Friday, October 18, 2013

நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்!



1919 ஏப்ரல் 13. நாற்புறமும் மதிற்சுவரால் சூழப்பட்ட ஜாலியன் வாலாபாக் திடலில் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் அதிகாரி டயர் துப்பாக்கிச் சூடு நடத்தினான். வேட்டையாடலுக்குப் பின் குவிந்து கிடந்த காட்டுக் கோழிகள் போல் கொல்லப்பட்ட உடல்கள் தாறுமாறாகக் கிடந்தன.பிணங்களின் மீது நின்று ஆங்கிலேய அதிகார வெறி, டயர் வடிவில் எக்காளமிட்டது. தேசம் பதறியது. பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரும் அமிர்தசரசும் போராட்ட வெக்கையில் தகித்துக் கொண்டிருந்தன.
அந்தச் சூட்டை அடைகாத்து அதிலிருந்து தன் முதல் கதையைப் பிரசவித்தவர்தான் எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ. அதன் பெயர் ‘தமாஷா’.1936-ல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அப்சானே’ வெளியானது. உருது இலக்கியத்தில் வெளியான புத்தகங்களில் தன்னுடைய படத்தை மேல் அட்டையில் போட்ட முதல் எழுத்தாளர் மண்ட்டோ தான். தலைமுடி எல்லாம் கலைந்தபடியும் சட்டைக்காலர் தூக்கிவிடப்பட்டும் அவரது ஓவியம் அழுக்கேறிய அட்டையில் வரையப்பட்டிருந்தது. பளபளப்பாகத் தோன்றும் அதிகார மையங்களுக்கு எதிரான உணர்வுகளோடும் தன்மானமிக்க அகங்காரத்தோடும் எப்போதும் இருக்க வேண்டுமென மண்ட்டோ விரும்பினார். மரபான அடக்குமுறைச் சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் கவனமாக இருந்தார்.1912-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பஞ்சாப் மாகாணம் லூதியானா மாவட்டம் சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் பிறந்தவர் சாதத் ஹசன். காஷ்மீர் முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்த இவரது தந்தை அதிகாரத் தோரணையோடு வாழ்ந்தவர். தாயோ மிகவும் இளகிய மனம் படைத்தவர். இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையில் சிக்கி உருப்பெற்றவர் தான் மண்ட்டோ.உருது இலக்கியத்தில் முத்திரை பதித்த மண்ட்டோ மெட்ரிக் தேர்வில் உருது மொழிப் பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்பது வேடிக்கையான உண்மையாகும். ஆங்கிலத்தில் வெளி வந்த ரஷ்ய, ஃபிரெஞ்சு இலக்கியங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செகாவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியூகோ, ஆஸ்கர் ஓயில்ட் ஆகியோரின் புதினங்களால் கவரப்பட்டார்.
