Tuesday, April 29, 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்!
ஏ.கே.பத்மநாபன்

மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16ஆவது மக் களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது.இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
தங்கள் வாழ்க்கைப்பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்று பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவைகளேயாகும்.
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும்உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள்.இவ்வாறு வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலை யிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத் துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
“மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத் தில்’’ நடந்ததைப்போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.
தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவை களேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிட வேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப் படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக் கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.
எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கை யிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாக வும் மறைமுகமாகவும் பலநாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகிஇருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர் பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப் பதாவது: “மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் சபதம் ஏற்பதுடன் நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.
’’இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம். வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்து, முன்னேறுவோம்.வாழ்க மேதினம்.தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக.புரட்சி ஓங்குக.
தமிழில்: ச.வீரமணி

Monday, April 28, 2014

சைகோன் வீழ்ச்சியின் 40ம் ஆண்டு

1975 ஏப்ரல் 29 அன்று அமெரிக்க ஆட்களுடன் சைகோனிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஹெலிகாப்டர் விமானம்/ 1975 ஏப்ரல் 30 அன்று சைகோன் அதிபர் மாளிகை முன்வாயிலைக் கடந்து முன்னேறும் வியட்நாம் புரட்சிப்படையின் டாங்கு.
உலகின் மாபெரும் ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவை ஒரு சாதாரண விவசாய நாடான வியட்நாம் மண்டி போட வைத்த வியட்நாம் போரின் இறுதிக்கட்ட 24 மணி நேரம் தொடங்கிய நாள் இது . 1975 ஏப்ரல் 29 அன்று வியட்நாமின் தலைநகரான சைகோனை( இன்று அதற்கு ஹோ சி மின் நகரம் என்று பெயர்) விட்டு அமெரிக்க துருப்புகளின் மிச்சசொச்சமும், தென்வியட்நாமில் இருந்த அமெரிக்க தூதரும் வெளியேறிய நிகழ்வு ஏப்ரல் 29 அன்று தொடங்கி ஏப்ரல் 30 அன்று முடிவுற்றது. அமெரிக்காவின் “ தோல்வி அடைந்த சிலுவைப்போர்” என்று இழிவான பெயருடன் முடிவடைந்த இந்த யுத்தம் பத்தாண்டுகள் நீடித்தது.
அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க அரசு சந்தித்த மிகப்பெரிய அரசியல் மற்றும் ராணுவ தோல்வி வியட்நாம் மண்ணில் நடந்தது. கடைசி நாளன்று 1373 அமெரிக்கர்கள், 5680 வியட்நாமியர்களுடன், களைத்துப்போனவரும், வியாதியால் துன்புற்று வந்தவருமான அமெரிக்க தூதர் மடித்துச் சுருட்டப்பட்ட அமெரிக்க தேசியக் கொடியை ஒரு கையிலும் மற்றொரு கையில் அவருடைய வளர்ப்பு பிராணியுடன் உயிரைக் கையில் பிடித்தபடி பறந்தோடிய நாள் ஏப்ரல் 29. அமெரிக்காவின் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த போர் என்ற அவப்பெயர் கொண்ட இந்த போர் அமெரிக்கா தோல்வி அடைந்த முதல் போரும் ஆகும். பின்னொரு நாளில் வடக்கு வியட்நாம் போரில் பங்கேற்ற வியட்நாம் கர்னல் ஒருவர் ஒரு அமெரிக்க செய்தியாளரிடம் பரிமாறிக்கொண்ட கருத்துகளின் படி அமெரிக்க ராணுவம் வியட்நாம் மண்ணில் நடந்த எந்தவொரு குறிப்பிடத்தக்க போரிலும் தோற்கவில்லை என்று நகைமுரண்பாடாகக் கூறியது பொருத்தமானதாகும்.
வியட்நாமின் போர்க்களங்களில் நீங்கள் தோற்கவில்லை, மாறாக அமெரிக்காவின் நகரங்களிலும், கிராமங்களிலும் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று சைகோனில் அரசியல் ஆலோசகராக இருந்த கர்னல் பா தாங் கூறியதை அமெரிக்க செய்தியாளர் வேறொரு சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறார். கர்னல் பா தாங் வியட்நாமின் போர்த்தந்திரத்தை விளக்குகிறார். மிகவும் வலிமையான எதிரியை ராணுவரீதியில் வெல்வோம் என்று நாங்கள் நம்பவில்லை. எங்களுடைய வியூகம் நாங்கள் உயிர் பிழைத்து, போரை மிகவும் நீண்ட நாட்களுக்கு நீட்டித்துச் செல்வது, அதனால் அமெரிக்கர்களாகிய நீங்கள் களைப்படைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எண்ண வேண்டும். நாங்கள் நினைத்ததுதான் நடந்தது. உங்களை அரசியல் ரீதியாக இரு கூராக்கி விட்டோம். சில அமெரிக்கர்கள் தாங்கள் அறியாத நாட்டில் நடக்கும் போரின் மீது காட்டும் அக்கறையின்மை உங்களின் உறுதியை சிதைத்து விட்டது என்று அவர் அமெரிக்கச் செய்தியாளருக்கு பின்னொரு நாளில் விளக்கினார். 1960களில் வியட்நாம் போர் பற்றி கேட்கும் போதெல்லாம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கூறும் கிளிப்பிள்ளை வாசகம் என்னவென்றால் சுரங்கத்தின் மறுமுனையில் வெளிச்சம் தெரிகிறது என்பதுதான்.
