திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலில் இவர் உதவி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ரயில் ஓட்டுநர் பதவிக்கு ஒரு பெண் வந்துள்ளதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள் வியப்படைந்தனர். இவரை எஞ்சினில் கண்ட பயணிகள் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர். இருப்பினும் அவர்கள் அவரை மனமுவந்து பாராட்டினர்.இருபத்தாறு வயதான பி.ஏ.தீப்தி திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏற்கனவே ஒரு பெண் லோகோ பைலட் இருந்த போதும் அவர் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுகிறார். இரண்டு மாதம் பொன்மலை ரயில்வே பட்டறையில் பயிற்சி பெற்ற இவர் இரண்டு மாதகாலம் மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள கல்வி பயிற்சியையும் முடித்துக்கொண்டு கடந்த ஜூலை 4ம் தேதியன்று பணியில் சேர்ந்தார். தற்போது அவர் மதுரை - திண்
டுக்கல் பயணிகள் ரயிலில் உதவி ஓட்டுநராக பணியாற்றுகிறார். அவர் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயிலில் சக ஓட்டுநராக சென்றார். மதுரை சந்திப்பில் வண்டி நின்றவுடன் ரயிலில் பயணம் செய்த பெண்கள் கூட்டம் ஒன்று அவரிடம் சென்று பெண்குலத்துக்கு ஒரு முன்னோடியாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று பாராட்டுரைத்துள்ளனர். கணினி பொறியியலில் பட்டயப்படிப்பை முடித்த பின் இவர் ரயில்வே வேலைக்கு மனு கொடுத்துள்ளார். அதற்குரிய நியமன தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். தென்னக ரயில்வே அவரை ஓட்டுநர் வேலைக்கு நியமனம் செய்தது. ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்று சிறுபிள்ளையில் இருந்து கனவு கண்டதாக கூறும் அவர் ஆனால் ரயிலை ஓட்டும் வேலை செய்ய நான் கண்ணாய் இருந்தேன் என்று கூறமுடியாது என்று கூறினார்.
அவருடன் பயணிகள் ரயிலை ஓட்டி வந்த சக ஓட்டுநர் கே.வினோத் குமார் இவர் பற்றி கூறுகையில், தீப்தி சிறப்பாக பணியாற்றுவார் என்பதற்கான அறிகுறிகள் அவரிடம் காணப்படுகின்றன என்று கூறினார். நம்மை நம்பி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் போது , இந்த வேலையை செய்கின்றவர்கள் பலமடங்கு கவனத்துடனும், அதிகமான பொறுப்புடனும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். தனது வேலையின் உள்ளார்ந்த அம்சங்களை தீப்தி புரிந்து கொண்டுள்ளார்.
அவர் நன்றாக வேலை செய்கிறார் என்றும் அவர் சொன்னார். உதவி ஓட்டுநரான தீப்தி, சிக்னல்களைக் கண்காணிப்பதும், ஓட்டுநரோடு தகவல் பரிமாறிக் கொள்வதும், எஞ்சினின் முக்கிய பாகங்களின் செயல்பாட்டை கவனிப்பதும், முதன்மை ஓட்டுநருக்கு ரயிலை ஓட்டுவதில் உதவுவதும் பணிகளாகும். தனது வேலையை ரசித்து செய்வதாகவும், வேலை சுவாரஸ்யமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மதுரைக் கோட்டத்தில் இன்னும் சில பெண் லோகோ பைலட்டுகள் இருப்பதாகக் கூறிய தீப்தி, அவர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.தற்போது தான் ரயில் எஞ்சின்களை ஓட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், தேவையான திறமைகளை கற்று வருவதாகவும் கூறினார். தென்னக ரயில்வேயில் ஆண் ஓட்டுநருக்கு ரயில் எஞ்சின்களை ஓட்டும் பயிற்சியை அளித்து வருபவரும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.42 வயதான கே.கே.லெஜி ஆவடியில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கும், மூத்த ஓட்டுநர்களுக்கும் பன்னிரண்டு சக்கர எஞ்சின்களை ஓட்டக் கற்றுத்தரும் ஆசிரியர் பயிற்றுநர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் குவைத்தில் வேலை பார்க்கிறார்.
இவருடைய முதல் பணி போபாலில் இருந்து இட்டார்சிக்கு சரக்கு ரயிலை ஓட்டிச்சென்றது தான். அண்மையில் விஜயவாடாவில் மின் ரயில்பாதை பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சிகளின் முடிவில் எட்டு பெண் ஓட்டுநர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வேலை எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் ஆண்களுக்கு இணையாக தங்களாலும் ரயில்களை ஓட்ட முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு நல்ல வேலை, பெற்றோர்களும், சக ஊழியர்களும் நன்கு ஊக்கமளிக்கிறார்கள் என்று அவர்கள் எட்டு பேரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள் இவர்களுக்கு யோகம் அடித்திருக்க வேண்டும். ஏனெனில் விஜயவாடா ரயில்வே கோட்ட மேலாளர் பிரதீப் குமார் ஒரு நாள் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றியுள்ளார். வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு தென்மத்திய ரயில்வேயில் உதவி ரயில் ஓட்டுநர்களாக பணிநியமனம் அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.ரயில் எஞ்சினில் உள்ள பாகங்கள், ஓட்டும் திறமை, பிரச்சனைகளுக்கு தீர்வு காணல், கோளாறுகளை அடையாளம் காணல், தவறுகளை சீர்படுத்தல், சக்கர ஒருங்கிணைப்பு, தடுப்பான்கள், ஓட்டும் விதிகள், கணனி கண்காணிப்பு பிரிவு மற்றும் இதரபாகங்களை பராமரித்தல் ஆகியவற்றில் பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மின் ரயில்பாதை பயிற்சி மைய முதல்வர் டி.ஆர்.ஜே.பிரசாத் கூறினார். இவர்களுக்கு மௌலாலியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தந்தை போல் தானும் ஒரு ரயில் ஓட்டுநராக வேண்டும் என்று விரும்பினேன். எனது கனவு நிறைவேறிவிட்டது. இந்த வேலையில் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க விரும்புகிறேன் என்று பீகாரைச் சேர்ந்த பயிற்சியில் தேர்வு பெற்றுள்ள ஓட்டுநர் ரீனம் கூறினார்.
ஒடிசாவில் தொழிற்பயிற்சி கல்விக்கழகத்தில் பயிற்சியை முடித்து வேலையில் சேர தயாராக இருக்கும் சீமா குமாரி கூறுகையில் பெற்றோர், பயிற்சியாளர்களிடம் தனக்கு நல்ல ஊக்கம் கிடைத்து வருகிறது என்று கூறுகிறார்.வேலையில் சேர தயாராக இருக்கும் எட்டு பெண் ஓட்டுநர்களையும் தெற்கு மத்திய ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் பிரீதி அவஸ்தி பாராட்டியுள்ளார். இது இந்திய பெண்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். இன்று வரை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த தொழிலில் பெண்குலம் நுழைந்துள்ளது என்று அவர் கூறினார். மகளிர் ஓட்டுநர்களுக்கு தனிப்பட்ட உணவு அறையும் ஓய்வு அறையும் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று தனது அமைப்பு முயற்சிகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்
No comments:
Post a Comment