அவரது தொடக்க கால இலக்கியப் பணியானது மொழி பெயர்ப்பாகவே அமைந்தது.1936-ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுடன் ஆரம்ப காலத்தில் அதன் உயிர்த்துடிப்பு மிக்க சக்தியாகவும் விளங்கினார். பேச்சு மொழி பஞ்சாபி என்றாலும் இலக்கியத்தை கடைசி வரை உருது மொழியிலேயே படைத்தார்.இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி நடந்த மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் மண்ட்டோவைத் துடிக்க வைத்தன.குற்ற உணர்வு கொண்டு மண்ட்டோ எழுதுகிறார் ‘ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லிம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள், இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் மரணமடைந்ததில் துயரம் கொள்வதற்கு ஏதுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது எதுவென்றால் கொல்லப்பட்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே வகையைச் சார்ந்தவர்கள் என்பது தான்...’ சஹாய் கதை இப்படித்தான் தொடங்கி விரிகிறது.தேசப் பிரிவினையின் வரலாறு இந்திய - பாகிஸ்தான் பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட வன்முறையின் வரலாறாகும். சில்லிட்டுப்போன சதைப்பிண்டம் போன்ற கதைகள் அந்த வன்முறையை அதே வலியுடன் நுட்பமாகப் பேசியவை. துணைக்கண்டத்தின் மாபெரும் ராணுவத்திலிருந்து இந்து, சீக்கிய, முஸ்லீம் வீரர்கள் - குடியிருப்புகளிலிருந்தும் படை வீடுகளிலிருந்தும் இரண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டனர். ராவல் பிண்டியில் இருந்த முஸ்லீம் வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லவிருக்கும் இந்து, சீக்கியத் தோழர்களுக்கு ‘படாகானா’ எனும் விடைதரும் விருந்தினை அளித்தார்கள். பிரிவு உபசார விருந்தளித்துப் பேசிய ஒவ்வொரு சீக்கிய இந்து அதிகாரிகளும் கண்ணீர் விட்டனர். பதிலளித்துப் பேசிய கர்னல் முகமது இத்ரிஸ், ‘எங்கு சென்றாலும் நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம். ஏனெனில் நாம் நமது ரத்தத்தை ஒன்றாகவே சிந்தி இருக்கிறோம்’ என்றார்.அதே போல தில்லியில் இருந்த இந்து, சீக்கிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு பிரிந்து செல்லவிருக்கும் முஸ்லிம் தோழர்களுக்கு படாகானா விருந்தளித்தனர். விழாவில் ஏழாவது ராஜபுத்திரப் படையின் முதலாவது பிரிகே டியர் கரியப்பா பேசினார்.
‘வெகுகாலமாகவே நாம் பொதுவான வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நமது வரலாறு பிரிக்கப்பட இயலாதது. நாம் சகோதரர்களாக இருந்திருக்கிறோம். நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்’. உணர்ச்சிக் கொந்தளிப்பில் நா தழுதழுத்தது அவருக்கு.இந்தியா - பாகிஸ்தான் விடுதலைக்குப்பின் மண்ட்டோ பாகிஸ்தானிலுள்ள லாகூரை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்தார். வாழ்க்கைக்கு முழுவதுமாக எழுத்தையே நம்பி இருந்தார். எனவே ஏழையாகவே இருந்தார். ‘என்நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன்... எங்கு என்னைப் போன்ற ஏழைகளும் என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு’ என்று பிரகடனம் செய்து கொண்டார்.‘அங்கிள் சாம்’ என்பது அமெரிக்க அரசாங்கத்தை குறிக்கும் பெயர். ரnவைநன ளவயவநள என்பதன் சுருக்கமான ரு.ளு என்பதிலிருந்து ருnஉடந ளயஅ என்பது உருப்பெற்றது. 1951 டிசம்பர் முதல் 1954 ஏப்ரலுக்குள் மண்ட்டோ 9 கடிதங்களை ‘அங்கிள் சாம்’ க்கு எழுதி உள்ளார். அமெரிக்க ஏகாதியத்திபத்தின் கலாச்சார மற்றும் அரசியல் ஆக்கிரமிப்புகளையும் மத அடிப்படை வாதத்தையும் நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கிய மனிதர்களையும் எள்ளல் சுவையுடன் எழுதிச் சென்றுள்ளார். மண்ட்டோவின் உலக அரசியல் அறிவை தெளிவுபடுத்துகின்றன இக் கடிதங்கள்.
250க்கும் மேற்பட்ட கதைகளையும் கட்டுரைகளையும் வாரிசுகளாக விட்டு விட்டு 1955 - ஜனவரி 18ம் நாள் தனது 42வது வயதில் லாகூரில் மரணமடைந்தார்.மத அடிப்படைவாதத்தால், அரசின் அதிகார மையத்தால், ஏகாதிபத்திய கொள்கையால் மனித மாண்புகள் சிதைவுக் குள்ளாக்கப்படும் சூழலில் இவற்றிற் கெதிராக நாம் மண்ட்டோவின் படைப்புகளை முன்வைத்து விவாதிக்க முடியும்.அக்டோபர் 20 - மண்ட்டோவின் நூற்றாண்டு விழா சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment