Wednesday, February 12, 2014

`நமோ’ என்கிற அபஸ்வரம்


இந்தியா தனது 65வது குடியரசு தின விழாவினை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளது. குடியரசு தினவிழாவில்,இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படை உரிமை, ஆட்சியில் இருப்பவர்களுக்கோ, அது மக்களின் நம்பிக்கைகளைக் காக்கும் புனிதக் கடமை” என்று கூறியுள்ளார்.இந்தியாவில் பின்பற்றப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகமாகும் (ஞயசடiஅநவேநசல னுநஅடிஉசயஉல). நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சியோ, அல்லது கூட்டணி கட்சிகளோ, இணைந்து தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு அரசு அமைக்க முடியும். ஆனால், அந்தத் தலைவரும், அரசும் மக்களுக்குத் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது அமெரிக்கா அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ளதைப் போன்று அதிபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கி, நாட்டினை ஆட்சிபுரிய அனுமதி வழங்கும் முறையன்று.
இந்தியா பலவிதமான, மொழி, கலாச்சார, இன மதங்கள் பின்பற்றும் மக்கள், ஒற்றுமையுடன் வாழும் நாடு. இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஸ்திர தன்மைக்கும் வழிகோலும்.ஆனால் இன்றைக்கு “நமோ” என்கிற அபஸ்வரம் இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தூண்களை அரிக்கத் துவங்கியுள்ளது. இந்திய நாட்டின் சர்வ அதிகாரத்தையும் மோடி என்கிற தனிநபர் கைகளில் தந்துவிட வேண்டும் என்கிற பிரச்சாரம் நடைபெறுகிறது.1970களில் ஒருமுறை, அவ்வாறு தனிநபர் கைகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகாரம் வந்து சேர்ந்த போதுதான், அவசரநிலைக் காலத்தின் கோரத்தாண்டவத்தை மக்கள் உணர்ந்தனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் சட்டம், “இந்தியா அதாவது பாரதம் என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு; இந்தியாவின் இத்தகைய அடிநாதமான கூட்டமைப்பு தத்துவத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்” என்று கூறுகிறது.இந்தியாவின் தேசப்பிதாவான மகாத்மா காந்தியிடம், நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து கேட்டபோது, இதன் வேர்களை நாம் கிராமப் பஞ்சாயத்து முறைகளில் பார்க்க முடியும் என்று கூறினார்.அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கர், நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதி செய்வதற்கு நாடாளுமன்ற ஜனநாயகம்தான் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.இன்றைக்கு, காங்கிரஸூம், பிஜேபியும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சிக்கின்றன. மோடியையும், ராகுலையும் முன்னிறுத்தி 2014 தேர்தலை சந்திக்க முயல்கின்றனர்.வேலையின்மை, கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வு, கல்விக்கான செலவு, பொருளாதார வீழ்ச்சி, விவசாய நெருக்கடி போன்ற பிரச்சனைகளை மக்களை மறக்கச் செய்வதற்கு மோடிக்கும், ராகுலுக்கும் இடையே மல்யுத்தப் போட்டியினை நடத்தி வருகின்றன.
இவ்விரண்டு கட்சிகளும் இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து, அதிபர் ஆட்சி முறையினை நோக்கி இந்தியாவை நகர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1991ல் பிஜேபி தனது தேர்தல் அறிக்கையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிபர் முறை ஆட்சியை இந்தியாவில் அமல்படுத்துவதை ஆராய கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இன்றைக்கு இந்தியாவில் பொருளாதாரக் கொள்கையில் மாற்று தேவைப்படுகிறது. இந்தியாவில் ஏழை மக்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கமான இடைவெளி குறைவதற்கு, நாட்டின் செல்வங்களும், வளங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது மாற்று பொருளாதாரக் கொள்கை மூலமே சாத்தியம். பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் பெரும் செல்வந்தர்களின் நலன் சார்ந்ததாக இருக்கிறது என்பதுதான் இந்திய மக்களின் அனுபவம்.நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்க மதச்சார்பற்ற மாற்று தேவை.
முசாபர்நகர் நிகழ்வுகள் பிஜேபியின் உண்மை முகத்தினை மீண்டும் தோலுரித்துக் காட்டியுள்ளது. அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அனுமதிக்காது என்பதைத் தான் இந்நிகழ்வு சொல்கிறது.காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் நாடாளுமன்ற விரோத நடவடிக்கைகளை இந்தியர்களாகிய நாம் எளிதில் உணரமுடியும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; யாதும் ஊரே யாவரும் கேளிர் ; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - இவையெல்லாம் இந்தியர்களின் மாண்புகள்.இந்திய குடியரசின் மாண்புகளை பாதுகாக்கவும், இந்தியாவின் இறையாண்மையைப் பேணிக்காக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை உயர்த்திப்பிடிக்கவும், இந்தியர்களாகிய நாம், மாற்றுப் பொருளாதாரக் கொள்கை, மதச்சார்பற்ற மாற்று, இவற்றின் தேவை குறித்து தொடர்ந்து உரக்கப் பேசுவோம்.- வெ.ராகுல்ஜி
அரசியல் மேடையில் அரங்கேறும் நாடகங்கள்!
