Thursday, October 17, 2013

குரல் கொடுக்க வேண்டிய விவகாரங்கள்

போர் தந்த கொடும் இழப்புகளுக்கும், பெருந்துயரத்துக்கும் பிறகு, மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சனைகள், ராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பொருளாதார நெருக்கடிகள்... இவ்வளவுக்கும் நடுவில், கால் நூற்றாண்டுக்குப் பின் இப்போதுதான் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. 70சதவீத மக்கள் அதில் வாக்களித்திருக்கிறார்கள். மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றியைக் குவித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் விருப்ப வாக்குகள் பட்டியலிலும் முதலிடம் பெற்றிருக்கிறார். விக்னேஸ்வரனின் வெற்றி அவர் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான அத்தாட்சி மட்டும் அல்ல; அவர்களுடைய இன்றைய எண்ணங்களின் உறுதியான போக்கையும் பிரதிபலிக்கின்றன.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி, துணிச்சலான கருத்
துகளை முன்வைக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத்தின் தமிழீழ ஆதரவாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை விவகாரம் கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் பக்கத்து வீட்டுக்காரர் புகுந்து தம்பதிக்குள் விவாகரத்து கோர முடியாது; மேலும், அது தமிழகத் தலைவர்களின் வேலையும் அல்ல” என்றார். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் முதல் குரல் எழுந்தபோதே, “இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். எதிலும் ஒதுங்கியிருந்து சாதிக்க முடியாது; இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழர்கள் நலன் சார்ந்து இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னர், “நாங்கள் கேட்பது பிரிவினையை அல்ல; சுயாட்சியை” என்றார். இவ்வளவுக்கும் பிறகுதான் பிரமாண்ட வெற்றியை விக்னேஸ்வரனுக்குத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர்.தேர்தலுக்குப் பின், “மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல்துறை நிர்வாக அதிகாரம் கிடையாது” என்று இலங்கை அரசு அறிவித்தபோது இந்தியாவின் தலையீட்டைக் கோரினார் விக்னேஸ்வரன். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சமீபத்திய இலங்கைப் பயணத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தோல்வி என்று வர்ணித்த நிலையில், “இந்தியா கொடுத்த அழுத்தங்களினால்தான், வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. நான் இன்றைக்கு முதல்வராக நிற்கிறேன் என்றால், அதற்கு இந்தியாதான் காரணம். இந்தியா எந்த அளவுக்கு உதவ முடியும் என்பது நுட்பமான விவகாரம். நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார். சமீபத்தில்கூட, “நீண்ட காலத் திட்டங்கள் அனைத்தும் அரசியல் அபிலாஷைகள்.
அவற்றை உடனடியாக நிறைவேற்றுவது கடினம். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது, அவர்களின் புனர்வாழ்வுப் பணிகள் ஆகிய குறுகிய காலப் பணிகளே இன்றைய உடனடித் தேவைகள்” என்று பேசியிருக்கிறார்.இவை எல்லாம் விக்னேஸ்வரனின் குரல் மட்டும் அல்ல. இலங்கைத் தமிழர்களின் குரலாகவும் நாம் கொள்ள வேண்டும். போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேசச் சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்திவந்த விஷயம் அதிகாரப் பகிர்வு. இலங்கைப் பிரச்சனையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்துவருகிறது. இன்றுவரை சிங்கள இனவாத அரசியலின் நடுவே அது சாத்தியமாகவில்லை. மாகாணங் களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் பேசிய இலங்கை அரசு, “அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்திருக்கிறது. போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்தை மறுநிர்ணயம் செய்யக் கூடுதலான நிதியை விக்னேஸ்வரன் எதிர்பார்க்கிறார். ராணுவமயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தைக் குறைக்க வலியுறுத்துகிறார்.
தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும்பட்சத்தில், நாம் இப்போது குரல் கொடுக்க வேண்டிய விவகாரங்கள் இவைதான். “போருக்குப் பின்னரான காலகட்டத்தில் எம் மக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்போதுதான் எழுந்து நிற்கிறார்கள். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக் கூடாது என்பதுடன், ஒரு வன்முறைக் காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது” என்று சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத் தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கேனும் அந்த அபலைகளை விட்டுவைக்க வேண்டும்!நன்றி : இந்து அக்.17(தமிழ்) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்.

No comments:

Post a Comment