ஆனால் அவர் வழக்கமாக கூறும் வாசகம் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை. உண்மை நிலை அங்கு மாறுதலாக இருந்தது.1975ம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் வடக்கு வியட்நாம் அரசு வியட்நாம் நாட்டின் 75 விழுக்காட்டை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து இருந்தது. இதையடுத்து சைகோன் நகரத்தில் பெரும் மயான அமைதி நிலவியது. நகரின் மதுபானக்கடைகளும், சைகோன் தேநீர் விற்கும் கடைகளும் வழக்கத்துக்கு மாறாக மூடப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி நூடுல்ஸ் சூப்பும், வெள்ளைக்காப்பியும் விற்பவர்கள், ஏழைகள், நூற்றுக்கணக்கான வீடில்லா குழந்தைகள் அனைவரும் தெருக்களை விட்டு அகன்று விட்டனர். தையல் வேலையில் ஈடுபட்ட இந்திய தையல் தொழிலாளி ஒருவர் செங்கொடிகளையும், வியட்நாம் தேசியக்கொடிகளையும் தைக்கத் தொடங்கி விட்டார். 1975ம் ஆண்டில் லிண்டன் பி.ஜான்சன் அமெரிக்க கடற்படைகளை 1965ம் ஆண்டில் அனுப்பினார். 1973ம் ஆண்டில் பாரீஸ் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதான் அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவில் தலையிட தொடங்கிய ஆண்டு என்று யாரும் எண்ண வேண்டாம். 1950ம் ஆண்டில் ஹாரி ட்ரூமன் வியட்நாமுக்கு ஆலோசகர்களை அனுப்பிய நாளிலேயே அமெரிக்காவின் தலையீடு தொடங்கி விட்டது. சைகோன் வீழும் போது அமெரிக்காவின் தலையீடு முப்பது ஆண்டுகளை நெருங்கி விட்டது இந்தக் காலகட்டத்தில் 31லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் வியட்நாமில் ராணுவப்பணியில் இருந்துள்ளனர். 1973ம் ஆண்டில் பாரீஸ் உடன்பாடு ஏற்பட்ட போது அமெரிக்கா ஆணும் பெண்ணுமாக 58173 பேரை பலி கொடுத்துள்ளது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நொறுங்குண்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து நான்காயிரம் பேராகும் . வியட்நாமில் பணிபுரிந்த பன்னிரண்டு அமெரிக்கரில் ஒருவர் பலியாகியுள்ளார். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் போரை செய்தியாக்கச் சென்ற 105 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலகப்போரில் பசிபிக் போர்க்களத்தில் போரிட்ட ஒரு அமெரிக்க வீரர் நான்காண்டுகளில் 40 நாட்கள்தான் போர்க்களத்தில் இருந்துள்ளார். ஆனால் வியட்நாம் போரில் அவர் ஓராண்டில் 240 நாட்கள் போர்க்களத்தில் இருந்துள்ளார். இந்த போரில் அமெரிக்கா 16500 கோடி டாலர்களை இழந்துள்ளது. வியட்நாமின் இழப்பு அமெரிக்காவை விட அதிகமாகும். முப்பது லட்சம் வியட்நாமியர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பத்து லட்சம் வடவியட்நாமியரும், வியட்காங் வீரர்களும் அடக்கம்.
தென் வியட்நாமில் 2.5 லட்சம் படைவீரர்களும், 20லட்சம் பொதுமக்களும் இறந்துள்ளனர் என்று வியட்நாம் தொழிலாளர், போரில் முடமானோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்ட வட வியட்நாமியரும், வியட்காங் வீரர்களும் காயம் அடைந்தனர். தென் வியட்நாமில் ஐந்து லட்சம் தென் வியட்நாம் துருப்புகள் காயம் அடைந்தனர். இரு வியட்நாமிலும் சேர்த்து சுமார் இருபது லட்சம் மக்கள் கண்ணி வெடி, பீரங்கித் தாக்குதல், ரசாயன ஆயுதங்கள், குண்டுகள், போர்க்குழப்பங்களில் காயமடைந்தனர் என்றும் அது கூறுகிறது.வியட்நாமின் போர் அமெரிக்காவின் மன உறுதியை குலைத்து விட்டது.
அமெரிக்க மக்களை போருக்கு எதிராக உசுப்பி விட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் புதிய வியட்நாம்கள் வேண்டாம் என்ற கோஷம் முழு வீச்சுடன் முழங்கப்படுகிறது. வியட்நாம் போரின் வெற்றியின் கடைசி நாளில் அப்பாடா தப்பித்தோம் என்று அமெரிக்கர்கள் ஹெலிகாப்டரில் ஏறி தொலைவில் நங்கூரமிட்டு இருந்த அமெரிக்க போர்க்கப்பலுக்கு தப்பியோடினர். வியட்நாம் தோல்விக்குப் பின் இன்று வரை அமெரிக்க தென்கிழக்கு ஆசியாவில் ராணுவ ரீதியாக தலையிட இன்று வரை தயங்குகிறது.

Wednesday, April 16, 2014

தேர்தல் : தனிநபர் போட்டி அல்ல!
தொலைக்காட்சியில் ஏ.கே.பத்மநாபன் வேண்டுகோள்


உழைக்கும் மக்களின் நலன் காத்திட, நடைபெறவிருக்கும் மக்களவைக்கானத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், சிஐடியு-வின் அகில இந்தியத் தலை வருமான ஏ.கே.. பத்மநாபன் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி களுக்கு தூர்தர்ஷனில் தேர்தல் பிரச்சாரம் செய்திட வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திங்கள் அன்று காலை தூர்தர்ஷன் தேசிய தொலைக்காட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.கே.பத்மநாபன் ஆற்றிய உரை வருமாறு:
``அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே. 16வது மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் ஆழமான நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் நடைபெறுகிறது. நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாகவே இந்த நெருக்கடி விளைந்துள்ளது. இக்கொள்கைகளின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது நாட்டில் உள்ள உழைப்பாளி மக்களேயாகும். அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழி லாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் மட்டுமல்ல கிராமப்புறங்களில் உள்ளகோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர் களும் இக்கொள்கைகளினால் பாதிக்கப் பட்டவர்களேயாவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முறை சார்ந்த அறிஞர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இத்தகைய சூழ்நிலையில் ஆட்சி யாளர்களின் கொள்கைகள் குறித்து ஓர் ஆழமான விவாதத்தை நடத்துவதற்கும், அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்வைப்பதற்கும் பொதுத் தேர்தல்கள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கொள்கைப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் ஒட்டுமொத்தமாக ஏதோ இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான போட்டி என்பதுபோல சித்தரிக்கப்படு கின்றன.கடந்த ஐந்தாண்டுகள் என்பது தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்ட காலமாகும். தொழிலாளர்கள் இதற்கு முன் தங்கள் போராட்டங்கள் மூலமாக பெற்றசலுகைகள் கூட இந்தக்காலத்தில் மறு தலிக்கப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து ஏறிவருவதானது இவர்களின் துன்ப துயரங் களை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் பின்னணியில், நிரந்தரத் தொழிலாளர்களின் பணியிடங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள் மூலமாகவும் மற்றும் பயிற்சியாளர்கள், அப்ரண்டிசுகள் என்ற பெயரிலும் அரசாங்கமும் முதலாளி களும் பெரிய அளவில் தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டிக் குறைத்து லாபம்ஈட்டி வருகின்றன. மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில், மத்திய அரசாங்கமே ஒரு கோடி ஊழியர்களை, பிரதானமாக பெண் களை, அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு அமைப்பாளர்கள் முதலான பணிகளில் அமர்த்தி இருக்கிறது. இவர்களை சமூக ஊழியர்கள் என்றும் தொண்டர்கள் என்றும் முத்திரை குத்தி இருக்கிறதேயொழிய, இவர்களை தொழிலாளர்களாக மத்திய அரசு கருதவில்லை.
இவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கும், நான்காயிரம் ரூபாய்க்கும் இடையே மதிப்பூதியம் என்ற பெயரில் அற்ப ஊதியம் வழங்கி வருகிறது.நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கழிந்தபின்னரும் நம் நாடு ஓர் ஊதியக் கொள்கையை இதுவரை உருவாக்கிட வில்லை. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக 1957ல் நடைபெற்ற 15வது இந்தியன் தொழிலாளர் மாநாடு, நான் மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறேன், 1957ம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு, ஒரு மனதாக நிறைவேற்றிய பரிந்துரைகள், இதுவரை அமல்படுத்தப்படவே இல்லை. இப்பரிந்துரைகளை 2012ல் நடைபெற்ற 44வது இந்தியன் தொழிலாளர் மாநாடும் மீண்டும் ஒருமனதாக வலியுறுத்தியிருக்கின்ற போதி லும் பயனேதுமில்லை. நாட்டிலுள்ள தொழிற் சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரே குரலில் குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் ரூபா யாக நிர்ணயம் செய்து உடனடியாக வழங் கிட வேண்டும் என்றும் அதன்பிறகு ஒவ் வொருவருக்கும் 1957ல் தீர்மானங்களின் அடிப்படையில் ஊதியங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை உட்பட அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களும் வெறும் தாள்களில் மட்டுமே காணப்படுகின்றன. சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ஞகுசுனுஹ) எனப்படும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, நாட்டிலுள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதி யப் பயன்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டது. மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ஊழியர் வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற அரசின் முடிவும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில், தொழிலார் நலன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் இடம் பெறவேயில்லை.நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம் இத்தாக்குதல்கள், விதிமீறல்கள் மற்றும் சுரண்டல்களைத் தங்கள் வீரஞ்செறிந்த போராட்டங்களின் மூலமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் இயங்கும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் சுயேச்சையாக இயங்கும் பல்வேறு தேசிய சம்மேளனங்களும் இணைந்து, பத்து அம்சக் கோரிக்கைகளை உருவாக்கி, போராடி வருகின்றனர்.
இக்கோரிக்கைளில் சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்ச னைகளான விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துதல், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்துதல் மற் றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளானவைகளும் அடங்கும். இவற்றை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2013 பிப்ரவரியில் 48 மணி நேரம் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளன. சாமானிய மக்களின் நலன்களைக் காப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு சாமானிய மக்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை எவ்வித விவாதமும் நடத்திடவில்லை. இதுதொடர்பாக அரசு சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை. உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, தற்போதைய ஐ.மு.கூட்டணி அரசாங்கத்திற்கும், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தி யாசமும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட்டுகளின் நலன்கள்தான் முக்கியமாகும்.
இவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றையொன்றை விமர்சித்துக்கொண்டாலும், நடைமுறையில் இவ்விரு கட்சிகளுமே ஒரேவிதமான நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக் கின்றன. இதற்கு மாற்றாக, நாட்டிலுள்ள ஆண்-பெண் அனைத்து உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்திட, ஒரு மாற்றுக்கொள்கைத் திசைவழி இன்றைய அத்தி யாவசியத் தேவையாகும். இத்தகைய மாற்றுக் கொள்கையை நாட்டிலுள்ள இடதுசாரிக் கட்சிகள்தான் முன்வைத்திருக்கின்றன. இதர இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து இந்தத் திசைவழியில் முன்னேறிடுவோம் என்று நாட்டு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை மூலம் உறுதி அளித்திருக்கிறது. அமையவிருக்கும் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள் வலுவான முறையில் பங்கேற்பது தான் நாட்டின் நலன்களையும், நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் நலன்களையும் பாது காத்திடக்கூடிய வகையில் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதை உத்தரவாதப்படுத்திடும். எனவே, வாக்காளப் பெருமக்கள் அனை வரும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களித்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.. இவ்வாறு ஏ.கே. பத்மநாபன் உரையாற்றினார். (ந.நி.)

Sunday, April 13, 2014

தேர்தல் களத்தில் பெரியாரும் அண்ணாவும்



(பெரியாரும் அண்ணாவும் தமிழகத் தேர்தல் களத்தைப் பார்வையிட வரு கின்றனர். தங்களுக்கு நெருக்கமாக இருந்த அல்லது தங்களது பெயர்களை அவ்வப்போது உச்சரிக்கும் சில தலைவர்களைச் சந்தித்து உரையாட விருப்பம் கொண்டுள்ளனர். முதலில் அவர்கள் சந்திப்பது கலைஞரை).கலைஞர் (இவர்கள் வருவதைப் பார்த்து சற்று திடுக்கிட்டு, பிறகு சமாளித்துக் கொண்டு) : தமிழர்களின் தந்தையே வருக! தம்பிகளின் அண்ணாவே வருக!
பெரியார் : வரவேற்பெல்லாம் பலமாத்தான் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சில கேள்விகளைக் கேக்கலாம்னு வந்திருக்கோம்.
கலைஞர் : கேள்வியெல்லாம் எதுக்கு? இத்தனை நாள் கழிச்சு வந்திருக்கீங்க. அறிவாலயத்திலே தங்கி ஓய்வெடுத்துட்டுப் போகலாமே?
அண்ணா : எங்களுக்கு எதுக்கு தம்பி ஓய்வு? நாங்க கேக்க நினைக்கிற கேள்வி இதுதான். இப்ப நடக்கற தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடக்கிற தேர்தல். ஆனா நீங்களும் ஸ்டாலினும் இது ஏதோ சட்டமன்றத் தேர்தல் மாதிரி அந்தம்மாவைத் திட்டியே பிரச்சாரம் பண்ணிக்கிட்டி ருக்கீங்க. ஏன், காங்கிரஸ், பாஜகவைப் பத்திச் சொல்றதுக்கு உங்ககிட்ட ஒரு விஷயமும் இல்லியா?
கலைஞர் : காங்கிரஸ் என்னு டைய குடும்பத்திற்குச் செய்த துரோகங்களைப் பட்டியல்போட்டு சொல்லியிருக்கேனே? மதச்சார்பற்ற நிலைக்குக் காங்கிரஸ் திரும்பி வந்தால் அவங்களை மன்னித்து ஆதரவு தரத் தயார்னும் கூறியிருக்கிறேனே?
அண்ணா : உன்னுடைய குடும் பத்திற்குச் செய்த கெடுதல்களை விடுவதுதான் மதச்சார்பற்ற நிலையா? நீ என்ன சொல்றேன்னே வரவரப் புரிய மாட்டேங்குது தம்பி! நான் கட்சியை ஒரு குடும்பம் என்றேன். நீ உன் குடும்பத்தையே கட்சியாக்கிவிட்டாய். என் வாழ்நாளெல்லாம் காங்கிரஸ் எதிர்ப்புக் கொடியைத் தூக்கிப் பிடித்தேன். அதை நான் போன உடனேயே நீ கீழே போட்டுவிட்டாய்! மாநில சுயாட்சி கோஷத்தையே வாய்ப் பந்தல் முழக்கமாக்கி விட்டாய். இதையெல்லாம் விட முக்கியமானது, நமது உயிர்க் கொள்கையான இடஒதுக் கீட்டினையும் சனாதன எதிர்ப்பினை யும் கீழே போட்டு விட்டு, அந்த சங்பரிவாரக் கூட்டத்தோடு போய்ச் சேர்ந்தாய். தற்போதும் இனி சேரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்ல மறுக்கிறாய்...
கலைஞர் (இடையில் குறுக்கிட்டு): திமுகஇருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற என் விளக் கத்தை நீங்கள் படிக்கவில்லையா, அண்ணா?
பெரியார் : வெங் காயம்! இந்த மாதிரியான பூச்சு வேலையெல்லாம் செய்து உன் உடன் பிறப்புக்களை வேண்டு மானால் நீ ஏமாத்தலாம். அண்ணாவுக்குப் பிறகு எமது கொள்கைகளை அமல்படுத்தும் இடத்தில் நீ இருப்பதாக எண்ணி ஒரு காலத்தில் பெருமைப்பட்டேன். சாதி மறுப்பு போச்சு. மதவாத எதிர்ப்பு போச்சு.. இப்படி நான் எதற்கெல்லாம் பாடுபட்டேனோ அதெல்லாம் போச்சு! நாங்க நொந்து நூலாகிப் போனோம். வரோம் தம்பி, உங்க ராஜ்ஜியத்தை நடத்துங்க!
(அடுத்து யாரைச் சந்திக்கலாம் என இருவரும் விவாதிக்கின்றனர்).
அண்ணா : கட்சியின் பெயரிலேயே என் பெயரை வைத்திருக்கும் கட்சித் தலைவியைச் சந்திக்கலாமா, தந்தையே?
பெரியார் : இப்படி வெள்ளந்தியா இருக்கியே அண்ணாதுரை! அந்தம்மாகிட்ட நமக்கு அப்பாயிண்ட் மெண்ட்டே கிடைக்காது. அப் படியே கிடைத்தாலும் நாம சொல்றதைக் காது கொடுத்துக் கேக்கக் கூட அவங்க தயாரா இருக்கமாட்டாங்க. அதுக்கு பதிலா, அந்த சனாதனக் கட்சியோட கூட்டணி வச்சிருக்காங்களே அந்த மூணு பேரையும் பார்ப்போம்.
(வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் மூவரும் அமர்ந்து தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய பிரச்சாரம் பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பெரியாரும் அண்ணாவும் உள்ளே நுழைகின்றனர்).
வைகோ : வாங்க, வாங்க! என்ன திடீர்னு வந்திருக்கீங்க? கலிங்கப்பட்டி போகலாமா? அருமையான விருந்து வைக்கிறேன்.
அண்ணா : விருந்தெல்லாம் வேண்டாம் தம்பி! சில கேள்விகளைக் கேட்கவே வந்திருக்கோம். சேதுசமுத்திரத்திட்டத்தையும் இடஒதுக்கீட்டையும் எதிர்க்கிற பாஜகவோடு கூட்டணி வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது தம்பி?
விஜயகாந்த் : தமிழ்நாட்டிலே ஊழலை ஒழிக்க நான் இருக்கேன். நாட்டிலே ஊழலை ஒழிக்க ஒருவர் வேண்டாமா? அவர்தான் நரேந்திர மோடி. அவர் பிரதமராக வந்தால் நதிகளை இணைப்பார். காவிரிப் பிரச்சனை தீரும். மின் வெட்டுப் பிரச்சனை தீரும்... இந்தியா வல்லரசாகும்... இப்படி மனம் போனபடி சொல்லிக்கிட்டே போகலாம்.
பெரியார் : சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கிட்டிருக்காரே, யாரு இவரு?
வைகோ : இவர்தான் கருப்பு எம்.ஜி.ஆர். கேப்டன் விஜயகாந்த். இவரும் ஒரு திராவிடக் கட்சி வச்சிருக்காரு.
பெரியார் (வைகோவைப் பார்த்து ) : ராமருக்குக் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்னெல்லாம் சொல்றவங்களோட கூட்டணி வச்சிருக்கீங்க. மோடி சொல்றதைச் செய்தே காட்டுவார்ங்கறீங்க. அப்ப ஆபத்து இல்லியா? சிறுபான்மை மதத்தினரைப் பாதுகாக்கற கடமை நமக்கு இல்லியா தம்பி?
ராமதாஸ் : நம்ம நாட்டிலே நாடகக் காதலை ஒழிக்கணும்னா அதுமோடியாலதான் முடியும். நாடு பூராவும் மதுவிலக்கு அமலாகணும்னா மோடி பிரதமர் ஆகணும்.
வைகோ : தனி ஈழம் மலரணும்னா மோடி பிரதமர் ஆகணும். கச்சத் தீவை மீட்கணும்னாலும் சரி, ராஜபக்சேயை தூக்கிலே போடணும்னாலும் சரி மோடி பிரதமர் ஆனாத்தான் முடியும்.
விஜயகாந்த் : மீனவர் பிரச்சனை தீரணும்னா மோடி பிரதமர் ஆகணும்.
பெரியார் (அண்ணாவைப் பார்த்து ) : இப்படி இவங்க பாட்டுக்குக் கற்பனையா பேசிக்கிட்டே போறாங்களே? இதெல்லாம் மோடிக்குத் தெரியுமா? கடவுள் நம்பிக்கை இருந்தா தமிழ்நாட்டை ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். நமக்கு அந்த நம்பிக்கை இல்லாததினாலே அப்படிச் சொல் லித் தப்பிக்கவும் முடியாது...
அண்ணா : கவலைப்படாதீங் கப்பா! கம்யூனிஸ்டுகள் இருக்காங்க. நாம அன்று சொன்னதையெல்லாம் இன்னிக்கும் மறக்காம இருக்கறது அவங்க மட்டும்தான். அந்தக் கொள்கைகளைக் கைவிடாமல் இருப்பதும் அவர்கள்தான். மக்கள் இந்தத் தடவை நிச்சயம் அவங்களுக்கு ஓட்டுப் போடுவாங்க. தமிழகத்தின் எதிர்காலம் இனிமே அவங்க கையிலேதான். (இருவரும் மறைகின்றனர்)
- கற்பனை : ராஜகுரு
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்...
பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
தலையங்கம்கடைசியில் பாஜக, 16வது மக்கள வைக்கான தன்னுடைய தேர்தல் அறிக் கையை வெளியிட்டுவிட்டது. இந்திய கார்ப் பரேட்டுகளும் அவற்றின் ஊடகங்களும் பாஜக-தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மிகவும் தம்பட்டம் அடித்துவந்த போதி லும், அத்தேர்தல் அறிக்கையில் எதிர்கால இந் தியாவை எப்படி உருவாக்கப்போகிறோம் என்பது குறித்து சரியானமுறையில் தெளிவு படுத்தப்படவில்லை என்கிற கருத்தும் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமல்படுத்தத் துவங்கியபின்னர் தேர் தல் அறிக்கை வெளியாகி இருப்பது என்பதுஇதற்குமுன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இந்தியத் தேர்தல் வரலாற் றினை ஆய்வு செய்தால், இவ்வாறு இதற்கு முன்னெப்போதுமே நடந்ததில்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். இதிலிருந்தே பாஜக வின் தேர்தல் அறிக்கை ஒரு சடங்காகத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும், உண் மையில் அதன் உண்மையான நிகழ்ச்சிநிரல் வேறு என்பதும் அதனை அவர்கள் மக்க ளுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்ப வில்லை என்பதும் தெளிவாகிறது.
எப்படி இருந்தபோதிலும், தேர்தல் அறிக் கையைப் பரிசீலிக்கும்போது, தன்னுடைய மறைமுகமான குறிக்கோளை எய்துவதற்கு அது மேற்கொள்ள விருக்கும் முக்கியமான நடவடிக்கைகளை கழித்துவிட்டுப் பார்த்தோ மானால், அதில் படாடோபமான வார்த்தை களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிய வரும். பல்வேறுவிதமான ஸ்லோகங்களுக்கிடையே இரு அடிப்படையான அம்சங்கள் வெளியாகி இருப்பதையும் காணமுடியும். முதலாவது அம்சம், பாஜக மீளவும் தன்னுடைய வெறி பிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வலி யுறுத்தி இருப்பதாகும். அயோத்தியில் தாவா வுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மீளவும் அது உறுதி அளித்திருக்கிறது. ஆயினும், இந்த தடவை இதனை அது ``அரசியலமைப்புச் சட்டத்திற்கு” உட்பட்டு செய்யும் என்று மிகவும் எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறது.அப்படியானால் பாபர் மசூதி அரசிய லமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இடிக்கப்பட்டதா என்கிற கேள்வியை இயற்கையாகவே எழுப்புமாறு இது நம்மைத் தூண்டுகிறது. அந்த சமயத்தில், பாஜக மிகவும் கேடுகெட்டமுறையில் இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை மீறியது. மாநிலத்தில் ஆட்சி செய்த அதன் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் பாபர் மசூதியை முழுமையாகப் பாதுகாத்திடுவோம் என்று அளித்த உறுதி மொழிகளையெல்லாம் அது காற்றில் பறக்கவிட்டு விட்டது.
மேலும், அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் மீண்டும் இப் போது பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதுடன், அன்றையதினம், ``நன்கு பயிற்சிபெற்ற ஒப்பந்தக்காரர்கள் பல மாதங் களில் செய்யக்கூடிய வேலையை எங்கள் `கரசேவகர்கள்’ ஐந்தே மணி நேரங்களில் இடித்துத் தள்ளியுள்ளார்கள்” என்று பீற்றிக் கொண்டுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறித்தனமான இந்துத்துவாவின் மற்ற கோரிக்கை களையும்கூட வலியுறுத்திக் கூறியிருக்கிறது. ஒரே சீரான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ஒழித்துக்கட்டப்படும் என் றும் அது கூறியிருக்கிறது. பாஜக 1999ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தவிர 1996க்குப்பின் வெளியிட்ட அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலுமே இந்துத்துவாவின் இந்த நிகழ்ச்சிநிரல்களை எல்லாம் அது உயர்த்திப்பிடித்திருக்கிறது. இவ்வாறு பாஜக மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அன்றைக்கிருந்த பாஜக இன்றைக்கும் சிறிதும் மாறவே இல்லை. அது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கம்தான் என்ப தைத்தவிர வேறெதுவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாகவே இன்றையதினம் பறைசாற்றிவிட்டது.
தங்களுடைய `இந்து வாக்குவங்கி`யை ஒருமுகப்படுத்துவதற்காக மதவெறி விஷத்தை மிகவும் ஆழமான முறையில் இப்போது விதைத்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அடுத்து, அதன் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு வருவோம். பாஜக ``உள்கட்டமைப்பு வசதிகள்” மற்றும் ``தெரிவு செய்யப்பட்ட ராணுவத் தொழில்கள்” உட்பட அனைத்துத் துறைகளிலும் அந்நிய நேரடிமுதலீட்டை அனுமதித்திடும் என்று கூறி யிருக்கிறது. ``தொழில்தகராறு சட்டங்கள்” மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், ``வர்த்தகர்களுக்கு உரிமங்கள் வழங்குவதற் கான நெறிமுறைகள்” தளர்த்தப்படும் என் றும் கூட கூறியிருக்கிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்படும் என்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறது. குஜராத் உட்பட அதன் மாநில அரசுகளே இதனைஇதுவரை உறுதியாக எதிர்த்து வந்திருக்கின் றன. இவை அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு தேன் தடவிய வார்த்தைகளாகும்.
அதாவது, பாஜக தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தால் இந்தியாவின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களை யும் பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்ப ரேட்டுகள் தங்கள் கொள்ளைலாப வேட் கைக்கு மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் உட்பொருளா கும். அதாவது, இத்தாலி பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினி ஒருசமயம் வரையறுத்ததைப் போல, ``பாசிசம் என்பது, அதற்குள் வேறுபல அம்சங்கள் அடங்கியிருந்தபோதிலும் அத் துடன், அரசு மூலதனத்துடன் கைகோர்ப்பது என்பதுதான்.” தேர்தல் அறிக்கையில் மீதம்உள்ள 42 பக்கங்களும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வகையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பாஜகவின் உண்மையான உள்நோக்கம் முற்றிலும் வேறானதாகும். பாஜகவின் பிரச்சாரம் முழுக்க முழுக்க அதனுடைய `தலைவரைச் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. ``நமது தேசம் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக் கும், ``ஒளிமயமான எதிர்காலத் திற்கும்” சர்வலோக நிவாரணியாக ``மோடி மந்திரம் செயல் படும்” என்று பாஜகவின் இணையதளம் கூறுகிறது. ஆயினும் இவற்றை அது எப்படிச் செய்யப்போகிறது என்பதற்கு அதில் ஒன்றும் பதில் இல்லை. நாட்டில் எதிர்காலத்தில் `பாலும் தேனும்` ஓடும் என்பதற்கு நமக்குக் காட்டப்படும் திசைவழி, `குஜராத் மாடல்’ என்பதாகும். ஆனால் `குஜராத் மக்கள் வாழ்நிலைமைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தற் போது வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன. உதாரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான மதிப்புக் கூட்டல் வரி என்பது நாட்டிலேயே பிற மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தில்தான் அதிகமாகும்.
அதாவது 15 சதவீதம் அங்கே வரி. விலைவாசி உயர்வுக்காக மத்திய அரசைக் குறைகூறும் அதே சமயத்தில் இவ்வாறு மதிப்புக்கூட்டல் வரி மூலமாக பல மாநில அரசுகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டுள்ளன. வேலைநிறுத்தங்கள், கதவடைப்புகள் உட்பட தொழிலாளர் அமைதியின்மை நிகழ்வுகள் அதிகம் நடந்துள்ளது குஜராத் மாநிலத்தில்தான். பொது விநியோக முறை மிகவும் மோசமாக உள்ள மாநிலம் குஜராத் மாநிலம்தான். இந்தியாவிலேயே தொழிலாளர் பகுதிகள் மிகவும் மாசு அடைந்திருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாப்பி பகுதிகளாகும். குஜராத் மாநில அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தியை மிகவும் குறைத்துவிட்டதாகவும், அது தனியார் நிறுவனங்களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் விமர் சகர்கள் கூறுகிறார்கள். நாட்டில் சுகாதாரத்திற்காக தனிநபர் செலவு செய்வது என்பது குஜராத்தில்தான் மிகவும் குறைவு.இந்தியாவிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ மனைப் படுக்கைகள் கொண்டிருப்பது, குஜராத் மாநிலம் தான்.
அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 143 படுக்கைகளே அங்கே உள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் பிறந்த குழந்தைகள் இறப்பதும் குஜராத்தில்தான் அதிகம். அநேகமாக ஐந்து வயதுக்குக் குறைவாக வுள்ள குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தை போதிய சத்துணவு இன்றியும், நான்கில் மூன்று குழந்தைகள் ரத்தச்சோகையுட னும் குஜராத்தில் காணப்படுகின்றன. (முழு மையான தகவல்களுக்கு, 2014 ஏப்ரல் 6, தி வீக் இதழைப் பார்க்கவும்.)`குஜராத் மாடல்’ அவலட்சணங்களை ஏற்கனவே நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதன் சாராம்சம் என்னவெனில், இந்தியா மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சலுகைகளும், உதவி களும் வாரி வழங்கிருப்பதேயாகும். இத்தகைய பேர்வழி மாநில முதல்வராயிருப்பதிலிருந்து, மத்திய ஆட்சியின் பிரதமராக வந்துவிட்டால், இதைவிடப் பல்மடங்கு சலுகைகளும் உதவிகளும் கிடைத்திடுமே என்று அவை ஏங்கு வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஒரு மாநிலத்தில் கிடைப்பதைப்போல அனைத்து மாநிலங்களிலும் தங்களுக்குக் கொள்ளை லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் கள் கனவு காண்கிறார்கள். பாஜகவின் பொருளாதாரப் பார்வை என்பது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை களை வாரி வழங்குவதுதான். இருவித இந்தியர்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதே அதன் பொருளாதாரப் பார்வை. இதனால்தான் கார்ப்ப ரேட்டுகள் பாஜகவையும் மோடியையும் தூக்கிநிறுத்துகின்றன.
ஆனால், நாட்டின் பெரும் பான்மை மக்களின் கதி? பாஜக ஆட்சிக்கு வருமாயின் அவர்களின் அன்றாட வாழ்க்கை கடும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக் கப்படும்.ஊடகங்களில் நேர்காணல் நடைபெறும் போது பாஜகவின் தலைவர் பல கேள்வி களுக்கு பதில் கூற மறுப்பதானது, அவரது ஜனநாயக விரோத அணுகுமுறையை முழுமை யாகவே வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் மோடியின் வலதுகரமாக விளங்குபவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறித் தீயை கிளறிவிட்டு, வரும் தேர்தலில் அவர்களைப் `பழிக்குப்பழி’ வாங்க வேண்டும் என்கிற முறையில் பேசியிருப்பது அவர்களின் உண் மையான கோர முகத்தை உலகுக்குக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களின் மூல மாகத்தான் இவர்கள் வளர்கிறார்கள்.முதலில் கலவரங்களை உருவாக்கு வார்கள், பின்னர், அந்தப் பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களையே கலவரங் களுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சுமத்துவார்கள்.
பின்னர், அவர்கள் மீது மேலும் மதவெறி வன்முறையை ஏவ இத னையே ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள் வார்கள். மிகமோசமான முறையில் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை - பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை இவ்வாறு இவர்கள் மேற்கொள்வதற்கு இது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.பிரதமர் வேட்பாளர் மோடியின் பேச்சுக் களை உற்றுக்கவனித்தால் ஒன்றை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மோசமாக ஆட்சி செய்தது என்று அவர் கூறும் அதே சமயத்தில் அதைவிட மிகவும் கூர்மையான முறையில் நாட்டில் மதக்கலவரங்களைத் தூண்டும் விதத்தில் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்பதை நன்கு உணர முடியும். காங்கிரஸ் கட்சியும் உத்தரப்பிரதேச மாநிலஅரசும் `இளஞ்சிவப்பு புரட்சி’ யை ஊக்குவிக்கின்றனவாம். அதாவது, உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்குப் போதிய அளவு தீவனமோ தண்ணீரோ இல்லை என்பதும், அவற்றின் காரணமாகவே அம்மாநிலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டு, மாட்டுக்கறிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் இதன் பொருளாகும்.
பசுவதையைத் தடை செய்ய வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் கோரிக்கையை இது பிரதிபலிப்பதுபோல் இல்லையா? இது குஜராத்தில் நடைபெற்று வரும் வெண்மைப் புரட்சிக்கு எதிராக இருக்கிறதாம். குஜராத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனம் மூலம் பால் உற்பத்தி அதிகரித்திருப்பதைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். உண்மையில் அமுல் கூட்டுறவு நிறுவனம் மோடி தான் பிறந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான தேதிக்கு முன்பாகவே, 1946லேயே அமைக்கப்பட்ட ஒரு நிறுவன மாகும். அக்கூட்டுறவு நிறுவனம் 1946 டிசம்பர் 14 அன்று முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இதற்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கும் அல்லது மோடிக்கும் எவ்விதத்திலும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆயினும் மேலும் ஒரு வரலாற்றைச் சிதைத்து தங்களுக்கு சாதகமாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.
வாரணாசி(காசி)யைத் தேர்வு செய்ததுகூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதற்காகத்தான் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களைத் தாங்கள் விரும்பக்கூடிய அளவிற்கு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்டிரியமாக’ மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலை எப்படியாவது அரங்கேற்றிடவேண்டும் என்பது அடிநாதமாக அவர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருந்து வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் மீது ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களைக் கொண்டு வந்தது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. எனவே இவர்களது இக்கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதற்கான மாற்றுக் கொள்கைத் திசைவழியை இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்திருக்கும் அதே சமயத்தில், பாஜக அவ்வாறு எந்த மாற்றுக் கொள்கையையும் முன்வைத்திடவில்லை என்பது மட்டுமல்ல, உண்மையில் அக்கட்சி, அதனை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறது.