உ.வாசுகி

கொல்கத்தாவில் அண்மையில் உரை யாற்றிய மோடி, மூன்றாவது அணி என்பது மூன்றாம் தரமானது என்று பேசியிருக்கிறார். அடுத்து, கொச்சியில் நடந்த கூட்டத்தில், கேரளாவில் பிஜேபி மூன்றாவது மாற்றாக உருவெடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். பிஜேபிக்கும் மாற்றாக ஓர் அணி உருவானால், அது மூன்றாம் தரம், பிஜேபியே மூன்றாவது அணியானால் அது முதல் தரமா? கொல் கத்தாவில் அப்படிப் பேசினீர்களே, கொச்சி யில் இப்படிப் பேசுகிறீர்களே என்று கேட்டால், வடிவேலு போல, அது போன வாரம், இது இந்த வாரம் என்று பதில் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ், பிஜேபி அல்லாத இதர மதச்சார்பற்ற கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணுகிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோ பர் மாதம் 30ம் தேதி, டெல்லியில் 14 கட்சிகள் கலந்து கொண்ட மதவெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. இம்மாதம் 5ம் தேதி, 11 கட்சிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எஞ்சிய ஒன்று, ஒன்றரை மாதங்களைக் கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கொண்டு வர விரும்பும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் காக்கத் தேவைப்படும் ஒருங்கிணைப்பு பிரதான நிகழ்ச்சி நிரலாக அமைந்திருக்கிறது. அடுத்து, தேவகௌடா வீட்டில் ஒரு சந்திப்பு நிகழ இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கட்சிகளைத் தான் மோடி மூன்றாம் தரம் என்று பேசியுள்ளார். ஒரு வேளை இக்கட்சிகளில் ஏதாவது ஒன்று பிஜேபி பக்கம் வருவ தாக இருந்தால், வேண்டாம், நீங்கள் மூன்றாம் தரம் என்று மோடி சொல்லி அக்கட்சியை நிரா கரித்து விடுவாரா? அல்லது மூன்றாம் தரமாக இருந்த அந்தக் கட்சி, பிஜேபியுடன் சேர்ந்த உடன் ரின் சோப்பு போட்டு வெளுக்கப் பட்டு முதல் தரமாகி விடுமா?மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, மோடியின் இப்பேச்சு தான் மூன்றாம் தரம் என்று வர்ணித்திருக்கிறார். பொது செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களோ, நாங்கள் மூன்றாம் வகுப்புக்கு வந்து விட்டோம், மோடியோ இன்னும் முதல் வகுப்பிலேயே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் சிதம்பரம் அவர்களை மறு வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் என்று மோடி பேச, மோடிக்கு இருக்கும் பொருளாதார அறிவை ஒரு தபால் தலை பின்னால் எழுதிவிடலாம், அவ்வளவு குறைவானது என்று சிதம்பரம் பேச, ஹார்ட் ஒர்க் இருந்தால் போதும், ஹார்வர்டு படிப்பு தேவையில்லை என்று மோடி பதில் சொல்ல, 16வது நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடக்கும் அரசியல் விவாதம் தான் மூன்றாம் தரமாக இருக்கிறது. மக்கள் உண்மையான பிரச்சனைகளை சிந்தித்து விடக் கூடாது என்று காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு திசை திருப்புகிறார்கள்.
உண்மை ‘மறந்த’ மோடி
இந்தியா சீனா யுத்தத்தின் போது, இந்திய ராணுவ வீரர்களின் சேவையைப் புகழ்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி, மும்பையில் ஜனவரி 27ம் தேதி ராணுவத்தினர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய போது, மோடி, நம் நாட்டில் ராணுவ வீரர்களுக்காக ஒரு நினைவு சின்னம்கூட இல்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார். டெல்லியில் உள்ள இந்தியா கேட் என்பதே போர் வீரர்களின் நினைவு சின்னம் தான். தில்லி, சென்னை, டார்ஜிலிங், புனே, சண்டிகர், டேராடூன், ஜம்மு உட்பட 15 இடங்களில் நினைவு சின் னம் உள்ளது.
ராணுவ வீரர்களுக்கே அல்வா கொடுத்தால் எப்படி?அதேபோல், இந்தியா பாகிஸ்தான் எல்லையின் ஒரு பகுதி குஜராத் எல்லையுடன் இணைந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு குஜராத்தில் மோடி பேசிய முதல் பேச்சில், எல்லைப்பகுதிக்கு நான் நேரடியாகச் சென்று பார்த்தேன். எல் லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்குக் குடிநீர் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஒட் டகங்கள் மூலம் தான் தண்ணீர் அனுப்பப்படு கிறது. இதற்காக 800 ஒட்டகங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. ராணுவத்தினரின் வலியை நான் உணர்ந்தேன். அதற்காக, நர்மதை நதியின் தூய்மையான நீர் அவர்களுக்குச் சேர வேண் டும் என்று நினைத்து, குஜராத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதி வரை 700 கிமீ தொலைவுக்குக் குழாய் பதிக் கும் பணியில் ஈடுபட்டேன். இப்போது அவர் களுக்குச் சுத்தமான குடிநீர் செல்லுகிறது என்று கூறியுள்ளார்.
