Saturday, March 22, 2014

மக்கள் தலைவர் ஏ.கே.ஜி.
அ.அன்வர் உசேன்

மார்ச் 22 : ஏ.கே.ஜி. நினைவுநாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் புரட்சிகர அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய நவரத்தினங்களில் ஒருவர் ஏ.கே.ஜி. என அன்புடன் அழைக்கப்படும் தோழர் ஏ.கே. கோபாலன் 1977ல் மறைந்த அந்த மாபெரும் தலைவரின் வாழ்வு ஒவ்வொரு பொதுவுடமை போராளியும் கற்றுணர வேண்டிய அரிய பாடம் ஆகும். விடுதலைப் போரும் சமூக மாற்றத்திற்கான போரும்தோழர் ஏ.கே. ஜி. அக்டோபர் 1ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே சமூகப்பணியில் ஆர் வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பள்ளிஆசிரியராக பணியாற்றினார்.
விடு தலைப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த சமயத்தில் தனது பணியை புறக் கணித்துவிட்டு தேசபக்தி இயக்கத்தில் இணைந்தார். விடுதலைக்காக பல சமயங்களில் சிறைவாசம் இருக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. விடுதலைப் போருடன் இணைந்து சமூகப் போராட்டங் களிலும் ஏ.கே. ஜி கலந்து கொண் டார். தலித் மக்கள் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு அவர் “கேப்டனாக” தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சனா தனிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். எனினும் இப்போராட்டத்திற்குப் பிறகு கோவில்களும் அதனை நோக்கிய சாலைகளும் அனைவருக்கும் திறக்கப் பட்டன.முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய ஏ.கே.ஜி. தம்மை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்தார். அவரது வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதில் 6 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் சிறைவாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
1941ம் ஆண்டு ஒரு முறை சிறையில் இருந்து தப்பித்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங் கினார்.தேசம் சுதந்திரம் அடைந்த பொழுதுஏ.கே.ஜி. கண்ணூர் சிறையில் தனி மைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. தேசம் முழுவவதும் விடுதலையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த ஏ.கே. ஜி. சிறையில் வாடிக்கொண்டிருந்தார். காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அந்தப் போராளி மீது அவ்வளவு கோபம் மற்றும் பயம். அந்தச் சூழல் குறித்து ஏ.கே. ஜி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“கேரளா காங்கிரஸ் கமிட்டியின் செய லாளராகவும் அதன் தலைவராகவும் மற் றும் நீண்ட காலத்திற்கு அகில இந்திய கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த நான் ஆகஸ்டு 15 அன்று சிறையில் இருக்கிறேன்!”எனினும் அவர் விடுதலையை கொண்டாடாமல் இருக்கவில்லை. ஆகஸ்ட் 15ம் நாள் ஒரு தேசியக்கொடியை கையில் எடுத்துக்கொண்டு சிறை வளாகத்தினுள் முழக்கமிட்டபடி நடந்தார். கைதிகளை ஒன்றிணைத்து கூரையின் மீது தேசியக்கொடியை ஏற்றினார். விடுதலையின் பொருள் என்ன என்று கைதிகளிடையே உரையாற்றினார்.
புரட்சிகர நாடாளுமன்றப் பணிக்கு இலக்கணம்
ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத்தில் புரட்சிகரமாகச் செயல்படுவது எப்படி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் ஏ.கே.ஜி. எனில் மிகையாகாது. 1952, 57, 62, 67, 71 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் ஏ.கே. ஜி. அவர்கள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதன் மூலம் பல சலுகைகள் கிடைக் கின்றன.வாழ்வின் மேல்தட்டு மக்க ளோடு பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பணம்படைத்த பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு ஏராளம்! ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின் பிரதிநிதி விழிப்புடன் இல்லை யெனில் சறுக்கலுக்கு ஆபத்து மிக அதிகம். அது அழிவின் பாதைக்கு இட்டுச் செல்வதும் திண்ணம்.
இவ்வாறு தடம் புரண்ட முதலாளித்துவ கட்சிகளின் பிரதிநிதிகள் ஏராளம்!எனினும் தொழிலாளி வர்க்கக் கட்சியின் பிரதிநிதிகள் இந்த அழிவுப்பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை.இதற்கு இலக்கணம் வகுத்த பெருமை தோழர் ஏ.கே. ஜி.யையே சாரும். நீண்ட நெடிய காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந் தாலும் அந்தச் சூழலினால் ஒருபோதும் தோழர் ஏ.கே.ஜி. மயங்கியது கிடையாது. இதற்கு அடிப்படைக்காரணம் தோழர் ஏ.கே.ஜி.க்கு இருந்த உழைக்கும் மக்களின் ஆழமான தொடர்பும் பொது வுடமை இயக்கத்தின் மகத்தான கொள்கைகளும்தான்!தோழர் ஏ.கே. ஜி. உரையாற்றுகிறார் என்றால் ஒட்டு மொத்த நாடாளுமன்றமும் அமைதியுடனும் கவனத்துடனும் அவரது உரையை செவிமடுக்கும். அத்தகைய ஆளுமையை தோழர் ஏ.கே. ஜி. அவர்கள் பெற்றிருந்தார்.1975ல் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து அவர் ஆற்றிய உரை, இல்லை அவரது கர்ஜனை இந்திய நாடாளுமன்றத்தின் மிகச்சிறந்த உரைகளில் ஒன்று! ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவருக்கும் அவசரகால நிலையை எதிர்த்துப் போராட தோழர் ஏ.கே.ஜி.யின் உரை மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
ஏ.கே.ஜி.யின் பணி நாடாளுமன்றத் திற்கு வெளியேதான் அதிகமாக இருந்தது.அந்தப் போராட்டங்களை ஆள்வோரின் கவனத்திற்கு கொண்டு வரும் ஒரு மேடையாகவே நாடாளுமன்றத்தை ஏ.கே.ஜி. பயன் படுத்தினார். பஞ்சாப் விவசாயிகள் போராட்டமா? அங்கு தோழர் ஏ.கே. ஜி. இருந்தார். தமிழகத்தில் போராட்டமா? தோழர் ஏ.கே.ஜி. பங்கேற்பு இருந்தது. குஜராத் மொழிவாரி மாநிலப் போராட்டமா? அங்கும் தோழர் ஏ.கே. ஜி. இருந்தார்.தோழர் ஏ.கே.ஜி. இல்லாமல் கேரளாவின் எந்த ஒரு போராட்டமும் நடந்தது இல்லை. ஒரு காலத்தில் தில்லியில் “போராட்டம் என்றால் ஏ.கே.ஜி; ஏ.கே.ஜி.என்றால் போராட்டம்” என பேசும் அளவிற்கு அவரது போராட்ட வாழ்வு இருந்தது.இந்தப் போராட்டங்களின் பிரச்சனைகளை விவாதிக்கவே நாடாளுமன்றத்தை ஏ.கே.ஜி. பெரும்பாலும் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்திற் குள்ளும் வெளியேயும் போராட்டப் பிரச்ச னைகளை ஒருங்கிணைப்பதில் அவர் மிகத் திறமையாகச் செயல்பட்டார். எனவே தான் புரட்சிகர நாடாளுமன்றப் பணிக்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் ஏ.கே. ஜி.
தோழர் ஏ.கே.ஜி.யின் பாரம்பரியத்தை கற்போம்
கேரளாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தளம் இட்டு உரமேற்றி யவர்கள் மூவர். அவர்கள் தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, இ. எம். எஸ். நம்பூதிரிபாட் மற்றும் தோழர் ஏ.கே.ஜி. ஆகியோர் தோழர் ஏ.கே.ஜி. மக்களோடு எந்த அளவிற்கு நெருங்கி இருந்தாரோ அந்த அளவிற்கு மார்க்சிய-லெனினியம் மற்றும் சர்வதேசக் கோட்பாடுகளிலும் உறுதியாக இருந்தார். 1977ம் ஆண்டு மறைந்த தோழர் ஏ.கே.ஜி. ஒரு செழுமையான பொது வுடமை பாரம்பரியத்தை விட்டுச் சென் றுள்ளார். அந்த பாரம்பரியத்தை கற்பதும் அதனை அமல்படுத்துவதும் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் கட்சிப் பணியில் மிகுந்த பலன் தரும் என்பதில் அய்யமில்லை!