ஊழல் புரிவதிலோ அல்லது பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருப்பதிலோ காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே எவ்விதமான வித்தியாசமும் கிடையாது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை உன்னிப்பாகப் பார்த்தோமானால் அது ஆர்எஸ்எஸ்-இன் ஸ்லோகமான ``ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்பதை உயர்த்திப்பிடித்திருப்பதைக் காண முடியும். இந்தியில் இதனை ``ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான்” என்று பிரபலப்படுத்தி வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள நம் நாட்டை அவர்களால் ஏற்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியோர் பின் பற்றிய நாஜி பாசிசத்தின் வாரிசுகள்தான் இவர்கள். அதன் காரணமாகத்தான் கார்ப்பரேட்டுகள் இவர்களைத் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையுமே புறந்தள்ளிவிட்டு, இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் வலுவுடன் அமையக்கூடிய எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் மட்டுமே, அதன் மூலம் மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கை திசைவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் வாழ்க்கைத்தரத்தை அளித்திட முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
அவர் ஏற்றி வைத்த தீபத்தை தொடர்ந்து எரியச் செய்வோம்!

மார்க்சிஸ்ட் தலைவர்பி.டி.ரணதிவே கூறுகிறார் :“.... தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய புகழ்பெற்ற பெரும் வீரரான அம்பேத்கர், ஆரம்பக்காலத்தில் உயர்சாதியினரின் கபடத்தனங்களை அம்பலப்படுத்திக் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கினார். அதற்குப்பின், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமும் தனி குடியிருப்புகளும் கோரினார். இதை ஒரு விவசாயப் புரட்சியின்றிச் சாதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுப்பதன் மூலம் அவர்கள் பண்ணையடிமைகளாக மற்ற சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையைத் தவிர்க்கலாம் என்பது மிகவும் சரியான கருத்தாகும். அதே நேரத்தில் நிலமற்றோர் அனைவரின் பொதுப் போராட்டத்தின்மூலம் இதைச் சாதித்திருக்க முடியும்...“காங்கிரஸ் தலைவர்களுக்கெதிராக வும் அவர்களது கபடத்தனங்களுக்கெதிராக வும், மிகத் தீவிரத் தாக்குதல் நடத்தி யவர் டாக்டர் அம்பேத்கரை விட வேறு எவருமில்லை.
ஆனாலும், காங்கிரஸ்காரர்கள் சமீபக் காலம்வரை ஜனநாயகத்தின் கடைசி வார்த்தை என்று புகழ்ந்து வந்த இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பிரதான சிற்பிகளில் அம்பேத்கரும் ஒருவர். இந்த அரசியல் சட்டத்தின்கீழ்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. கொள்ளையடிக்கப்படுகின் றன. அவர்களது மனைவிகள் கற்பழிக் கப்படுகின்றனர். ஏன் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆகவே அம்பேத்கர், தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை...’தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்குமானால் அவை அந்த மக்களின் உயர்வுக்கு வழி செய்யும், சமூகஒடுக்குமுறை ஒழியும் என்று டாக்டர் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு அடித்தளமாயுள்ளது சொத்துரிமை என்பதையும் அதை ஒழித்துக் கட்டுவதன் மூலமே சமூகக் கொடுமைக்கும் ஒடுக்குமுறைக்கும் இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்பதையும் அவரால் காண இயலவில்லை.ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்குச் சம உரிமையுண்டு என்ற முழக்கத்தைக் கொடுத்த டாக்டர் அம்பேத்கர் அதை நடைமுறையிலும் கொண்டுவரப் பாடுபட்டார். அவர் உருவாக்கிய `இந்துத் திருமணச் சட்ட மசோதாவில்’ சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்ற சரத்தைச் சேர்த்தார். சாதிய மேல்தட்டுப் பகுதியினரின் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா நிறைவேறாமல் செய்யப்பட்டது.
தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற டாக்டர் அம்பேத்கர் அதைக் கைவிட்டுச் சமரசம் செய்துகொள்ள மறுத்தார். சட்ட அமைச்சர் என்ற பதவியையே தூக்கி எறிந்தார். அம்பேத்கரின் நாற்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் சமூக வாழ்வின் சாதனைகளை ஆராயும்பொழுது இரண்டு அம்சங்கள் தெளிவாகப் புரியும்.ஒன்று, எப்பொழுதெல்லாம் அவர், தேசிய சக்திகளுடனும் கம்யூனிஸ்ட்களுடனும் இணைந்து நின்றாரோ அப்பொழுதெல்லாம் அவர் வெற்றி கண்டார். இரண்டு, இணைந்து நில்லாத போது அவர் வெற்றி காண முடியவில்லை. சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, தொழிலாளர் உரிமை காக்கும் நலன் காக்கும் பிரச்சனைகள், மாநிலங்கள் சீரமைப்பு, பெண்கள் உரிமை, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநிலங்களின் உரிமைகள் போன்ற பல பிரச்சனைகளை இவற்றிற்கு உதாரணமாகக் கூறலாம்.
கடந்த காலத்துப் போராட்டங்களை வேகமாக மறு ஆய்வு செய்யும் பொழுது ஒரு முடிவுக்கு நாம் எவ்விதத் தயக்கமுமின்றி நிச்சயம் வர முடியும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, நல்வாழ்விற்காக அம்பேத்கரும் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஓரிரு கட்டங்களில் சேர்ந்து போராடி அந்த மக்களின் உரிமையை நிலைநாட்டிய நிகழ்ச்சிகளைக் காணும்பொழுது இவ்விரு சக்திகளும் மற்ற பிரச்சனைகளிலும் இணைந்து போராடியிருந்தால், அவை மிகவும் வலுவடைந்திருக்கும், புதிய வெற்றிகளை அந்த மக்களுக்கு தேடித் தந்திருக்கும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுவரை கணிச மான பலன் பெற முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.1991 ஏப்ரல் 14 அன்று மும்பையில் நடந்த டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனது உரையின் இறுதியில் முழங்கினார்:“....தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.“டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபமானது, ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யப்பட வேண்டும்...”
- என்.ராமகிருஷ்ணன் எழுதிய “நாம் அறியாத அம்பேத்கர்” நூலின் பகுதிகள்.