உண்மை என்ன? மோடி, 2001 அக்டோபர் 7ம் தேதி தான் குஜராத் முதல்வரா கிறார். 1999ல் துவங்கிய சர்தார் சரோவர் திட்டத்தின் கீழ் இந்தக் குழாய்பதிக்கும் வேலை, 2001 ஜனவரியில் முற்று பெற்று, மோடிக்கு முந்தைய முதல்வர் கேஷுபாய் பட்டேலால் துவக்கியும் வைக்கப்பட்டுவிட்டது. இதற்கும் மோடிக்கும் சம்பந்தமே இல்லை. எங்கு சம்பந்தம் வருகிறது என்று சொன்னால், முடிவுற்ற பைப் லைனை இன்னொரு 100 கிமீ எடுத்துச் சென்று எல்லை யில் இருப்பவர்களுக்குக் குடிநீர் வழங்கும் பணி பாக்கி இருந்ததை மோடி முடித்தார். எப்போது? நூ....று கிமீ லைனை 2013ல் தான் முடித்து வைத்தார். 700 கிமீ 2,3 வருடங்களில் முடிந்து விட்டது. வெறும் 100 கிலோ மீட்டரை 12 ஆண்டுகள் இவர் இழுத்தடித்து விட்டு மொத்தத்துக்கும் சேர்த்து பேர் வாங்க ஆசைப் பட்டால் என்ன சொல்வது? இதற்குத் தானா ஆசைப்பட்டீர் நரேந்திர மோடி?
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?
காங்கிரஸ் மட்டும் சளைத்ததா என்ன? ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மானிய விலை சிலிண்டர் 9 இலிருந்து 12 ஆக உயர்த்தப் படுகிறது என்று செய்திகள் வெளியாயின. ராகுல் காந்தி யார்? செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தாரா? சிலிண்டர் எண்ணிக்கை 6ஆகக் குறைக்கப்பட்ட போது எங்கே போயி ருந்தார்? காங்கிரஸ் தலைமையிலான ஒருகூட்டணி அரசு முடிவு எடுக்கும் போது, அது குறித்து காங்கிரசின் அகில இந்திய துணைத் தலைவருக்கே தெரியாதா? சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரித்தது அவர்கேட்டுக் கொண்ட அடிப்படையில் என் றால், குறைத்ததும் அவரைக் கேட்டுத் தானே?மக்கள் விரோத முடிவுக்கு உம் கொட்டுவாராம். பிறகு மக்கள் ‘நலன்’ காக்க அதை மாற்றச்சொல்லுவாராம்.
கேழ்வரகில் நெய் வடி கிறது, நம்புங்கள் என்கிறது காங்கிரஸ். நாடுமுழுதும் மக்களின் கோபமும்,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின்போராட்டமும், குறிப்பாகக் கேரளாவில்மட்டும்1400 இடங்களில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத் தியதும் தான் இந்த முடிவுக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது.ஏழை மக்களிடம், பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று கடிந்து கொண்டு, அதே சமயம் வருடத்துக்கு சராசரியாக ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு, பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வாரி வழங்கும் மன்மோகன்சிங்கையும், காங்கிரசையும் விட நரேந்திர மோடியை ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்குகின்றன என்றால் என்ன அர்த்தம்? காங்கிரசை விட தீவிரமாகப் பெருமுதலாளிகளுக்கு மோடி வாரி வழங்கு வார் என்ற எதிர்பார்ப்பு தானே? வேறு என்னகாரணம் இருக்க முடியும்? கார்ப்பரேட்டு களின் நலனைவிட மக்களின் நலனை மதிப்பவர்களை ஊடகங்கள் முன்னுக்கு வர விட்டுவிடுமா? அவர்களை நல்லவர்கள் என்று சித்தரிக்குமா? காங்கிரசுக்கு பிஜேபிமாற்று என்பது யாருக்கு? கார்ப்பரேட்டு களுக்குத் தான். மக்களுக்கு அல்ல.கொஞ்ச நஞ்சம் மோடி குறித்து விமர்சிக்கும் தொலைக்காட்சி விவாதப் பொறுப் பாளர்களையும் அந்தந்த நிர்வாகம் ‘சரி’ செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அவர்களுக்கு மோடி ஆதரவாளர்களிடமிருந்து வரக்கூடிய, கொன்று விடுவோம், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கு வோம், வேலையிலிருந்து தூக்கி விடுவோம் போன்ற மிரட்டல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரமும், பேச்சுசுதந்திரமும் என்ன கதி ஆகிக் கொண்டிருக் கிறது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பதவி குறித்து கனவு காணும் போதே இந்தக் கொடுமையா? பதவி கிடைத்துவிட்டால் பாசிஸ போக்குகள் தலைவிரித்து ஆடாதா?மோடி அலை அடித்துத் தள்ளுகிறது என்றால், தமிழகத்தில் பிஜேபி ஏன் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறது? அலை இருக்கும் போது வலை எதற்கு? “கொசுகடிக்கிறது. ஏனெனில் அதற்கு ரத்தம் வேண்டி யிருக்கிறது.
ஆனால் இந்த லூசு எறும்பு ஏன் கடிக்கிறது?” என்று இணைய தளத்தில் ஒரு ஜோக் உலா வந்து கொண்டிருக்கிறது. இது சிலருக்கு மதிமுக குறித்த நினைவுகளை எழுப்பினால் நாம் பொறுப்பல்ல! இந்தப் பின்னணியில் தான், மாற்று நபர்களை அல்ல, மாற்று ஆட்சியை மட்டும்அல்ல, மாற்றுக் கொள்கைகள் குறித்து யோசிக்குமாறு, விவாதிக்குமாறு மக்களைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியும், இடது சாரிகளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசும் பிஜேபியும் இந்தியாவைப் பிடித்த இரு பெரும் தொற்று நோய்கள். இந்தத் தொற்றுகள் விலக்கப்பட்டால்தான், தேசத்தின் ஆரோக்கியம் மீட்கப்படும்.

Monday, February 10, 2014

மோடி சொல்லும் செயலும்
பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் பிரதமர் வேட்பாளர் என்று பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுத்து அருளுரை வழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு வந்தால் மீனவர்களுக்காக பேசுவது, ஆந்திர மாநிலத்திற்கு சென்றால் தெலுங்கானாவை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி குத்துமதிப்பாக பேசுவது, தன்னுடைய மாநிலமான குஜராத்தில் பட்டேலுக்கு சிலை வைக்கிறேன் என்று கிளப்பிவிடுவது என மண்ணில் விழும் தண்ணீர் மண்ணுக்கேற்ப நிறம்மாறுவது போல வேடம் போடுகிறார்.கேரள மாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேசிய மோடி அடுத்த பத்தாண்டுகள் தலித்துகளுக்கானது என்று கூறியுள்ளார்.
பாஜக என்பது சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல இந்துமதத்தில் உள்ள பெரும்பகுதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரி என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆவணங்களை படித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இவர்களுடைய கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்தாலே போதும்.இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் இருந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற முயன்றபோது இவரது கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை நடத்தி அந்த ஆட்சியையே கவிழ்த்தார் என்பது வரலாறு. ஆனால் இவரே பிற்படுத்தப்பட்டோருக்காக அவதாரம் எடுத்தவர் போல காட்டிக் கொள்கிறார்.தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்க சதி நடக்கிறது என்றும் மோடி பேசியுள்ளார். இவரது கட்சியைச் சேர்ந்த அறிவுஜீவி என்று கூறிக்கொள்ளும் அருண்ஷோரி என்பவர்தான் அம்பேத்கர் மீது புழுதிவாரித் தூற்றி புத்தகம் எழுதினார். இன்றுவரை அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதே அருண்ஷோரி எழுதிய புத்தகத்தைத்தான் அண்மையில் மோடி சென்னையில் வெளியிட்டார்.
இவர்களுடைய வழிகாட்டி அம்பேத்கர் அல்ல. மாறாக மனுவை மனதுக்குள் போற்றும் கோல்வால்க்கர் போன்ற வர்கள்தான். இதை மோடி மறைத்துவிட முடியாது.மக்கள் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார். ஆனால் மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராக மசோதா கொண்டுவர வேண்டும் என்று போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை வெட்டிவீழ்த்தியது இந்துத்துவா ஆதரவு கும்பல்தான். அவர்களுக்கு ஆர்எஸ் எஸ் அமைப்போடு தொடர்பு உண்டு. மூடநம்பிக் கைகளை வளர்ப்பதன் மூலமே அதிகாரத்தைப் பிடிக்கவும், தக்க வைக்கவும் முடியும் என்ற சித்தாந்தமே பாஜகவின் கோட்பாடு ஆகும்.குஜராத் மாநிலத்தில் மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை நீடிப்பது குறித்து கேட்டதற்கு அந்தப் பணி ஆண்டவனுக்குச் செய்யும் அருட்பணி என்று திருவாய் மலர்ந்தவர்தான் மோடி. இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தலித் மக்களுக்காக உருகுவதுபோல காட்டிக் கொள்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகள் மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக இருக்க வேண்டு மானால் மோடியின் கனவு தகர்க்கப்பட வேண்டு
`கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு!’
பி.தங்கவேலு
பாரத தேசம் தனது அறுபத்தேழாவது சுதந்திரத் தினத்தையும், அறுபத்தினான் காவது குடியரசு தினத்தையும் கொண்டாடி யுள்ளது. அதோடு பதினைந்தாவது பொதுத் தேர்தலைக் கடந்து, பதினாறாவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது இந்தாண்டில்!பாரத தேசத்தின் பாட்டாளிகளின் உழைப்பு - அன்று இருந்த உள்நாட்டு முதலாளிகளின் சுரண்டலில் இருந்து, இன்று பன்னாட்டு முதலாளிகளின் சுரண் டல் என்கிற `ரேஞ்ச்’க்கு `சுரண்டல்’ பரிணாமம் பெற்றதுதான் பாரதநாடு கண்ட பலன்!இதற்காகவா அன்று சிதம்பரம் செக் கிழுத்தார்? அன்று பகத்சிங் தூக்கு கயிறை முத்தமிட்டார்? சுதந்திரத்திற்கு முன்னும்சரி; பின்னும்சரி அன்று சிறைக்கொட்டடியில் குருதி சிந்திய வீர வரலாறுகள் எத்தனை? எத்தனை? ஆம்! அவற்றில் ஒன்று இதோ...1950பிப்ரவரி 11... இந்திய துணைக் கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திய பதினோராவது நாள்; முதல் குடியரசு தினம் கொண்டாடிய ஆண்டு. அதாவது இந்தியாவில் சுதந்திர காற்று வீசத் தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடம் நடைபெறும் சமயம்.
நாடெங்கும் சுதந்திர காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த சுதந்திர காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் சுவாசிக்க கிடைக்கவில்லை. என்ன கொடுமை இது பார்த்தீர்களா? ஆம்! 1948-1951 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது விடுதலை இந்தியாவில்!விடுதலைக்காக - வெள்ளையனை விரட்டியடித்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அதன் சுவடு கூட தெரியாத அளவுக்கு வேரோடு பிடுங்கி எறிந்த தேசபக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது; அளப்பரியது! அப்படிப்பட்ட தேசபக்தர்கள் மீது விடுதலை இந்தியாவிலும் அடக்குமுறை தொடர்ந்தது.கம்யூனிஸ்ட்கள் மீது வழக்குமேல் வழக்கு; அந்த சதிவழக்கு.... இந்த சதிவழக்கு... என்று வெள்ளையன் பாணியிலேயே பவனி வந்தது பாரத குடியரசாம் பாழாய்போன காங்கிரஸ் பே(ய்)ரரசு! இதன் விளைவு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் கம்யூ னிஸ்ட்களை அடைத்து அகம் மகிழ்ந்தது அன்றைய காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு.ஏன்? எதற்காக? `ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர், உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ !” என்று பாரதிதாசன் சொன்னாரே... அந்தசமத்துவ கொள்கையை விடுதலை சமவெளிக ளில் விதைத்தார்கள்; விடுதலை இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்கள்.
அதற்காகத்தான் அன்று கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப் பட்டார்கள்!அப்படித்தான் சேலம் மத்திய சிறை யில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த (அன்றைய மதராஸ் ராஜ் ஜியம்) 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பகுதி 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யாவரும் அரசியல் கைதிகள்.இவர்களை கொள்ளை, கொலை, திருட்டு போன்ற சமூகவிரோத, சட்ட விரோத காரியங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த `கிரிமினல்’ கைதி களோடு `சி’ பிரிவிலேயே சிறையில் அடைக் கப்பட்டனர்.- “நாங்கள் சுதந்திர போராளிகள்; எங்களை பிக்பாக்கெட் கைதிகள்போல் நடத்தக்கூடாது; அதை உயிர் போனாலும் ஏற்கமாட்டோம்!” என்று வீரசமர் புரிந்தார்கள் சிறையில் நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள். இதுதான் சேலம் சிறையிலும் நடந்தது. கம்யூனிஸ்ட்களுக்கு `அரசியல் கைதி’ என்கிற உரிமையைக் கூட வழங்க மறுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. `எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும்’ என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்களை காக்கை குருவிகளை சுடுவது போல் சுட்டு தனது வர்க்க பாசத்தை காட்டிக் கொண்டது. ஆம்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறா காங்கிரஸ் அரசு தானே அன்று முதல் இன்றுவரை இருக்கிறது.சேலம் சிறையில் நரவேட்டை நடந்த பொழுது சிறையில் இருந்து மறைந்த உத்தமலிங்கம் கூறுகிறார்- “கிரிமினல் கைதி களைப்போல் தொப்பியும், நம்பர் அட்டையும் அணிய வற்புறுத்தினர்.
ஒவ்வொரு நாளும் வற்புறுத்துதல் அதிகமானது. 1950 பிப்ரவரி 7 ம் நாள் 15 தோழர்களை `அனெக்ஸ்’ பகுதியிலிருந்து தலைமை சிறைக்கு கொண்டு சென்றனர். மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விபட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. `பிப்ரவரி 11ல் நெம்பர் அட்டை அணிய மறுத்ததால் ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினர். சேகரித்து வைத்திருந்த கற்களில் நாங்களும் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒருகல் விழுந்து விட்டது. அவ்வளவுதான். உடனே துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அப்பொழுது முன்னணி தோழர்கள் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் தங்களின் நெஞ்சை நிமிர்த்தி காட்டினர். என் போன்று இளைஞர்கள்தான் நிறைய தோழர்கள் இருந்தோம்...”17 தோழர்கள் துப்பாக்கிச்சூட்டிலும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 11 ல் 22 சுதந்திர போராளிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) சேலம் சிறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வீரமரணம் அடைந்தனர். 105 ரவுண்ட் சுட்டுள்ளனர்.
காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு கம்யூனிஸ்ட்டுகளின் செங்குருதியை குடித்து தன் வர்க்க பாசத்தை உலகுக்கு பறைச் சாற்றிக் கொண்டது. அந்த வீரதியாகிகள் திருப்பெயர்கள் இதோ-ஆறுமுகம், காவேரி முதலியார், சேக்தாவூத் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா பகுதி தோழர்கள்.“சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்“ என்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அன்று பஞ்சாப் சகோதரர்களை சுட்டி குவித்தானே வெள்ளை பரங்கி ஜெனரல் டயர்... அதுபோல் அன்று சேலம் சிறையில் அரங்கேறியதை கேட்டால் நெஞ்சம் வெடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா? ஆம்.. அன்று `விடுதலை’யில் தந்தை பெரியார்- “நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்கிறது” என்றும், `திராவிட நாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா “கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு” என்று தலையங்கம் எழுதி பொங்கி எழுந்தனர்.சேலம் சிறைத்தியாகிகள் அன்று சிந்திய செங்குருதி வீண்போகவில்லை; அவர்களின் சாம்பல்களில் இருந்து இன்று ஆயிரமாயிரமாய் பீனிக்ஸ் பறவைகள் போல கம்யூனிஸ்ட்டுகள் எழுந்து வருகிறார்கள். ஆம்! சேலம் சிறைத்தியாகிகள் எந்த லட்சியத்திற்காக.. அதாவது `ஒப்பப்பர்’ சமுதாயத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்களோ.. அந்த சோசலிச சமுதாயம் அமைத்திடும் பணி இன்றும் தொடர்கிறது.ஒருபக்கம் பெற்ற சுதந்திரம் பன்னாட்டு கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் பறிபோகும் நிலையில் உள்ளது.
இன்னொரு பக்கம் 1990களில் துவக்கப்பட்ட உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையால், இன்று நம்நாடு வெளிநாட்டு, உள்நாட்டு சீமான், சீமாட்டிகளின் வேட்டைக்காடாக மாறிவருகிறது. மேலும் எல்பிஜி கொள்கைகள் அமலாக்கம் விஸ்பரூபம் எடுத்து நம்மை விளிம்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஆம்! அணுசக்தி முதல் அடுப்பெரிக்கும் தீக்குச்சி வரை அந்நியர்கள் கையில் அடைக்கலம் ஆகிவருகிறது; அதைத்தான் மன்மோகன்சிங் வகையறாக்கள் சுதி மாறாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய எல்பிஜி கொள்கைகளுக்கு எதிரான போரும்,இந்திய சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் போரும் வேறு வேறு அல்ல! பாரதத்தைக் காக்கும் குருசேத்திரப் போரைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மண்ணில் சேலம் சிறைத்தியாகிகள் திசைவழியில் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.இதனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லவே... ஆம்! சோசலிச சமுதாயத்தை படைக்கவே... ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாவு மணியடிக்கவே.. என்றென்றும் போர்பரணி பாடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! அத்தகைய பயணத்தின் ஊடேதான் பதினாறாவது பொதுத்தேர்தல் பவனி வருகிறது.பாரத நாட்டை பன்னாட்டு திமிங்கலங்களுக்கு தீனியாக்கிவிட்டு... ராகுல்காந்தியோ “ஏழை இந்தியா, பணக்கார இந்தியா” என இரண்டு இந்தியா உள்ளதென பசப்புகிறார்.
அண்ணல் காந்தியைக் காவு கொண்ட நாதுராம் கோட்சேவின் வாரிசு நரேந்திர மோடியோ “ஊழல், வளர்ச்சி” என மகுடி ஊதுகிறார்! பன்னாட்டு சுரண்டல் என்கிற ஒரே குட்டையில் ஊறித் திளைக்கும் காங்கிரஸ் - பிஜேபி என்கிற இரு மட்டைகளையும் மண்ணைக் கவ்வச் செய்வோம்! மாற்று இடதுசாரி - ஜனநாயக - சமத்துவக் கொள்கைகளை மக்கள் மனதில் விதைப்போம்! என சேலம் சிறைத்தியாகிகள் நினைவு நாளில் சபதமேற்போம்!தியாகிகளே! நீங்கள் வீழ்ந்த மரங்கள் அல்ல; நீங்கள் வீரிய விதைகள்! உங்களில் இருந்து நாங்கள் ஆயிரமாயிரமாய் எழுவோம்! சேலம் சிறைத்தியாகிகளே உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்.
வங்கிகள் வேலை நிறுத்தம் ஏன்?
எஸ்.வி.வேணுகோபாலன்
நாடு முழுவதுமுள்ள 80,000 வங்கிக் கிளைகள் நேற்று முழுமையாக மூடப் பட்டிருந்தன. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டு பொதுத் துறை வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை தனியார் வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும் தொடங்கிய 2 நாள் வேலை நிறுத்தம் இன்றும்(பிப்.11) தொடர்கிறது. சொல்லப் போனால், இந்த முறை 48 மணி நேர வேலைநிறுத்தம் என்றுதான் இது வருணிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், காசோலைகளை பரிவர்த்தனை செய்யும் மையங்களில் வேலை நிறுத்தம் நேற்று காலை 6 மணிக்கே தொடங்கி விட்டது. இதன் காரணமாக புதன்கிழமை காலை 6 மணிக்குத் தான் காசோலை மையங்களில் கிளியரிங் வேலை தொடங்கும். அது மட்டுமின்றி, ஒரு லட்சம் கிராம வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்க செய்தி.
எதற்காக இந்த வேலைநிறுத்தம்? இதை தவிர்த்திருக்க முடியாதா? என்ற கேள்விகளை இணையதளத்திலும், பொது இடங்களிலும் சந்திக்கிறோம். ஊதிய உயர்வுக்கான போராட்டத்தினால், சாதாரண மக்கள் ஏன் வங்கிச் சேவையை இழக்க வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது. வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கான ஒன்பதாவது ஊதிய ஒப்பந்தம் அக்டோபர் 31, 2012 தேதியுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை நேரத்தே சமர்ப்பித்தது வங்கி ஊழியர் - அதிகாரிகளின் கூட்டுப் போராட்ட ஐக்கிய மேடை. ஆனால், ஓராண்டுக்காலம் வரை நடந்த ஐந்தே ஐந்து சந்திப்புகளில், கடைசிவரை ஊதிய உயர்வு எந்த விகிதத்தில், என்ன அடிப்படையில் வழங்க உத்தேசிக்கிறோம் என்பதை இந்திய வங்கிகள் கழகம் தெரிவிக்கவே இல்லை. அது மட்டுமல்ல, அவர்கள் தரப்பில் முன் வைத்திருக்கும் எதிர் கோரிக்கைகளைப் பேசாமல் மேற்கொண்டு எதுவும் நகராது என்றும் பிடிவாதம் பிடித்தனர் நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினர். அந்த எதிர்க் கோரிக்கைகளின் தன்மை மிக மிக மோசமான முறையில் ஊழியர்களைப் பிரித்தாளும் நோக்குடனும், ஒன்பது சங்கங்கள் கூட்டாக ஒருமித்த குரலோடு போராடும் வண்ணம் வளர்த்தெடுத்திருக்கும் ஒற்றுமையை சவாலுக்கு இழுப்பதுமாகும். 30 ஆண்டு பணிக்காலம் முடித்தோர் அல்லது 55 வயதை நிறைவு செய்தோரை பணிநீக்கம் செய்யும் உரிமை, யாரையும் எங்கும் கிளை மாற்றல் செய்யும் அதிகாரம், வங்கி வாரி தனித் தனி ஒப்பந்தம், செலவினங்களை அதிகம் பணியாளர் தலையில் சுமத்துவது போன்ற விஷயங்களை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்கின்றது நிர்வாகக் குழு. இவற்றை முற்றாக நிராகரித்த கூட்டுப் போராட்ட மேடை, வங்கித்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது.