Saturday, March 15, 2014

அரசியல் களம்காண இளைஞர்கள் முன்வர வேண்டும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. அழைப்பு

ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளா தாரத்தை வழிகாட்டுவது, வழிநடத்துவது தான் அரசியல். இந்த அரசியலின் தொடர்ச் சிதான் யுத்தம். இராமாயண, மகாபாரத காலத்திலிருந்து பொருளாதாரத்திற்காக சொத்திற்காகத்தான் போர் நடந்துள்ளது. பொருளாதாரத்தை தெரிந்து கொள்ளாமல் அரசியலை புரிந்து கொள்ள முடியாது. நமது இந்தியாவில் 1990 வரை ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் நிலவியது. 1990க்கு பின்னர் நவீன தாராளமய கொள்கை காரணமாக திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டது.
நவீன தாராளமயக் கொள்கையினால் விஞ்ஞான முன்னேற்றம் குறிப்பாக தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, மென் பொருள், கட்டுமானப் பணிகள் என்பனவற்றில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. இந்த வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது சாதாரண மக்கள், உழைப்பாளி மக்களுக்கு பயன்படவில்லை. மாறாக வேலையின்மை, வேலை வாய்ப்பின்மை மேலோங்கி உள்ளது.அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய எண்ணெய் வளத்தை பாதுகாத்துக் கொண் டிருக்கிறது. அதே வேளையில் ஈரான், இராக் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அனைத்து முயற்சிகளும் ஏன் இராணுவத்தின் மூல மாக கூட முயற்சி செய்து வந்துள்ளது.
குறிப் பாக இராக் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், மனித உரிமைகள் மீறப்படுகிறது என்றும், அணு ஆயுதங்கள் உள்ளன என் றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேட் டோ படைகள் மூலமாக போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது.நமது நாட்டில் எண்ணெய், எரிவாயு போன்றவற்றை இந்திய ரூபாய் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஈரான் கூறி யது. ஆனால் அமெரிக்கா தலையிட்டு நமது அரசுக்கு ஈரானில் இருந்து எவ்வித வர்த்த கமும் செய்யக்கூடாது என்று தடை போட் டது. மேலும் ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ளது என்று குற்றச்சாட்டு கூறி ஈரான் மீது படையெடுக்க முனைந்தது. மேலும் இந்நாட்டிற்கு ஐ.நா. மூலம் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்விசயத் தில் இந்தியா மௌனம் சாதித்தது. காரணம் இந்திய அரசு உலகமயம் அமல்படுத்தப் படுமென்று உலக நாடுகளுக்கு கையெழுத் திட்டுள்ளது.எந்த நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று உலகமயம் நிர்ண யிக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக பொரு ளாதார வளர்ச்சிக்காக எந்த நாடும் சுதந்திர மாக சட்டத்திட்டங்கள் நிர்ணயிக்க இய லாது.
சந்தைப் பொருளாதாரத்தில் அந்நாட் டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அந்த முதலாளிகள் விலை நிர்ணயிக்க முடியாது. மாறாக அமெரிக்கா தலைமையில் இருக் கும் உலக சந்தைதான் விலை நிர்ணயிக் கும். அதன் நோக்கம் வர்த்தகம் செய்பவர் களுக்கு லாபம் அதிக லாபம் என்பதுதான்.உலகமயத்தின் அதிர்வுகளினால் இந்திய அரசு மக்களை காக்கும் மிக முக் கியமான பொறுப்பிலிருந்து விலகி, பன் னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரும் முதலாளிகள் நலன்களை மட்டுமே பாதுகாத்து வருகிறது.சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளா தாரத்தை ஸ்திரப்படுத்திட, மேம்படுத்திட இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங் களை துவக்கியது. அதன் மூலம் சிறு தொழில்கள், இணைத்தொழில்கள் என ஏற்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரு வாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நவீன தாராளமயக் கொள்கையினால் அரசின் தொழில்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஏற்பாடுகள் நடந்தேறி வருகிறது.சந்தைப் பொருளாதாரத்தின் விளை வாக விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
யூக வணிகம், முன்பேர வர்த்தகம், ஆன் லைன் வர்த்தகம் என புதிய முறைகளினால் பொருட்கள் பெரும் முதலாளிகளால் பதுக்கல் செய்யப் பட்டு அதனால் செயற்கை தட்டுப் பாட்டை ஏற்படுத்தி, சந்தையில் பல மடங்கு விலைவாசி உயர்த்தப்படுகிறது.நாம் பயன்படுத்தும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டு மக்கள் இலவசமாக பயன்படுத்திய தண்ணீர் தற்போது பாட்டில்களில் அடைக் கப்பட்டு பால் விலையைவிட அதிகமாக விற்கப்படுகிறது. ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த தண்ணீர் வியாபாரம் டாடா, கின்லே போன்ற பெரும் முதலாளிகள் கைவசம் வைத்துள்ளார்கள். அதேபோன்று சுகாதாரமும் தனியார் கையில் சிக்கி விலை பொருளாக மாற்றப் பட்டுள்ளது. உதாரணமாக நோய் தடுப்பூசி நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நமது நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் விற்கப்பட்டு வந் தது. ஆனால் அரசின் உலகமய கொள்கை யினால் உலக சுகாதார அமைப்பின் பரிந் துரைகளுக்கு உட்பட்டு அரசு அந்த மருந்து நிறுவனங்களை மூடிவிட உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் பல்வேறு முற்போக்கு தேசப்பற்று அமைப்புகளை திரட்டி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளை வாக அந்நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.தாராளமயத்தின் நோக்கம் என்ன வெனில், எதை அது உருவாக்கியதோ அது தனியாரிடமே இருக்க வேண்டும் என்பது தான். எந்த ஒரு அரசும் நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்திட வேண் டுமே தவிர அதைக் கட்டுப்படுத்திடவோ, தளர்த்திடவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை என்று இந்திய பெரும் முதலாளிகளும், பன்னாட்டு பெரும் நிறு வனங்களும் கூறி வருகின்றனர். அதனால் தான் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, எண்ணெய் படுகை போன்றவற்றில் பெரும் முதலாளி கள் பல லட்சக்கணக்கான கோடிகள் சம் பாதித்துள்ளனர்.
அரசியல் வாதிகள், பெரும் முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணியால்தான் இந்த கொள்ளைகள் நடந்து வருகின்றது.இந்தியா வளர்ந்துள்ளது ஆம். மத்திய தர வர்க்கத்தினர் மற்றும் பெரும் பணக் காரர்கள்தான் வளர்ந்துள்ளார்களே தவிர சாதாரண மக்கள், உழைப்பாளி மக்கள் வளரவில்லை. இன்றைய இந்தியாவை நாம் இரண்டாக சித்தரிக்கலாம். ஒரு பகுதி இந்தியா ஒளிர்கிறது. மற்றொரு பெரும் பகுதி இந்தியா வாடுகிறது. ஒளிரும் இந்தியாவில் 20 சதவீத மக்கள் பயன் பெறுகிறார்கள். வாடும் இந்தியாவில் 80சதவீத மக்கள் வேலையின்றி வாழவழியின்றி அவதிப் பட்டு வருகின்றனர்.ஊடகங்கள் உண்மையான நிலை களை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தென்னாப்பிரிக்காவில் 28சதவீதம், இந்தி யாவில் 9.9சதவீதம், அமெரிக்காவில் 3 சதவீதம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின் றது.
ஆனால் இந்தியாவில் 15 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக் கின்றனர். தமிழகத்தில் மட்டும் 90லட்சம் பேர் இளைஞர்கள், 3 லட்சம் இளம் பொறி யாளர்கள் வேலைதேடி அலைகின்றனர். ஏன்? உற்பத்தி அதிகமாகிறது, ஆனால் வேலைவாய்ப்பு இல்லை. ஏனெனில் ஒரு பக்கம் தொழில்கள் நவீனமயமாகிறது. மற்றொரு பக்கம் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தப் படுகிறது.இந்திய அரசின் தவறான கொள்கை களினால் இன்றைக்கு 4.5 கோடி சிறு வியா பாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து வால்மார்ட், டெசோ என்ற பகாசுர கம்பெனிகள் இந்திய சில்லரை வர்த்தகத்தை சூறையாட உள்ளது. ஆனால் சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும்போது 72 சதவீத பொருட்கள் சீனாவில் உற்பத்தி யாவதைத்தான் கொள்முதல் செய்திட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது.இந்த நவீன தாராளமய கொள்கை யினால் இந்தியாவில் கலாச்சார சீரழிவு வளர்ந்துள்ளது. குறிப்பாக பாலியல் வன் முறைகள் 50 சதவீதமும், குழந்தை கடத்தல்கள் 100 சதவீதமும் அதிகமாகி யுள்ளது. மேலும் மனித உறவுகள் பணத் துடன் இணைத்து பெண்களை ஒரு போகப் பொருளாக சித்தரித்துள்ளது.
அரசு நினைத்தால் மூலதனத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் நலத்தை பார்க்காமல் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது.மூலதனத்தின் போக்கில் மனிதன் சென்றால் அவன் மனிதனாக இருக்க முடி யாது. அந்நிய மூலதனத்தை கண்மூடித் தனமாக எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை. அந்த மூலதனம் புதிய தொழிற்சாலை களை உருவாக்கிட வேண்டும். உள் கட்ட மைப்புகளை உருவாக்கிட வேண்டும். அப் போதுதான் சிறு மற்றும் உபதொழில்கள் உரு வாகும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு கள் உருவாகும்.
ஆகவே இந்திய அரசு நவீன தாராளமய கொள்கைகளை தவிர்த்து இந்திய நாட்டு மக்களுக்கு, இளைஞர் களுக்கு உரிய வளர்ச்சிக் கொள்கைகளை வகுத்திட வேண்டும். இந்திய நாட்டின் அடிப்படை அமைப்பை மாற்றிட முயற்சி களை இன்றைய இளைஞர் சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.அரசியல் என்பது புனிதமானது. இன் றைய அரசியலில் ஏராளமான படித்த இளை ஞர்கள் களம் புகுந்து இந்திய தேசத்தை பாது காத்திட வேண்டும்.
(சேலம் பைசியா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்ஆற்றிய உரையிலிருந்து)தொகுப்பு : கே.சி.கோபிகுமார்

Thursday, March 13, 2014

மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்
வெங்கடேஷ் ஆத்ரேயா

மார்க்ஸ் இறந்து 131 ஆண்டுகளாகின்றன. அவர் பிறந்து 196 ஆண்டுகள் முடியப் போகிறது. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்துக்கள், அவர் உருவாக்கிய தத்துவம், நடைமுறையிலும், கருத்துத் துறையிலும் இன்றும் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது.மானுடத்தின் எதிர்காலம் சோசலிசம், அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். ஆனால் இன்றுவரை லட்சோப லட்சக்கணக்கான மக்கள் விரும்பும் சோசலிசம் உலகம் முழுவதிலும் மலரவில்லை.
நெருக்கடி நிறைந்த அமைப்பு என்று மிகச் சரியாக மார்க்ஸ் கணித்த, வரலாற்று வளர்ச்சியில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிய முதலாளித்துவ அமைப்பு இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள இவ்வுலகில், சோசலிச சமூகத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட துவக்க முயற்சிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இவையெல்லாம் உண்மையாக இருந்தும், மார்க்ஸின் தத்துவமும் அவரது தீர்க்கதரிசனப் பார்வையும் இன்றும் வலுவானவை, பொருள்மிக்கவை என்றே கணிசமான பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் ரகசியம் என்ன?முதலாவதாக, மானுட சிந்தனை ஓட்டத் தில் ஒரு மிக அடிப்படையான பங்களிப்பின் மூலம் புதிய சிந்தனைக்கு வித்திட்டார் அவர்.
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின் றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற் றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். வரலாறு என்பது அரண்மனை சூழ்ச்சிகள், யுத்தங்கள், அரசகுல சந்ததிகள் அவர்களின் வீரதீரச் செயல்கள் ஆகியவற்றின் வர்ணனை அல்ல என்று உணர்த்தி மானுட சிந்தனை வளர்ச்சியில் புதியதடம் பதித்தார். மனிதர்களை, அவர்களது உணர்வுப் பூர்வமான, நோக்கம் சார்ந்த செயல்பாட்டை - மனித உழைப்பை -மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மையமான இடத்தில் மார்க்ஸ் வைத்தார்.
மனிதர்கள் தங்களது உணர்வுப்பூர்வமான உற்பத்தி சார் நட வடிக்கை மூலம் இயற்கையை மாற்றி தங்களது வாழ்வுக்கான பொருட்களை உரு வாக்கிக் கொள்கின்றனர். இதுதான் மானுட உயிரினத்தின் தனிச்சிறப்பு என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன்மூலம், மானுடமும் வளர்ந்தது, மாறியது, தொடர்ந்து புதிய அறிவையும், திறன்களையும் பெற்றுக் கொண்டே வந்தது, இயற்கையின் செயல் முறைகளை மேலும் மேலும் ஆழமாகத் தெரிந்து கொண்டது, இந்த அறிவு மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இவ்வாறாக, உற்பத்திசக்திகள் இடையறாது வளர்வது என்பது மானுட வரலாற்று வளர்ச்சியின் மாறாத அம்சமாக உள்ளது.மானுட வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்ஸ் முன்வைத்த மிக முக்கியமான இரண்டாவது அம்சம், உற்பத்தி என்பது தனிமனித செயல் அல்ல, எப்பொழுதும் ஒரு சமூக ஏற்பாட்டின் மூலம்தான் அது நிகழ முடியும் என்பதாகும். மனிதர்கள் இணைந்துதான் உற்பத்தியில் ஈடுபட முடியும்.
மானுட வளர்ச்சியின் எல் லாக் கட்டங்களிலும் உற்பத்தி சமூகத்தின் வாயிலாகவே நிகழ்கிறது.மூன்றாவதாக, மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ந்து வருவ தால், அவை நடப்பில் உள்ள சமூக உற்பத்தி ஏற்பாடுகளுடன் ( இவற்றை மார்க்ஸ் சமூக உற்பத்தி உறவுகள் என்று வர்ணித்தார்)முரண்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று மார்க்ஸ் நிரூபித்தார்.நான்காவதாக, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி யடையும் பொழுது சமூகத்தில் உபரி உற்பத்தி உருவாகும். இது, மற்ற மக்களை உழைக்க வைத்து அவர்கள் உழைப்பு மூலம் சமூகத்தின் ஒரு சிறு பகுதி வாழ முடியும் என்ற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. வேறு வகையில் சொன்னால், உபரி, வர்க்க சமூகத்தையும், வர்க்க சுரண்டலையும் சாத்தியமாக்குகிறது. சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்கப் பிரிவினை கொண்ட வர்க்க சமூகம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு சிறுபகுதி பெரும்பகுதி மக்களை சுரண்டுவது இச்சிறு பகுதி சமூகத்தின் உற்பத்திக் கருவிகளை தனது ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு சமூக உற்பத்தியின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம்தான் சாத்தியம்.
இத்தகைய, ஏற்றத் தாழ்வான சமூக ஏற்பாட்டை நடைமுறைப் படுத்தவும், சுரண்டப்படும் பெரும்பகுதி மக்களை சுரண்டும் சிறுபகுதியினருக்கு உழைத்திடச் செய்வதற்கு உகந்த கருவியாக அரசு செயல்படுகிறது. ஆளும் வர்க்கம் அரசு அடக்குமுறை மூலம் மட்டுமே ஆள முடியாது. தத்துவமும் தேவை. சுரண்டப்படுவோரையே சுரண்டலை நியாயம் என்று கருத வைக்க, மதம், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட பல தத்துவார்த்தக் கருவிகள் பயன்படுகின்றன.உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், அதற்கான வர்க்க சமூகமும் மானுட வரலாற்று வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை என்பதைமட்டும் மார்க்ஸ் கூறி இருந்தால், சுரண்டலையும் வர்க்க ஆட்சியையும் நியாயப்படுத்தஅவரது கருத்துக்களை ஆளும்வர்க்கங்கள் பயன்படுத்தியிருக்கமுடியும். ஆனால் மார்க்ஸ் அத்துடன் நிற்கவில்லை. வர்க்கப் போராட்டங்கள் மூலம், வர்க்கச் சமூக அமைப்புகளை தூக்கி எறிய முடியும், மானுட வரலாற்று வளர்ச்சியில் வர்க்க வேறுபாடு அற்ற சமூகத்தை உரு வாக்க முடியும் என்று காட்டியது மார்க்ஸின் மகத்தான பங்களிப்பாகும்.
மானுட வரலாற்று வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மானுடத்தை இட்டுச் செல்லும் வர்க்கம் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிய வெளிச்சம் அளித்தது மார்க்ஸ்தான். இதையொட்டித்தான், நிலப்பிரபுத்துவ அமைப்பை தூக்கி எறிவதில் முதலாளி வர்க்கம் முக்கியபங்காற்றும் என்பதையும், நவீன உலகில் முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதில் தொழிலாளி வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்பதையும் மார்க்ஸ் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, மானுட சமூகம் சோசலிசத்தையும் அதற்கு அடுத்து கம்யூனிசத்தையும் நோக்கி பீடுநடை போடும் என்று அவர் நமக்கு திசைவழி காட்டிச் சென்றுள்ளார்.வரலாற்றையும், வரலாற்றுக் கட்டங்களை யும் ஆண்டுகளிலோ, பத்தாண்டுகளிலோ, நூற்றாண்டுகளிலோ கூட, அளவிட முடியாது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு தோன்றி அது உலகம் முழுவதும் பரவவும், தனது இன்றைய ஆதிக்க நிலையை அடையவும் பல நூறு ஆண்டுகள் எடுத்துள்ளது என்பது நம்முன் உள்ள அனுபவம்.
வர்க்கச் சுரண்டலற்ற, சுய உணர்வுடன் தன்னை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் நியாய மான மானுட சமூகத்தை உருவாக மேற் கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள் ஏகாதிபத்திய - முதலாளித்துவ உலக சூழலில் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது வியப் பல்ல. இம்முயற்சியின் நிரந்தர தோல்வியும் அல்ல. சோசலிசத்தை கட்டும் முயற்சிகள் இளம்சோசலிச நாடுகளை அழித்தொழிக்க ஏகாதிபத்தியம் செய்த அத்தனை ஈனத்தனமான முயற்சிகளுக்கு மத்தியிலும், மிகவும் பின் தங்கிய சூழலில் இருந்து பாய்ச்சல் வேகத்தில் முன்னேறின என்பது வரலாற்று உண்மை. தொழில்நுட்பம், சந்தைகள், நிதி, ஊடகம் என்று பலதுறைகளில் ஏகாதியபத்தியத்தின் ஏகபோக கிடுக்குப்பிடி இருந்தும் கூட, தொழில்நுட்பம் மறுக்கப்பட்டு, வணிக பகிஷ்கரிப்பையும் எதிர்கொண்டு, காலனிச் சுரண்டலின்றி, உழைக்கும் மக்களை புறக்கணிக் காமல், அனைவருக்கும் கல்வி, வேலை, ஆரோக்கியம், மகத்தான தொழில் வளர்ச்சி, உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் காக்க மகத்தான பங்களிப்பு இவை அனைத்தும் 20ஆம் நூற்றாண்டு சோசலிச முயற்சிகளின் சாதனைகள்.
இவற்றிற்கு வழிகாட்டியது மார்க்ஸின் தத்துவம், அரசியல் - பொருளாதாரம், சோசலிசப் பார்வை.நாம் இன்று மேற்கொண்டிருப்பது எதிர்மறையான உலகில், வீர மும் விவேகமும் மிக்க முயற்சிகளால் சோசலிசத்தை நிர்மாணிக்கும் வரலாற்றுப் பணியாகும். மானுட சமூகத்தின் சம கால முற்போக்கு சக்திகள் இப்பணியில் களம் இறங்கி உள்ளோம். இது மாபெரும் சவால். நம்முன் நீண்ட கடுமையான பயணம் உள்ளது. ஆனால் அதன் இறுதியில் மானுடம் அடையப் போவது மகத்தான விடுதலை. இந்த உன்னத இலட்சியத்திற்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அது தேவையே சிறந்ததே. சோசலிசத்தின் இறுதி வெற்றியை சாத்தியம் ஆக்கிட தலைமுறை தலை முறையாய் நாம் பாடுபடுவதே மார்க்சுக்கு நாம்செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.தனது 17வது வயதில் மார்க்ஸ் எழுதினார்:“மானுட முன்னேற்றத்திற்காக நமது வாழ்வைஅர்ப்பணிப்பதே மிகச்சிறந்த வாழ்வாகும்”வாழ்வில் அவ்வாறே வாழ்ந்து காட் டினார் அவர்.
(கட்டுரையாளர் : பொருளாதார அறிஞர்)
சிபிஎம் ஆந்திர மாநிலக்குழு இரண்டாகப் பிரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் டி.வீரபத்ரம் (இடது) மற்றும் ஆந்திர மாநிலச் செயலாளர் பி.மது(வலது) ஆகியோரை செய்தியாளர்களிடம்அறிமுகப்படுத்தி பேசினார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு.
ஹைதராபாத், மார்ச் 13 -
ஆந்திர மாநில பிரிவினையைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழு செயலாளராக டி.வீரபத்ரம் (தம்மினேனி வீரபத்ரம்), ஆந்திர மாநிலச் செயலாளராக பி.மது(பெனுமல்லி மது) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தை தெலுங்கானா என்றும் சீமாந்திரா என்றும் இரண்டு மாநிலங்களாக பிரிப்பதற்கான ஆந்திரப்பிரதேச மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரப்பிரதேச மாநிலக்குழுவை இரண்டாக பிரித்துள்ளது. கட்சியின் ஆந்திரப்பிரதேச மாநிலக்குழு கூட்டம் கடந்த மார்ச் 8ம்தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பி.வி.ராகவலு, மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு தெலுங் கானா மாநிலக்குழு என்றும் ஆந்திர மாநிலக்குழு என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது.தெலுங்கானா மாநிலக்குழுவில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆந்திர மாநிலக்குழுவில் 44 பேர் இடம்பெற்றுள்ளனர்.இரண்டு மாநிலக்குழுவும் தனித்தனியாக கூடி மாநிலச் செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்தன.தெலுங்கானா மாநிலச் செயலாளராக டி.வீரபத்ரம் தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.வீரய்யா, எஸ்.மல்லா ரெட்டி , ஜி.நாகையா, சி.எச்.சீத்தாராமுலு மற்றும் சுக்கா ராமுலு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
ஆந்திர மாநில செயலாளராக பி.மது தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக பி.ராமுலு, எம்.ஏ.கபூர், எஸ்.புண்ணிய வதி, வி.கிருஷ்ணய்யா, ஒய்.வெங்கடேஷ்வரராவ், சி.எச்.நரசிங்க ராவ் மற்றும் மிடியம் பாபு ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு இந்த முடிவுகளை அறி வித்து, புதிய மாநில செயலாளர்களை அறிமுகம் செய்தார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகவலு, மக்களவைத் தேர்தல் என்பது ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெறு கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். ஆந்திர சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 33 தொகுதிகளில் கட்சி போட்டியிடும் என அறி வித்தார். காங்கிரஸ் பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டு போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது; அப்படியொரு உடன்பாடு ஏற்பட்டால் கட்சி போட்டியிடும் இடங்கள் குறையக்கூடும்; உடன்பாடு இல்லையென்றால் மேலும் கூடுதலான இடங்களில் கட்சி போட்டியிடும் என்றும் ராகவலு தெரிவித்தார்.

