும் உள்நாட்டு சந்தையை வேகமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தேவை. ஆனால் பட்ஜெட் அப்படி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2013-14ஆம் ஆண்டில் மொத்த திட்ட ஒதுக்கீடு பட்ஜெட் கணக்குப்படி 5,55,322 கோடிரூபாயாக இருந்தது. 2014-15க்கு 575 ஆயிரம் கோடி என்ற அளவிற்குத்தான் உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் பெருமளவு உயர்வு இல்லை. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது உண்மை அளவில் சென்ற ஆண்டை விட குறைவு ஆகும். அரசின் மொத்த செலவும் பட்ஜெட் கணக்கில் ஒப்பிடுகையில் பதினாறு லட்சத்து 65 ஆயிரம் கோடியில் இருந்து பதினேழு ஆயிரத்து 95 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது. இதுவும் தேக்க நிலை தான்.
எனவே வளர்ச்சியை அரசு மூலம் ஊக்குவிக்கும் முயற்சி பட்ஜெட்டில் இல்லை. துறைவாரியான திட்ட ஒதுக்கீடுகளும் இதையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஊரக வளர்ச்சி துறையில் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி 80,194கோடி ரூபாய்.இந்த ஆண்டு 83,793 கோடி. உண்மை அளவில் குறைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு 65,869கோடி. இந்த ஆண்டு 68,728கோடி. உண்மை அளவில் சரிவு. ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சென்ற ஆண்டு 32745கோடி இந்த ஆண்டு 34225கோடி. எந்த முன்னேற்றமும் இல்லை, சரிவு தான். இந்த உதாரணங்கள் போதுமானவை. ஆக, முக்கிய துறைகளான, ஊரக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, ஆரோக்கியம் போன்றஅமைச்சக திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் குறைந்துள்ளன.
செல்வந்தவர்களுக்கு மகிழ்ச்சி
அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறைவு. செல்வந்தர்கள் மீது எந்த வரி விதிப்பும் புதிதாகஇல்லை என்பது மட்டுமல்ல. அவர்களிடம் வருமான வரித் துறை நெளிவுசுளிவாக நடந்துகொள்ளும் என்றும் ஆங்காங்கு பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெரும் மத்தியதர பகுதியினருக்கு தரப்பட்டுள்ள வருமான வரி சலுகை என்பது இந்தப்பகுதியினர் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, இதனால் ஏற்படும் பணப்பயன் விலைவாசி உயர்வில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை. மேலும், இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதும் செய்யாத நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
மொத்தமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளால் அரசுக்கு இழப்பாக இருக்கும் இந்த நிதி ஆண்டில் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் மறைமுக வரிகள் மூலம் 7 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருமானம் கிட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ 19 லட்சம் வரவு செலவு செய்யும் பட்ஜெட்டில் இந்த வரி முன்மொழிவுகளின் தாக்கம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ரயில் கட்டண உயர்வு, தொடர்ந்து எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது போன்றவை விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் என்பதும் பட்ஜெட்டும் அதே பாதையில் பயணிக்கிறது என்பதும் உண்மையே.
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மானியங்களுக்கு செலவிடப்பட்ட தொகை 2,55,516 கோடி. இந்த ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் சொற்பமான அளவில் 5142 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நாம் கடுமையான விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான். அதுவும் இராக் நிலைமைகளை கணக்கில் கொண்டால் எரிபொருள் விலைகள் பன்னாட்டு சந்தையில் உயரும் என்பது திண்ணம். மானிய ஒதுக்கீடு உண்மை அளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விகித குறைப்பால் களித்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.
‘சுதேசி’ முழக்கம்வெறும் வேஷம்
செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் வரி விதித்து வளம் திரட்ட மறுக்கும் மத்திய பா ஜ க அரசு, பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. அதீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசு அனுமானிக்கிறது. இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால் ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலமும் மானியங்களை மேலும் வெட்டுவதன் மூலமும். செலவுகள் மேலும்வெட்டப்படும். மறுபுறம் பொதுத்துறை சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதலில் பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி அதன் அமைச்சராக அருண் ஷோரியை நியமித்து அழகு பார்த்தது. மீண்டும், காங்கிரசை விஞ்சும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு விற்று தனது ‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம் என்பதை பாஜக நிரூபிக்க முனைகிறது என்பது இந்த பட்ஜெட் சொல்லும் முக்கிய செய்தி. இந்த பட்ஜெட்டில் மட்டும் நாற்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதுதான்.
இது ஒரு துவக்கமே.நல்ல நாட்கள் வந்து விட்டன. யாருக்கு என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நல்ல நாட்களை அனுபவித்த இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு இன்னும் கூட நல்ல நாட்கள் வரவுள்ளன, மோடி அரசு தனது முதல் பட்ஜெட் மூலம் தனது எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசும் கட்சியும். அதில் உலாவரும் போலி சுதேசிகளும் தற்சமயம் தற்காலிகமாக தலைமறைவாக உள்ளனர் போலும்

Wednesday, July 2, 2014

மாயா பிம்பமே முகமானால்...
நிஸ்ஸிம் மன்னத்துக்காரன்
“தலையைத் திருப்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்காத நிலையில், நிழல்களைத்தவிர வேறு எதையும் அவர்களால் எப்படிக் காண இயலும்?”- பிளேட்டோ, ‘குடியரசு’.
குடியரசு எனும் தனது நூலில், குகை குறித்த புகழ்மிகு உருவகத்தை நமக்குத் தருகிறார் பிளேட்டோ. வாழ்நாள் முழுதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு குகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கைதிகள்; தமக்கு முன்னே உள்ள சுவரில் தோன்றும் நிழல் களைத் தவிர வேறு எதனையும் அவர்களால் காணஇயலாத நிலை. நிழலை மட்டுமே காணமுடியு மென்பதால், அதனையே நிஜம் என்று நம்பி விடுகிறார்கள். அவர்களில் ஒரு கைதி, தளை யை அறுத்துக் கொண்டு குகையிலிருந்து வெளியேறும்போதுதான் அவனால் நிஜத்தைக் கண்டுணரமுடிகிறது. இந்தியாவின் பிரதமர் என்ற நிலையை நரேந்திர மோடி எட்டியுள்ள அதே சமயம், இந்திய அரசியலும்கூட மாயா பிம்பம் எனும்சொல்லின் நேர் பொருளாகவும், உருவகமாகவும் மாயா பிம்ப யுகத்திற்குள் அடியெடுத்து வைத் திருக்கிறது.
இதனை நிழல்களின் யுகம் என்று கூட அழைக்கலாம். ஏனெனில், மோடிஒரு சாதனையாக, 437 பொதுக் கூட்டங் களில் பேசியது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங் களில் ஒரே நேரத்தில் 1350 முப்பரிமாணக் கூட்டங்களில் மாயா பிம்பமாகவும் தோன்றியிருக் கிறார். ரத்தமும் சதையையும் கொண்டு ஏறத் தாழ நிஜ உருவம் போன்றே தோன்றுகின்ற மோடியின் இந்தப் புதிய அவதாரம், மெய் எது - பொய்எது; நிஜம் எது - நிழல் எது எனப் பிரித்துணர் வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அரசியல் போக்கில் ஆபத்து என்னவென்றால், அதன் உள்ளடக்கம் பெருமளவு சூன்யமாக்கப்பட்டுவிடுகிறது; சமுதா யத்தை எதிர்நோக்கியுள்ள ஆழமான பிரச் சனைகள் குறித்து மக்களிடம் நேருக்கு நேர்மெய்யாகவே ஜனநாயகப்பூர்வமாக விவாதிப்பது என்னும் அரசியல் நடைமுறை புறந்தள் ளப்பட்டுவிடுகிறது;
அதற்கு மாறாக, அதிகார நரம்புமண்டல மையங்களில் இயங்குகிற படப்பிடிப்புக் கூடங்களால் ஒளிபரப்பப் படும் காட்சிகள் மூலம் முப்பரிமாண மாயாபிம்ப அரசியலும், தேவதூதர் பாணி அரசியலும் பஞ்சைகள், பராரிகள் வாழுகின்ற இந்த பரந்துவிரிந்த நாட்டின் பின்புலத்தி லுள்ள தெருமுனைகள் மற்றும் கிராமச்சாவடி களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.