- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. முர்சி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த ஆட்சி மதவாத பழமைகண்ணோட்டம் கொண்டதாக இருந்ததோடு, முபாரக் ஆட்சி பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றியது. இதனால் இந்த அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதை பயன்படுத்திக் கொண்டு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. முர்சி ஆதரவாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
எகிப்தில் தொடர்ந்து ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் வலதுசாரி பொருளாதாரக் கொள்கை அந்த நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு, பாரம்பரியமான மதச்சார்பின்மை கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எகிப்து இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் கட்சி. பாஜக இந்துத்துவாவை முன்னிறுத்தும் கட்சி.
இரண்டு கட்சிகளைப் பொறுத்தவரை மதங்கள் வேறாயினும், நாடுகள் வேறாயினும் அடிப்படை வாதம் ஒன்றே. இருகட்சிகளுமே வலதுசாரி பொருளாதாரக் கொள்கையில் பின்பற்றுபவை. இரு கட்சிகளுமே அமெரிக்கா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆசி பெற்றவை. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வலதுசாரி பொருளாதார கொள்கையை கொண்ட கட்சிகள் ஆட்சி நடத்துவதையே விரும்புகிறது.
அந்தக் கட்சிகள் மதரீதியாக பழமைவாத கண்ணோட்டம் கொண்டதாக இருந்தாலும் அது குறித்து ஏகாதிபத்தியமோ சர்வதேச நிதி மூலதனமோ கவலைப்படுவதில்லை. மாறாக இத்தகைய கட்சிகளின் ஆட்சி தங்களது தாராளமய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதற்கு மேலும் வசதி என்றே அவை கருதுகின்றன.இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நவீன தாராளமயமாக்கல் கொள்கையில் தவிர்க்க முடியாத விளைவாக அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள மக்களின் அதிருப்தியை இந்துத்துவா கொள்கையுடைய பாஜக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. ஆனால் இவர்களும் கூட காங்கிரஸ் கட்சி பின்பற்றும் அதே பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுபவர்களே ஆவார்கள். நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றுவது யார் என்பதில்தான் இவர்களுக்குள் போட்டியே தவிர ஒருவருக்கு ஒருவர் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் அல்ல.
தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் பிரதமராக இருந்த வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல்குழு சிபாரிசை செயல்படுத்த முயன்றார். அதை தடுக்கும் நோக்கத்துடன் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். கலவரத்தை தடுக்க அத்வானி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் பாஜக விலக்கிகொண்டது. உ.பி.யில் ராமர்கோவில் கட்டப்போவதாக கூறிக்கொண்டு ரதயாத்திரை, செங்கல் பூஜை என தொடர்ச்சியாக மத வெறியைத் தூண்டிவிட்டு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.
உண்மையில் இவர்களுக்கு ராமர் மீது பக்தி இல்லை. மாறாக தேவை ஏற்படும்போதெல்லாம் ராமர் கோவில் பிரச்சனையை கையிலெடுப்பதே இவர்களது வழக்கம். அண்மையில் கூட வி.எச்.பி மீண்டும் அயோத்தி பிரச்சனையை கையிலெடுத்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டே இந்தப்பிரச்சனையை மீண்டும் ஊத முயன்றனர். ஆனால் அது பொதுமக்களின் கவனத்தை பெறவில்லை.பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு நாச வேலைகள் காரணமாகவே பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது.
பசுவதை கூடாது என்பது எங்களது கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ் பாஜக பரிவாரம் கூறும். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவிலிருந்து பெருமளவு மாட்டுத்தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது. வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொண்ட பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி எந்த வகையிலும் வித்தியாசமானதாக இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போலவே அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்தாடியது. அத்வானியைவிட வாஜ்பாய் மென்மையானவர் என்று கூறினர்.
இப்போது அத்வானியைவிட நரேந்திரமோடி தீவிரமானவர் என்று அவரை முன்னிறுத்தும் வேலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இறங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடி வருவது தங்களுக்கு மிகவும் வசதியானது என்று கருதி அவரை வெகு வேகமாக ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மோடி இந்துத்துவாக் கொள்கையில் பிடிப்புள்ளவர் என்று கூறி மட்டும் பெரும் பகுதி மக்களை கவர முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் மோடி ஆட்சியில் குஜராத் பெருமளவு வளர்ச்சி பெற்றுவிட்டது என்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் தேசிய அளவிலான புள்ளி விபரங்கள் இவர்கள் கூறுவது முழு பொய் என்பதை நிரூபித்து வருகின்றன.
பல்வேறு துறைகளில் குஜராத் பின்தங்கியுள்ளது என்பதே உண்மையாகும்.ராமாயணத்தில் ‘சீதையைக் கவர இராவணன் ஒரு சூழ்ச்சி செய்வான். தன்னுடைய மாமனான மாரீசனை மாய மான் வேடம் பூண்டு சீதையைக் கவருமாறு கூறுவான். அதன் படி மாரீசன் பொய் மான் வேடம்பூண்டு சீதை முன் செல்வான். இதை உண்மையான மான் என்று நம்பும் சீதை அதைப்பிடித்து தருமாறு ராமனிடம் கூறுவார். மாய மானின் பின்னால் ராமன் சென்றுவிட, மாரீச மான் மீது ராமன் அம்பு எய்த அந்த மாயமான் ஆபத்து என்று கூற காவலுக்கு நின்ற லட்சுமணனையும் சீதை அனுப்பிவிடுகிறார். பின்னர் சீதையை ராவணன் கடத்திச் சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான்‘ என்பது கதை.
மாரீச மானின் பொய்த் தோற்றத்தை கண்ட சீதை மயங்கி ‘மாற்றுயர்ந்த பொன்னால் ஆனது இந்த மான்; அதன் காதுகளும் கால்களும் மாணிக்கத்தால் அமைந்துள்ளன. அதன் ஒளி நெடுந்தூரம் வரை பரவி நிற்கிறது. வந்து பாருங்கள்” என்று ராமனை சீதை அழைத்ததாக கம்பர் கூறுகிறார். அந்த பொய் மானைப் பார்த்து ராமனும் கூட மயங்கிப்போனார். “இம்மான் இந்நிலத்தினில் இல்லை; என,எம்மான் இதனைச் சிறிதும் எண்ணல் செயான்“என்று ராமனும் கூட இப்படி ஒரு மான் இருக்கக்கூடுமா என்று ஆராயாமல் மயங்கிவிட்டான் என்கிறார் கம்பர். பின்னர் அசோக வனத்தில் பாடும் போது சீதை இப்படிப் புலம்புவதாக கம்பர் எழுதுகிறார்.
“வஞ்சனை மானின் பின் மன்னைப்போக்கி, என்மஞ்சனை வைது, பின்வழிக் கொள்வாய் எனாநஞ்சு அவையான் அகம்புகுந்த நங்கையான்உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ”அதாவது வஞ்சனையே உருவெடுத்து வந்த மானின் பின்னால் ராமனையும் பின் லட்சுமணனையும் அனுப்பியதால் இன்றைக்கு நஞ்சு போன்ற கொடிய மனம் கொண்ட ராவணணின் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுவிட்டதே. நான் உயிர்வாழத் தகுமோ என்று சீதை வேதனையில் விம்மினாராம்.ஆர்எஸ்எஸ் என்கிற ராவணனால் அனுப்பப்பட்ட மாரீச, மாய மானே நரேந்திர மோடி யாகும். மாரீச மான் பொன்னால் இழைக்கப்பட்டதாகவும், வைரம், வைடூரியத்தால் மின்னுவதாகவும் தோற்றம் காட்டியது போலத்தான் குஜராத் வளர்ச்சி பெற்றுவிட்டது என்று பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
இந்த மாரீச மானின் பொய்வேடத்தை மக்கள் நம்பினால் சீதைக்கு ஏற்பட்ட கதியே இந்திய வாக்காளர்களுக்கு ஏற்படும். இந்திய மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது.
No comments:
Post a Comment