Wednesday, March 12, 2014

ஊழல்: காங்கிரஸ் - பாஜக லாவணி

குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி
குஜராத் இப்போது மோடி எதிர்ப்பாளர்களின் தாக்குதல் அலைகளைக் கண்டு வியந்து போய் நிற்கிறது. மோடியை ஒரு அஜாத சத்ரு என்று நம்பி ஏமாந்த குஜராத் மக்கள் இன்று இவர்களின் பின்னால் திரள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், ஆம் ஆத்மி கெஜ்ரிவாலுக்கும் கிடைக்கும் வரவேற்பு இதைத்தான் காட்டுகிறது. ஆனால்இவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களும் மோடிக்குப் பின்னால் நிற்பவர்கள்தான் என்பதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவர்களின் முதலீடு மக்களின் மகத்தான ஞாபகமறதிதான் முதலாளித்துவ, மதவெறி வலதுசாரிகளின் முதலாக இருப்பதால் மக்களின் ஞாபக சக்தியை தூண்டிவிட வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.மோடி ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் வாரி வழங்குகிறார் என்று ராகுல் காந்தி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. நானோ கார்களை சாலைகளில் பார்த்தீர்களா என்று அவர் குற்றம் சாட்டிய போது கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தார்கள். குஜராத்தில் வறுமைக்கோட்டின் அளவுகோல் வெறும் ரூ.11 தான். ஆனாலும் குஜராத் மிளிர்கிறது என்று மோடி பீற்றுகிறார் என ராகுல் காந்தி கூறினார். குஜராத்தில் முதலீடு செய்துள்ள 10-15 தொழிலதிபர்களுக்கு மட்டும் குஜராத் மிளிர்கிறது. அவர்களுடைய அரண்மனை போன்ற மாளிகைகள், சொகுசு கார்கள், விமானங்கள் ஆகியவை மிளிர்கின்றன.
சாதாரண குஜராத் குடிமகனின் வாழ்க்கை மிளிரவில்லை என்றுராகுல் முதலைக்கண்ணீர் விட்டார். இந்தியாவின் காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டதை ராகுல் கிண்டலடித்தார். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று பிரிட்டிஷார் கூறிக்கொண்டார்கள். அவர்களை நாம் விரட்டி விட்டோம். எந்தவொரு தனிநபரையும் காவலாளியாக வைத்துக்கொள்ளும் அவசியம் இந்தியாவுக்கு இல்லை. ஒவ்வொரு இந்தியரும் அதன் காவலாளிகள் ஆகும் வண்ணம் அனைவருக்கும் அதிகாரம் அளிப்போம் என்று ராகுல் கூறியுள்ளார். இந்தியாவை ஒரு சிறிய காலம் தவிர, தனியாகவோ, கூட்டணியாகவோ நீண்ட காலமாக ஆண்டுவரும் கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த காலங்களில் எந்தவொரு இந்தியரும் அதிகாரம் படைத்தவர்களாக உயரவில்லை. மாறாக செல்வந்தர்களும், தொழில் நிறுவனர்களும், முதலாளிகளும், அவர்களின் ஆதரவில் ஆட்சி நடத்தும் சில அரசியல் கட்சித்தலைவர்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாறியுள்ளனர் என்பதை ராகுல் காந்திக்கு யாராவது எடுத்துக் கூற வேண்டும். மக்களிடம் உரையாற்றுவோரை விட மக்களின் பேச்சுக்கு காதைத் தருவோர்தான் உண்மையான தலைவர் என்று தலைமைக்கு ராகுல் இலக்கணம் அளித்தார்.
மகாத்மா காந்தி இது போன்றதொரு தலைவர். ஆனால் இட்லர் போன்றவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல் நடந்து கொள்வதுடன் அதிகாரபோதை கொண்டு அலைகிறார்கள் என்றும் மற்றவர்களை முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள் என அவர் சொன்னார். ஒரு காலகட்டத்தில் அகமதாபாத்தில் சர்தார் படேல் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று அவருக்கு சிலை வைக்கப் போவதாக கூறுகிறார்கள் என்றும் அவர் கிண்டலடித்தார். இந்திய ஆத்மாவை அழிக்கும் நச்சுத்தன்மை கொண்டது ஆர்.எஸ்.எஸ் என்று படேல் அன்று வர்ணித்தார். குஜராத் அமைச்சரவையில் மூன்றுகறை படிந்த அமைச்சர்கள் தொடர்வது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். குஜராத்தில் லோக் ஆயுக்தா, தகவல் அறியும் உரிமை ஆணையர்கள் இல்லாமை ஆகியவை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தியாவில் ஊழலுக்கு புதிய விளக்கம் அளித்த கட்சி காங்கிரஸ் என்பதை அவர் மறந்து விட்டார்.
காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என்று பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்யமுடியும் என்பதை செய்முறையில் நிரூபித்துக் காட்டியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்பதை ராகுல் மறந்து விட்டாரா? வறுமைக்கோட்டு அளவு குறித்துகாங்கிரஸ் அரசும் அமைச்சர்களும் நடத்திய லாவணி அண்மைக்கால நிகழ்வு. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல் இதுவும் இந்திய வரலாற்றில் இடம்பெற்று விடும். இட்லர் போன்று மோடியும்ஒரு பாசிசவாதிதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் காங்கிரசும் அதற்கு குறைந்ததில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற புதிதில் கம்யூனிஸ்ட்டுகளை தடை செய்ததும், மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டதிலும், 1984 சீக்கிய கலவரத்திலும் காங்கிரசின் பங்கு குறித்து யாராவது ராகுலுக்கு பாடம் எடுக்க வேண்டும். மதவெறியாளர்களுக்கு மக்களாட்சி ஒரு வேண்டாத பொருளாகும்.. எனவேதான் அவர்கள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய நபரை பிரதம வேட்பாளர் என்றுஅறிவித்து நாடகமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் காங்கிரசின் வரலாற்றில் அவசரநிலை காலம் என்று ஒன்று நீடித்திருக்குமா? அல்லது அழிக்கப்படுமா என்பதற்கு வரலாறுதான் பதில் சொல்லும்.மோடியின் காலத்தில் அம்பானிகளும், அதானிகளும் வளர்க்கப்படுகிறார்கள் என்பது நிகழ்காலம். காங்கிரசின் காலங்களில் பிர்லாக்களும், டாடாக்களும், முந்திராக்களும், பஜாஜ்களும் ஊட்டி வளர்க்கப்பட்டனர் என்பது கடந்த காலம். இன்றும் கூட அவர்கள் காங்கிரசால் பயனடைந்து வருகிறார்கள்என்பதால் கடந்த காலம் என்று குறிப்பிடுவதுகூட பொருத்தமற்றது. பாஜக சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது போல் காங்கிரசு போட்டியிட்டதும் உண்மைதான். எனவேதான் ராகுல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியக்கூடாது.
ஒன்றரைக் கோடி மக்களிடம் பேசினோம்...
பினராயி விஜயன்

அண்மையில் இதுவரையில்லாத ஒரு அரசியல் எழுச்சியை மாநிலத்தில் இருக்கும் அனைத்து 140 சட்டமன்றத் தொகுதிகளிலும் கேரள மாநிலம் கண்டது. கேரள ரக்ஷா மார்ச்(கேரளப் பாதுகாப்புப் பயணம்) என்று வயலாரில் பிப்ரவரி 1ம்தேதி துவங்கி கோழிக்கோடு கடற்கரையில் பிப்ரவரி 26 அன்று பெரும் பேரணியுடன் நிறைவுபெற்ற நிகழ்வில்தான் இதைக் காண நேர்ந்தது. “மதச்சார்பற்ற இந்தியா மற்றும் வளர்ச்சி பெற்ற கேரளம்“ என்பதுதான் இந்த யாத்திரையின் முழக்கமாகும்.தோராய மதிப்பீட்டின்படி, ஒண் ணரைக் கோடிக்கும் மேற்பட்ட மக்க ளோடு இந்த யாத்திரை தொடர்பு கொண்டது.
யாத்திரைக்காக பல மையங்களில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அல் லது தயாரிப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் என்று இவர்களின் பங்கேற்பு பல நிலைகளில் இருந்தது. யாத்திரை யின்போது லட்சக்கணக்கான மக்கள் சாலைகளின் இருமருங்கிலும் நின்று பூமழை பொழிந்தனர்.
ஒரு புதிய அரசி யல் விழிப்புணர்வைத் தூண்டும் வகை யில் இருந்த இந்த யாத்திரையின் அனு பவம் என்னவென்றால், கேரளாவின் பலதரப்பட்ட மக்கள் தயக்கமின்றி இடதுசாரி இயக்கத்திற்கு, குறிப்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற உண்மையை உறுதிப்படுத்தியதுதான். மாநிலத் தில் கட்சியின் வலுவான வெகுஜனத் தளத்தையும் இது பிரதிபலித்தது.140 தொகுதிகளிலும் பயணித்த இந்த யாத்திரைக்கு கேரளாவில் உள்ள அனைத்து 14 மாவட்டங்களிலும் 126 மையங்களில் பெரும்அளவிலான வரவேற்பு வழங்கப்பட்டது. யாத்திரை ஐந்து பிரதான கோரிக்கை களை முன்வைத்தது.விலைவாசியைக் கட்டுப்படுத்து.பொது விநியோக முறையைப் பலப்படுத்து.மதவெறியைத் தடுத்து நிறுத்து.
பல கோடி சூரிய மின்தகடு ஊழலில் சிக்கியுள்ள முதல்வர் உம்மண் சாண்டி பதவி விலக வேண்டும்.ஊழலைக் கட்டுப்படுத்து.யாத்திரையின் அனைத்து நாட் களிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் ஏ.விஜயராகவன், இ.பி.ஜெயராஜன், பி.கே.ஸ்ரீமதி, ஏ.கே.பாலன், எம்.வி. கோவிந்தன், இளமாரம் கரீம் மற்றும் பேபி ஜான் ஆகியோர் பயணித்தனர். யாத்திரையின் மேலாளராக ஏ.கே.பாலன் பணியாற்றினார்.
தேச அளவில் முக்கியத்துவம்
பாஜகவின் மதவெறி மற்றும் காங்கிரசின் நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிராகப் போராடி, அவற்றைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் தலைநகர் புதுதில்லியில் கூடிய தற்கு அடுத்த நாள் யாத்திரையின் நிறைவுநிகழ்ச்சி கோழிக்கோட்டில் நடை பெற்றது. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க முன் முயற்சி எடுத்த கட்சி என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த யாத்திரைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு உண்மையான மாற்றை உருவாக்க கட்சி தொடர்ந்து முயற்சி எடுத்து வந்ததன் பின்னணியில் யாத்திரையின் செய்தியும் பரந்து விரிந்து எடுத்துச் செல்லப்பட்டது.கடந்த இருபது ஆண்டுகளில், மாநிலத்தின் விவசாயத்துறை, நவீன தாராளமயக் கொள்கைகளால் நிர்மூலமாக்கப்பட்டது. விலையுயர்வு, வேலையின்மை, உற்பத்தி சரிவு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் வாழ்வை பரிதாப நிலைக்குத் தள்ளிவிட்டன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பிரச்சனைகள் எழுப்பப் படும் என்பது இயற்கையே. மத்திய, மாநில அரசுகள் கடுமையான விமர் சனத்தை எதிர்கொள்ள நேரிடும்.
திரண்டு வந்த பெண்கள்
யாத்திரையை வாழ்த்த பெண்கள் திரண்டு வந்தது பெரும் உற்சாகத்தை அளித்தது. தங்கள் குழந்தைகளோடு திரண்டு வந்த பெண்கள், மாணவிகள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்கள் திரண்டனர். வடக்கு மாவட்டங்களில் ஏராள மான இஸ்லாமியப் பெண்கள் திரண்டு நின்று யாத்திரையை வாழ்த்தினர். மற்ற மாவட்டங்களிலும் பெண்கள் உற்சாகத்துடன் வந்து நின்றுபங்கேற்றனர். பெண்கள் பிரச்சனை களில், சரியான அரசியல் பார்வையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டது என்பதை இந்தப் பெரும் அளவிலான பெண்கள் பங்கேற்பு காட்டியது. நவீன தாராளமயக் கொள்கைகளால் அதிக மாகப் பாதிப்படைந்தது பெண்கள்தான் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது நல்லது.
மனநிறைவான வரவேற்பு இந்த யாத்திரைக்குக் கிடைத்தது என்பது, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மைய நீரோட்ட ஊடகம் என்று சொல் லிக் கொள்ளும் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை என்பதையே காட்டுகிறது. 126 மையங்களிலும் லட்சோப லட்சம் மக்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களைத் தாண்டி, பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். பொது மக்களோடு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மத குருமார்களும் பங்கேற்றனர். விவசாயிகள், தொழிலாளர் கள், மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், கலாச்சாரத்துறை ஊழியர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள் வலுவாக இல்லாத பகுதிகளில் கூட வலுவான சமிக் ஞைகள் யாத்திரைக்குக் கிடைத்தன.
மக்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதி களிலும் கட்சி அமைப்பு வேர் விட்டு நிற்பதையே இது காட்டியது.1947-49, 1963-65 மற்றும் 1975-77 ஆகிய காலகட்டங்களில் கம்யூ னிச இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற வலதுசாரியினர் தங்களால் முடிந்த வரைக்கும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியையே தழுவின. எனினும், தற் போதைய உலகமய காலகட்டத்தில், அதே சக்திகள் தங்கள் முயற்சியை மீண்டும் சில பெரு நிறுவனங்களின் உதவியோடு முடுக்கி விட்டுள்ளன. தங்கு தடையற்ற மூலதனக் குவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையாக இருக்கும் என்று பார்ப்பதால் இந்த முயற்சி நடக்கிறது.
2009 மக்களவைத் தேர்தல் மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரிகளுக்குக் கிடைத்த தோல்வி அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. ஆனால், நாட்டி லுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் கட்சியின் முயற்சி, இந்த வலதுசாரிகளை கடுப் பேற்றியுள்ளது. தேசிய அரசியலில் பிரதான கவனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பிடித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்பதையே கேரள பாது காப்பு யாத்திரையின் வரலாறு காணாத வெற்றி எடுத்துக் காட்டுகிறது.
தகர்ந்தன பொய்கள்
கேரளாவைப் பொறுத்தவரை, அனைத்துத் தரப்பினரின் விமர் சனத்தைத் தாங்க முடியாமல் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு தவிக்கிறது. டி.பி.சந்திரசேகரின் வழக்கை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்து செல்லும் உத்தியைக் கையாளுகிறார்கள். இதேஉத்தியை மைய நீரோட்ட ஊடகம் என்றுசொல்லிக் கொள்பவர்களும் எடுத் துச் செல்கிறார்கள். கடந்த 12 ஆண்டு களாக, லாவ்லின் வழக்கு என்ற பெயரில் பொய்ப்பிரச்சாரம் நடந்தது. மத்தி யப் புலனாய்வுக்குழுவின் உதவியும் கிடைக்கும் என்று நம்பினர்.
இதே ஊடகங் கள்தான் தற்போது சந்திரசேகரன் விவகாரத்தைக் கிளப்புகின்றன. இதன்மூலம், காங்கிரசின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகளை மூடி மறைக்கின்றன. காங்கிரஸ் குண்டர்களின் கொலைகளால் ரத்தம் தோய்ந்தவரலாறு கேரளத்தில் உண்டு.நூற்றுக்கணக்கான கம்யூனிசத்தலை வர்கள் காங்கிரஸ்காரர்களால் கொல் லப்பட்டுள்ளனர். மோயர்த் சங்கரன், சர்தார் கோபாலகிருஷ்ணன், குஞ்சாலி, அழிக்கோடன் மற்றும் அப்துல் காதர் என்று சில பெயர்களையும் குறிப்பிடலாம். ஏராளமான மாணவர் சங்கத்தலைவர்கள் தியாகிகளாகியுள்ளனர்.
சீமெனியில் ஐந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இவர்கள்தான், சந்திரசேகரன் விவகாரத்தில் கட்சி மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தனைக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.இருப்பினும், இத்தனைப் பொய்ப் பிரச்சாரத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், கோழிக்கோடு கடற்கரையில் கடல்தான் உள்ளே வந்துவிட்டதோ என்று நினைக்கும் வகையில் மக்கள் கூட்டம் பிப்ரவரி 26 அன்று திரண்டது. கேரளாவின் வரலாற்றில் இப்படிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி இதுவரையில் நடந்ததில்லை என்று பெருமையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிக் கொள்ளலாம். இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களிடம் தொடர்பு கொண்ட மக்கள் நிகழ் வை மாநிலம் கண்டதில்லை.
புதிய சக்தி
மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதோடு, பதவி ஆசையைத் தீர்த்துக் கொள்ள மதவெறி சக்திகளோடு எப்போதும் சமரசத்தையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. அந்த சமரசத் தின் விளைவே தற்போதுள்ள மத வெறி அபாயமாகும். இந்த நிலையில்,வரும் மக்களவைத் தேர்தலில் காங் கிரசை நிராகரித்து, பாஜகவைத் தோற் கடிக்குமாறு மக்கள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத் துள்ளது. அதோடு, இவை தொடர்பாக தனது சொந்தக் கருத்துக்களை யாத்திரையின் முழக்கங்களாகவும் முன் வைத்தது. மக்களின் திரளான மற்றும் உற்சாகமான பங்கேற்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய முழக்கங்களைஅவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார் கள் என்பதையே காட்டுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கொள்கைகள் மீது பொய்ப்பிரச்சாரம் மற்றும் சதிவேலைகள் மூலமாக தாக்குதல் நடத்தும் சந்தர்ப் பவாதக் கூட்டணிக்கு பதிலளிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இந்த யாத்திரைக்குக் கிடைத்துள்ளது. யாத்திரையின் பாதையில் பங்கேற்ற லட்சோப லட்ச மக்கள், செங்கொடி யோடுதான் கேரளம் நிற்கும் என்றும், பிற்போக்கு சக்திகளின் பொய்யான குற்றச்சாட்டுகளோடு நிற்காது என்றும் அறிவித்துள்ளனர். இந்த யாத்தி ரையின் வெற்றியானது, கேரள மக்களின் வெற்றி யாகும். இந்த மகத்தான யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி நடத்தப் போகும் வருங்காலப் போராட்டங்களுக்கு புதிய சக்தியையும், உற்சாகத்தையும் இந்த யாத்திரையின் அனுபவம் அளித்திருக்கிறது.
- தமிழில் - கணேஷ்
நன்றி - பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மார்ச் 3-9, 2014)

Thursday, March 6, 2014



தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் தலைவர் ஜானகியம்மாள் (முன் வரிசையின் நடுவில்) மற்றும் சங்கத் தலைவர்கள்./மேடை கலைஞராக ஜானகியம்மாள்
“மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க அவர் என்றும் தயங்கியதில்லை.சிறைக்குச் செல்வது அவருக்கு இயல்பானதொன்றாக இருந்தது “ என்று அவருடைய சகபோராளியும், சுதந்திரப் போர் தியாகியுமான ஐ.மாயாண்டி பாரதி அவரைப்பற்றி நினைவு கூர்கிறார். தென் இந்தியாவில் பிரிட்டிஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதல் பெண் என்பது இவருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு தகவலாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் நாளன்று மகபூப்பாளையம் சர்வோதயா சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும், ஆதரவாளர்களும் கூடி அவருக்கு வீரவணக்கம் செலுத்துவார்கள்.
ஆம், மதுரையின் வீரத்திருமகள் கே.பி.ஜானகி அம்மாள் அவர்கள் மறைந்த நாள்தான் அது.ஒரு நாடகமேடை கலைஞராக, சுதந்திரப் போராளியாக, காங்கிரஸ் தொண்டராக, கம்யூனிஸ்ட் ஊழியராக, ஒரு பெண்ணியவாதியாக, மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு வீராங்கனையாக வாழ்ந்து மறைந்த கேபிஜே என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பி.ஜானகி அம்மாள் அளித்த பங்களிப்பினை எழுதிச் சுருக்கி விட முடியாது. 12ம் வயதிலேயே தன்னுடைய கணீர்க்குரலால் நாடகமேடைகளில் பிரபலமானவர் இவர். இவருடைய பாடலைக் கேட்பதற்கென்றே அன்றைய நாட்களில் பெரும் கூட்டம் கூடி நிற்கும்.
மதுரை தந்த மாபெரும் நாடகமேடை கலைஞர் விஸ்வநாததாஸ். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பதற்கு, அவருடைய சாதி காரணமாக பல நடிகைகள் தயங்கி வந்தனர். மனிதர்களில் தாழ்ந்தவரில்லை என்ற கொள்கைப்பிடிப்புடைய ஜானகி அம்மாள் அவருடன் இணைந்து மேடைகளில் நடித்து வந்தார். வெள்ளையருக்கு எதிராக நாடகமேடைகளில் பாடி வந்த ஜானகி அம்மாள் 1930ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அதனையடுத்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1917ம் ஆண்டில் பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி சிறுவயதில் வறுமையில் வாழ்ந்தார். எட்டு வயதில் தாயார் மறைந்த பின் பாட்டியுடன் வாழ்ந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். சுதந்திரப் போரிலும், அரசியலிலும் அவர் கவனம் திரும்பிய பின் அவர் நாடகங்களில் ந்டிப்பது குறைந்து விட்டது.
நாடகமேடைகளில் ஈட்டிய பணத்தை மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கினார். 1936ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். மேடைகளில் தேசியப்பாடல்களைப் பாடி வந்த இவர் மெல்ல மெல்ல சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ச்சி பெற்றார். இடதுசாரி எண்ணம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் தொடங்கிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1930ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967ம் ஆண்டில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் கைமுஷ்டியை ஓங்கியபடி தெருக்களில் இறங்கி போராட்டங்களை நடத்தியவர். பஞ்சாலை தொழிலாளிகள், விவசாயிகள், மற்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்.
அவர்களின் நலனகளுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் பல. நியாயமான காரணங்களுக்காக நடத்திய போராட்டங்களில் பங்கேற்கும்படி கால்நடையாக நடந்து மக்களைத் திரட்டியவர் அவர் என்றும் இன்றும் கூட துவரிமான், திருமங்கலம், சோழவந்தான் போன்ற கிராமத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியை ஜானகி அம்மா கட்சி என்று கூறுகிறார்கள் என்று மதுரை கம்யூனிஸ்ட் தலைவர் வீரபத்திரனின் மகளும் மாநகராட்சி உறுப்பினருமான செல்லம் கூறுகிறார். திருச்சி பொன்மலையில் அவருடைய பெண்ணியம் வெளிப்பட்டது. 1974ம் ஆண்டில் பாப்பா உமாநாத்துடன் இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவி அதன் முதல் தலைவராகவும் செயலாற்றினார். பெண் சுதந்திரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் சமத்துவம் போன்றவற்றில் மக்கள் மனதில் புதிய கருத்துக்களை விதைப்பதில் அவருடைய உரைகள் பெரும் பங்கு வகித்தன. அரசியலில் பெண்களை அறிமுகப்படுத்தியதில் அவருடைய பங்கு முக்கியமானது. கட்சியின் செயல்பாட்டில் எங்களைப் போன்ற பலர் பொறுப்புக்கு வந்ததற்கு அம்மாவே காரணம் என்று அவருடைய தோழியும், சீடருமான நாகம்மாள் கூறுகிறார்.
கண்டிப்பும்,கருணையும் நிறைந்தவர் ஜானகி அம்மாள். அவருடைய தாயன்பும், கருணையும் கட்சித்தோழர்களை வேற்றுமைகளை மறந்து செயல்படவைத்தது. அவசரநிலைக்காலத்தில் கட்சி தோழர்களுக்கு உணவளிப்பதற்காக தன்னுடைய நகைகளையும் பட்டுப்புடவைகளையும் விற்று பணம் கொடுத்தவர் அவர். அவருடைய தகட்டு புடவையில் (பட்டுப் புடவையில்) இருந்து சரிகைகளைப் பிரித்து அவற்றை உருக்கி விற்று வயிற்றை நிரப்பினோம் என்று நாகம்மாள் நினைவு கூருகிறார். தன்னுடைய கடைசி நாட்களை மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்தில் அவர் கழித்தார். தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்தவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டவர் அவர். பிறருக்கு தன் உடைமைகளை தானமாக அளித்த அவர் பிறரிடம் அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டதில்லை.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட பென்ஷனையும், தாமிரப்பட்டயத்தையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.மக்கள் நலனே தன் நலனாக வாழ்ந்த கே.பி.ஜானகி அம்மாள் 1.3.1992 அன்று கட்சி அலுவலகத்தில் உயிர் நீத்தார். அவர் மறைந்த நாளன்று மதுரை நகரமே தனது உத்தம புதல்விக்காக அழுதது-
இந்து நாளிதழ் மெட்ரோபிளஸ் கட்டுரையை தழுவி எழுதியவர் தாஸ்
ஹியூகோ சாவேஸ் முதலாமாண்டு நினைவு தினம் லத்தீன் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள் பங்கேற்பு



காரகஸ், மார்ச் 6-வெனிசுலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோசாவேசின் முதலாம் ஆண்டுநினைவுதினம் புதனன்றுஅந்நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது.
வெனிசுலா நாட்டின் மகத்தான மக்கள் தலைவராக கருதப்படுபவர் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ். வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கியதுடன், அதுநாள் வரை கொள்ளை லாபத்தில் கொழுத்துக் கொண்டிருந்த தனியார் பெருநிறுவனங்களை அதிகப்படியான வரிவிதிப்பிற்கு உள்ளாக்கினார். இதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தினார். மேலும், வெனிசுலா நாட்டை “பொலிவாரிய சோசலிச குடியரசு” என பிரகடனப்படுத்தியதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதன்மையாக செயல்பட்டு வந்தார்.
இச்சூழலில் கடந்தாண்டு மார்ச் மாதம் 5ம் தேதியன்று புற்றுநோயின் காரணமாக சாவேஸ் உயிரிழந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹியூகோ சாவேசின் மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதன்பின் அந்நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது மரணத்திற்கு முன்பே சாவேசால் முன் மொழியப்பட்டவரான நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். மேலும், சாவேசால் முன்வைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மதுரோ தலைமையிலான புதிய அரசு முன்னெடுத்து சென்று வருகிறது.