மோடியின் பெயரைப் பரப்புகின்ற தொலைக்காட்சி அதிரடி விளம்பரங்கள், ‘கூகுள் ப்ளஸ் ஹாங் அவுட்’ இணையதள நிகழ்ச்சிகள், கைபேசி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், குரல் செய்திகள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கெல்லாம் செல்லத் தக்க, இடம் சுட்டும் சாதனமான ‘ஜி.பி.எஸ்.’ மூலம் இயக்கப்படுகின்ற 650 பிரச்சார ரதங்கள் அல்லது கடந்த ஐந்து மாதங்களில் மட்டுமே அனுப்பப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் ‘ட்வீட்’ செய்திகள் ஆகியவை இல் லாமல் முப்பரிமாண பிம்ப அரசியலையும், தொலைபேசி வர்த்தக அரசியலையும் நடத்த முடி யாது. 116 நாடுகளைச் சேர்ந்த 82,000 பேர்ஒரு இணையதள ‘ஹாங் அவுட்’ நிகழ்ச் சியைக் காண நேர்ந்ததால், கூகுள் சேவை யகம் செயல் இழக்க நேரிட்டதாகத் தெரி கிறது.
பழையபாணி அரசியல் என்பதே நுனிப்புல்மேய்வதாக இருக்குமெனில், மாயாபிம்ப அரசியலானது, இந்த ஆழமற்ற தன்மையை விண்முட்டும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. இந்த வகையில்தான், தேநீர் பருகிக் கொண்டே நிகழ்த்தும் விவாதம் என்பது, எதிரணி அரசியல்வாதியொருவரின் தடம் புரண்ட சொல்லுக்குப் பதிலடியாக, தீர்க்க சிந்தனையின்றி உருவாக்கப்பட்டதுதானே தவிர, தேநீர் விருந்து விவாதத்தின் மூலமாக அரசியலை ஜனநாயகமயமாக்கல் என்கிற தூரதிருஷ்டியுடன் கூடிய உள்ளார்ந்த ஈடுபாட் டின் விளைவாக உருவானதல்ல. நொடிப் பொழுதில் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிற உலகில் அல்லது சமூகவியலாளர் சிக்மண்ட் பாவ்மனின் வார்த்தைகளில் சொல் வதானால், ‘ஸ்திரமற்ற நவீனத்துவ’ (liquid modernity) உலகில், மனித உறவுகளின் கெட்டியான பிணைப்புகள், அவை குடும்பம், நட்பு,கூட்டு அரசியல் திட்டங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும், கலகலத்து விழுந்துவிடு கின்றன அல்லது நொடிப் பொழுதில் தோன்றிமறைகின்ற, ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவை கரையத் தொடங்குகின்றன; அங்கேஅனைத்தும் ஷணநேரத்தில் உருகிப் போய்விடு கின்றன, எல்லாம் நிலையற்று, உறுதியற்றதாக மாறிப்போகின்றன.
இதில் வேடிக்கை என்ன வென்றால், இடம்பெயரத்தக்க, உறுதியற்ற தன்மையைத் தாமே பெற்று விடுவதனாலும், (இவ்வாறாகத்தானே, உலகளாவிய நிதி மற்றும் ஊக மூலதனம் எல்லைக் கோடு களையெல்லாம் கடந்து, புவிக்கோளின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்து, அதன் விளை வாகப் படு நாசத்தை உண்டாக்கி விடுகின்றது), தம்மை எதிர்க்கின்ற சக்திகள் சிதறி சின்னா பின்னமாய்க் கிடப்பதைப் பயன்படுத்திக் கொண்டும் ஒரு சில கரங்களில் குவியத் தொடங்குகிற அரசியலும் மூலதனமும் தம்மைக் கெட்டிப்படுத்திக் கொள்வதற்கு இதுவே மிகச் சரியான சூழலாகும். இங்கே அரசியல் மற்றும் இதர நெறிமுறைகளின் ஆயுள், ‘ட்வீட்’ செய்திகள், முகநூல் தகவல்கள் மற்றும் கைபேசிக் குறுஞ்செய்திகள் ஆகி யவை போன்று அற்பாயுசாகச் சுருங்கிப் போய் விடுகின்றது.இத்தகு சூழலில், அரசியல் நெறிமுறைகள் குறித்து விளக்கமளிக்கும்போது, அது அறிவுக்கு ஒவ்வாத வடிவங்களை எடுக்கக் கூடும்; பாசிச முறைகளைக் கைக்கொள்ள நேரும்ஜனநாயக யுகத்தில் பாசிசம் என்பது விஷ வாயுக் கூடங்களைக் கொண்டிருக்காது.