2013 நவம்பர் வரையிலும் எந்தப் பிடியும் கொடுக்காமல் நிர்வாகக் குழு இழுத்தடிக்கும் போக்கைத் தொடர்ந்தது. எனவே, டிசம்பர் 18 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. போராட்ட தினம் நெருங்கும் நேரத்தில் வங்கி நிர்வாகங்களின் குழு 5 சதவீத உயர்வு தருவதாக அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னது ஊழியர், அதிகாரிகளை மிகுந்த கோபாவேசத்திற்கு உட்படுத்தியது. அந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகும் நிர்வாகக் குழுவின் போக்கில் முன்னேற்றம் அற்றுப் போகவே, ஜனவரி 20, 21 இரண்டு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதென சங்கங்கள் முடிவெடுத்தன. நிர்வாகத் தரப்பு தனது புறக்கணிப்பு மனப்பான்மையை மேலும் வெளிப்படுத்துவது போல, பேச்சுவார்த்தை தேதியை ஜனவரி 29 என்று அறிவித்து மேலும் அவமதித்தது. மத்திய தொழில் ஆணையர் அழைத்து அறிவுறுத்திய பின்னர், ஜனவரி 17 அன்று பேச்சுவார்த்தையை நடத்திய இந்திய வங்கிகள் கழகம், 9.5 சதவீதம் தருவதாக அறிவித்தது. அதை பேச்சுவார்த்தை தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டு, மேற்கொண்டு உயர்வு தர ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தை தொடரலாம் என்ற பரஸ்பர ஒப்புதலில் ஜனவரி இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை சங்கங்கள் ஒத்தி வைத்தன.
ஆனால், மீண்டும் அடுத்த சந்திப்பில் மேற்கொண்டு அரை சதவீதத்திற்கு மேல், அதாவது 10 சதவீத உயர்வுக்குமேல் தர இயலாது என்று நிலையெடுத்தது நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழு. அதோடு மட்டுமின்றி, தங்களது எதிர்க் கோரிக்கைகள்மீது உடன்பாடு எட்டாமல் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை என்றும் நிலையெடுத்தது. இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 10, 11 இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்துவதென மேற்படி சந்திப்பு நிகழ்ந்த ஜனவரி 27 அன்றே கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர் அதிகாரிகளின் நூறு சதவீத பங்கேற்பு அவர்களது கோரிக்கையின் நியாயத்தையும், போராட்ட உறுதியையும், ஒன்றுபட்ட இயக்கத்தின் வலுவையும் பிரதிபலிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் கண்மூடித் தனமாக வங்கிக் கிளைகளை மூடிக் கொண்டிருந்த நிர்வாகங்கள், அதற்கு எதிரான தொழிற்சங்கக் குரல்களை மதிக்கவில்லை. 15 ஆண்டுகளில் 4750 கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டன என்று பத்திரிகையாளர் பி. சாய் நாத் 2008ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதோ, ஒவ்வொரு வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக் கணக்கில் கிளைகளைத் திறக்கின்றன. பெரும்பாலானவை பெருநகர, நகரக் கிளைகள் தான் என்றாலும், இவற்றுக்கான ஊழியர்களை அருகிலிருக்கும் கிளைகளிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றன நிர்வாகங்கள். தனி நபர் வர்த்தக அளவு, தனி நபர் லாபப் பெருக்கம் எல்லாம் பல மடங்கு உயர்ந்தபின்னும், பெருகும் கிளைகளின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து கொண்டும் இருக்கிறது. வேலைப்பளு பல மடங்கு கூடி வருவதால், கிளைகளில் வாடிக்கையாளர் சேவை படுமோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அன்றாடத் தள்ளுமுள்ளுகள் தவிர்க்க முடியாது போய்க் கொண்டிருக்கின்றன. 5 லட்சம் காலி இடங்களை நிரப்பத் தயாராக இல்லாத வங்கி நிர்வாகங்களுக்கு, பணியில் இருக்கும் ஊழியர்களைப் பந்தாடி மகிழ்வதும், பழிவாங்கத் துடிப்பதுமே பொழுது போக்காகி வருகிறது. சந்தைப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட ஆட்சியாளர்கள், பொதுத் துறை வங்கிகளையும் லாப நோக்கை முன்னிறுத்தும் வண்ணம் நிர்ப்பந்திக்கின்றனர். சாதாரண மக்கள் சேவைக்கு இருப்பதைவிடவும் பெருந்தொழில் வர்த்தக சேவைக்கே இனி முன்னுரிமை.