இப்படிப்பட்ட அமைப்பின்கீழ், விலக்கி வைப்பதும், வாயடைப்பு செய்வதும் வன்முறையின் மூலமாக அல்லாமல், மிகுந்த ‘ஜனநாயக வழியில்’ நிறைவேற்றப்படும்; (எடுத்துக் காட்டாக, சக்திமிக்க ஊடகங்களின் பெரும்பகுதியினர் சத்தியம், நீதி ஆகியவற்றின்பால் தமது உள் ளார்ந்த ஈடுபாட்டை உதறித் தள்ளிவிட்டு, இதற்கு மாறாக, தேர்தல் ‘அலைகளை’ உருவாக்கும் காரியத்தில் விரும்பி வேண்டி பங்கு கொள்வார்கள்).நிலையற்ற, சிதறிப் போய்க்கிடக்கிற இந்த நிலையில், தனியொருமனிதனாக நின்று ‘ஸ்திரத்தன்மையை’, ‘ஆட்சி நிர்வாகத்தை’, (நமது காலத்தின் தாரகமந்திரமாகிவிட்ட) ‘வளர்ச்சி’யைத் தருகின்ற, இவற்றுடன் போதை தலைக்கேறிய பெரும்பான்மை தேசியவாதத்தை இணைக்கவல்ல எதேச்சதி காரி ஒருவரை அன்றி வேறு யார் இந்த பரந்துவிரிந்த, வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத் தை ஆளமுடியும்? தேர்தல் தீர்ப்பில் பத்தோடுஒன்று பதினொன்றாக இருக்கும் உள்ளூர் எம்.பி. யைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?பாசிஸ்ட் அணி திரட்டலுக்குத் துணை போவதாகவும், வெறும் ஆறுமாதகாலப் பிரச்சாரத்தின் போதே ஆறுலட்சம் கிராமங் களின் கதியை மாற்றத் தக்கதாகவும் இருப்பதோடல்லாமல், மாயாபிம்பங்கள் அந்தரத்தில் தொங்கும் ஆவிகளாக இன்றி, அவற்றை உருவாக்கு வதற்கான நிஜமான காரணிகளும் இருப்பதால், மாயாபிம்ப அரசியலானது அபாயகரமானதாகிறது. தேர்தலில் ‘மக்கள்’ தீர்ப்பளித்துள்ள (‘இந்தியா என்றால் மோடி; மோடி என்றால்இந்தியா என்கிறது ஒரு நாளேடு) இந்நிலையில், 5000 கோடி ரூபாய் (இது, அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஓராண் டுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஐந்தில்ஒருபகுதி) பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செலவழிக்கப் பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே, இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்பதே ஜனநாயக விரோதமான, முறை யற்ற காரியமாகத் தோன்றும் போலும்! தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.பி.க்களில் முஸ்லிம்களே இல்லை என் கிற அதிர்ச்சிக்குரிய விஷயத்தைப் பற்றிப் பேசுவதும் கூட இதற்கு இணையான ஜனநாயகவிரோத காரியமாகக் கருதப்படக் கூடும்.
இங்கேதான், பாசிஸ்ட் அரசியல், மன ஒப்புத லுடன் அரங்கேறிவிடுகிறது. இவையெல்லாம் இருந்தபோதிலும், சில தீவிர கருத்தோட்டம் கொண்ட விமர்சகர்கள் செய்வதைப் போன்று, மோடியின் தேர்தல் வெற்றியை, ‘இந்தியக் குடியரசில் இதுவரை கிடைத்த தேர்தல் தீர்ப்புகளில் மக்களின் ஆதரவு இல்லாதது, வாக்காளர்களின் ஆதர வைப் பிரதிபலிக்காதது’ என்றோ அல்லது `ஜனநாயக வரலாற்றில் பெருமளவில் களவடாப்பட்ட தேர்தல்’ என்றோ அல்லது வரலாற்றில் கார்ப்பரேட்டுகள் அடித்த பெருங் கொள்ளை’ என்றோ தூற்றி, மாயாபிம்ப அர சியலை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியாது. பதிவான வாக்குகளில் 31 சதவீதம் மட்டுமே (மொத்த வாக்காளர்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே) பா.ஜ.க.வுக்கு வாக்களித்து, இந்தியாவில் தனிக்கட்சிகள் பெரும்பான்மை பெற்றதில் மிகக்குறைந்த வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அதனை ஆக்கி யிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
மாநிலக்கட்சிகளின் வாக்கு விகிதமோ, இடங் களின் எண்ணிக்கையோ அப்படியே மாறாமல் இருக்க, சிதறுண்ட தீர்ப்பினை மக்கள் அளித்துள்ளதால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் உண்மைதான். கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் சரித்திரம் காணாத, கூச்சநாச்சமற்ற ஆதரவு இல்லாமல் ‘மோடி அலை’ என்பது சாத்தியமாகியிருக்காது என்பதும் உண்மைதான். இருப்பினும், இத்தேர்தல் வெற்றியை இதுபோல் அணுகிக்காண்பது மேலோட்ட மான பார்வையாகிவிடும். அவ்வாறு செய்வதன்மூலம், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 31 சதவீதம் மக்களையும், அசாம், மேற்கு வங்கம்,ஒடிசா, அருணாசலப் பிரதேசம், ஜம்மு -காஷ்மீர் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்குவிகிதம் மிகக் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந் திருப்பதையும் முக்கியத்துவமற்றதென உதாசீனப்படுத்துவதாகிவிடும். மோடிக்கு வாக் களித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்ப்பதன்மூலம், மற்ற கட்சிகளுக்கு வாக் களித்தபோதிலும் அல்லது வாக்களிக்காமலே இருந்தபோதிலும் அவரது பாணி அரசியலுக்கு மௌனமாக அங்கீகாரம் அளித்தவர்களின் எண்ணிக்கையை அலட்சியம் செய்வ தாகிவிடும்; மாயாபிம்பங்களால் கவர்ந் திழுக்கப்படுவதற்குத் தயாராக மதில்மேல் பூனைகளாக அமர்ந்திருப்பவர்களின் எண் ணிக்கையை அலட்சியம் செய்வதாகிவிடும்; இதுவரை பா.ஜ.க. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. எவரையும் ஒருபோதும் தேர்ந்தெடுக்காத, ஆனால் நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களைக் கொண் டுள்ள கேரளா போன்ற மாநிலங்களை அலட்சி யம் செய்வதாகிவிடும்; உலகில் உள்ள அரசி யல் பிரமுகர்களில் மோடியின் முகநூல் பக்கம்தான் படுவேகமாகப் பிரபலமாகிக் கொண் டிருக்கிறது என்கிற விஷயத்தையும் அலட்சியப்படுத்திவிடுவதாகும்.
பாஜகவுக்கு 69 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதில் மன ஆறுதல் தேடுவதன்மூலம் மாயாபிம்ப அரசியலுக்கு இரையாகிவிடுகின்றனர் தீவிரகருத்துள்ள பிரிவினர். அரசியலில் மாறியுள்ள சூழலை அவர்கள் பார்க்க மறுக்கின்றனர்: எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளும்கூட இந்த நிலையை எட்டிப்பிடிக்கவும், தமக்குச் சொந்தமான மாயாபிம்பங்களை உருவாக்கிடவும் தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தான், ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்குத் தேவையான குருதியும், வியர்வையும், கண்ணீரும் சிந்துவதற்குத் தயாராக இல்லாத ஆம் ஆத்மி கட்சி, 432 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதன்மூலம் ‘உடனடி அரசியலில்’ இறங்கிப் பணியாற்றவே விரும்புகிறது. பிரச்சாரத்துக்காகச் செலவழிக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் விஷயத்தை அம்பலப் படுத்துவதோடு நின்றுவிட்டால் போதாது; மக்களைப் பகடைக் காய்களாக எண்ணி உதாசீனப்படுத்திவிடாமல், மோடிக்கு மக்கள் ஏன்வாக்களித்தனர்; அவர்களின் கற்பனைகள் என்ன; கனவுகள் என்ன; அவரிடம் அவர்கள்புகலிடம் தேடக் காரணம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்தறிவது அவசியம்.
பெருமளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள், தலித்துகளில் சில பகுதியினர் மோடியின்பால் கவர்ந்திழுக் கப்பட்டதன் ரகசியத்தையும் கண்டறிவது அவசியமாகும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், மக்களை அன்பளிப்புக் காகிதத்தில் வைத்துச்சுற்றி மாயாபிம்ப அரசியலுக்குத் தாரைவார்த்துத் தருவதாகிவிடும்.பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஜனசமூகம் என சமுதாய தளங்கள் எங்கி லும் ஜனநாயகமயமாக்கலுக்கான உயிர்த்துடிப் புள்ள போராட்டங்களை உருவாக்கி வளர்ப் பதற்கு மாறாக, இந்திய ஜனநாயகமானது, பெருமளவுக்குத் தேர்தல் நடவடிக்கைகள் என்பதாக மட்டும் சுருங்கிப்போனது மாபெரும் துயர மாகும். இதன் விளைவாக, உதாரணத்துக்குச் சொல்வதானால், சுதந்திரம்பெற்று அறுபது ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும், பரந்து பட்ட மக்கள் பகுதியினர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மிக மோசமான வறுமையில் வாடும் நிலையில், வளர்ச்சி என்கிற உயர்த் திச்சொல்லப்படும் பதமே, வாழ்வா-சாவாஎன்பதற்கான போராட்டத்தைக் குறிப்பதாகி விடுகிறது.இவ்வாறு, ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் தமதுகடமைகளைச் செய்யத் தவறியதன் விளைவாக, பாசிஸ்ட் பாணி அரசியலுக்கு அடித்தளம் அமைத்துவிட்டார்கள். தேர்தல்கள் மூல மாக மட்டும் பாசிசத்தை எதிர்க்கும்போது, அது வெட்ட வெட்ட வளர்கின்ற தலையைக் கொண்ட அரக்கன்போலாகிறது.
புத்ரில்லார் கூறுவதைப்போன்று, செயற்கையான முறை யில் மெய்போன்ற சூழலை உருவாக்குகின்ற வெகுஜன ஊடகங்களின் யுகத்தில், ‘அதிக,மேலதிகமான செய்திகள்-குறைந்த, ஆகக்குறைந்த உண்மை’ எனும் நிலைதான்இருக்கும். ஆனால், அதை மாற்றிப் போடுவதற்கான தருணம் வந்துவிட்டது. மாயாபிம்பங்களின் உண்மைப் பொருளைக் கண்டறியும் கடமைப் பொறுப்பு நம் தோள்களில்! அரசியலை மீண்டும் எதார்த்தநிலைக்குக் கொண்டுவரும் கடமையும்நமக்குண்டு. நம்மை நாமே விடுவித்துக் கொண்டு, குகையிலிருந்து வெளியேறி, நிழல் களுக்கு அப்பால் இருக்கும் நிஜத்தைக் காண வேண்டிய பொறுப்பு நம் கரங்களில்தானே தவிர, எந்த தேவதூதன் கையிலும் இல்லை!
நன்றி : தி இந்து ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை (ஜூன் 6)தமிழில்: எஸ்.துரைராஜ்