இத்தனைக்கும் இன்று வங்கிகள் ஈட்டும் லாபத்தின் பெரும்பங்கை அரித்துக் கொண்டிருப்பவை மேற்படி கனவான்கள் கும்பல்களுக்கு வாரி வாரி அளித்த கடன்கள் திரும்ப வராது போனதால் வாராக் கடன்கள் என இலக்கிய நயமாகப் பேசப்படும் நிலுவைக் கணக்குகள் தான். அவர்கள்பால் இரக்கத்தோடு தள்ளுபடி பேரத்தை நடத்தியும் திருப்தியுறாத ஆட்சியாளர்கள், இத்தகு நிறுவனங்களுக்கே புதிய வங்கிகளை நடத்தும் உரிமம் வழங்கவும் துடிப்பது அராஜகமானது. இடதுசாரிகள் எதிர்ப்பையும், தொழிற் சங்கப் போராட்டங்களையும் மீறி தனியார் மயத்தை ஊக்கப் படுத்தவும், பொதுத் துறை வங்கிகளை வலுவிழக்கச் செய்யவுமான சீர்திருத்தங்கள் சட்டமாக இயற்றப் பட்டு விட்டன. இவற்றை நடைமுறைப் படுத்த விடாது எதிர்த்துப் போராடும் தொழிற்சங்க போராட்டங்களை முடக்கும் நோக்கோடுதான் வங்கி வாரி ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் கழகம் முன்னிறுத்துகிறது. போராட்ட ஒற்றுமையை உடைக்கும் நோக்கோடு வேறு சில முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளின் அடிநாதம் என்று பார்த்தால் நியாயமான ஊதிய உயர்வு, ஆரோக்கியமான வேலைச் சூழல், பொதுத் துறை பாதுகாப்பு என்று சொல்லலாம். இந்தக் கோரிக்கைகளின்பால் சீரிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லாத நிர்வாக அமைப்புதான் குற்றவாளியே தவிர, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்று போராட்டத்தில் குதிக்கவில்லை. பேச்சு வார்த்தையின் போக்கை தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. ‘வங்கித் துறை வேலைகள் அத்தனை வசீகரமாக இருக்க வேண்டியதில்லை, ஊதிய நிலைமை மேம்படுத்தித் தரவேண்டியதில்லை, ஆட்குறைப்புக்கும் அது வசதிப்படும்‘ என்ற உள்நோக்கம் அவர்களுக்கு இருப்பதாகக் கருத இடம் உண்டு. அதனாலும் கூட இந்தப் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.வங்கித்துறை உள்ளிட்ட நிதித் துறையைச் சீரழிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும், இதே பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் இந்தக் கருத்தில் நிச்சயம் வேறுபாடு கிடையாது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் நவீன தாராளமயக் கொள்கையில் கிஞ்சிற்றும் வித்தியாசம் கிடையாது. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களில் எழுச்சியோடு பங்கேற்றுவரும் வங்கி ஊழியர் - அதிகாரிகளின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் குரலும் அந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒலிப்பவை. இந்தப்போராட்ட உணர்வுகளை மாற்றுக் கொள்கை களுக்கான வேட்கையாக வளர்த்தெடுக்கவும், அரசியல் களத்தில் அதன் பிரதிபலிப்பை ஏற்படுத்தவும் கூட வழி வகுக்கட்டும் இந்தப் போராட்டம்.

Sunday, February 9, 2014

சேவை வரியை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு முன்பு உண்ணாவிரதம்
எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் அறிவிப்பு


சென்னை, பிப். 8-
சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பிப். 20 அன்று மத்திய நிதி அமைச் சரின் வீடு முன்பு உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளதாக எல்ஐசி முகவர் கள் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.சுத்தானந்தம் தெரி வித்தார். அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார் பில் பிப். 5 முதல் 8 வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென்மண்டல அலு வலகம் முன்பு நடைபெற் றது.
நான்கு நாட்கள் நடை பெற்ற இந்தப் போராட்டத் தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து ஆயிரத் திற்கும் மேற்பட்ட முகவர் கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் எஸ்.சுத்தானந்தம் பேசுகை யில் “ எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்றார். குறைந்த பட்ச பாலிசி தொகையை 50 ஆயிரம் ரூபாயாக குறைக்க வேண் டும், பாலிசிகளை புதுப்பிக் கும் ஆண்டை மீண்டும் 5 வருடமாக மாற்ற வேண் டும், பாலிசி எடுக்க நுழைவு வயதை மீண்டும் 65 ஆக உயர்த்த வேண்டும், பாலிசி காலத்தை பழைய முறைப் படி தொடர்ந்திட அனும திக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இந்த உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிப். 20 அன்று தில்லியில் மத்திய நிதிமைச்சர் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள் ளோம். அடுத்தநாள் பிப். 21 ல் அனைத்து கட்சி,அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்கும் தேசிய அளவி லான கருத்தரங்கமும், நடை பெறுகிறது என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.ஏ.கலாம் தலைமை தாங்கினார்.
அகில இந்திய செயல் தலைவர் எஸ்.எஸ்.போட்டி, எல்.ஐ.சி.பென்சனர் அசோசியேசன் தலைவர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,தென் மண்டல செயலாளர் எம்.செல் வராஜ், மாநிலப் பொருளா ளர் கே.தாமோதரன், டி.சி. லோகநாதன், வெங்கடே சன், ஆர்.முருகேசன் உள் ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.என்.தியாக ராஜன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.