பகுத்தறிவு இயக்கத்தின் மாபெரும் முன்னோடி இவர். மூடநம்பிக்கைகள், கறுப்பு மேஜிக் என்று சொல்லப்படும் செய்வினை செய்தல் போன்றவற்றை எதிர்த்து மிகப்பெரும் இயக்கத்தை நடத்தி வந்தார். இதற்கென இவர் நடத்தி வந்த அந்தஷிரதா நிர்மூலன் சமிதி மகாராஷ்டிராவில் 200 கிளைகளுடன் வலுவாக செயல்பட்டு வருகிறது. இவர் கல்வியின் மூலம் ஒரு மருத்துவர், தன்னுடைய அணுகுமுறை மூலம் ஒரு எழுத்தாளர்-செய்தி ஆசிரியர், சுயதேர்வின் மூலம் ஒரு பிரச்சாரகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு சிறந்த கபடி வீரர் என்பது பலர் அறியாத செய்தியாகும் . இந்திய கபடி அணியில் இடம் பெற்று பல பதக்கங்கள் வென்று வந்தவர். அவர் தன்னுடைய பொதுவாழ்வை மருத்துவத் தொழிலில் தொடங்கியவர். ஆனால் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் அவரை தன்னுள் ஈர்த்துக்கொண்டது.சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பாபா ஆதவ் நடத்திய ‘ ஒரு கிராமம், ஒரு கிணறு ‘ இயக்கத்தில் தன்னை இவர் அர்ப்பணித்துக் கொண்டார். வாழ்க்கையில் வெற்றி காண பகுத்தறிவு இயக்கம் என்ற தனது தத்துவ நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார் : காலம் காலமாக பின்பற்றப்படும் மரபுகள், சடங்குகள், மனதைக் குழப்பும் வழிமுறைகள், போன்றவைகளை உள்ளடக்கிய மூட நம்பிக்கைகள் தனிநபர்களின், சமுதாயத்தின் பணம், மனித உழைப்பு ஆகியவற்றை பாழாக்குகின்றன. இவை போன்ற விலைமதிப்பில்லா ஆதாரங்கள் வீணடிக்கப்படுவதை நவீன சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது. உண்மையில் இந்த மூடநம்பிக்கைகள் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதை உறுதி செய்கின்றன என்பதுடன், அவர்கள் அந்த நிலைமைகளில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. மூடநம்பிக்கைகளைப் பின்பற்ற மாட்டோம் என்றும் ஆதாரங்களை பாழாக்க மாட்டோம் என்றும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
வரி செலுத்துவோரின் பணத்தை கும்பமேளா போன்ற விழாக்களிலும் கோவில், மசூதி, ஆலயம் ஆகியவற்றின் பராமரிப்புகளிலும் உள்ளூர் திருவிழாக்களிலும் வீணடிக்கும் அதிகாரிகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்போம். அதில் செலவிடப்பட்ட நிதிகளை குடிநீர், மின்சக்தி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, சுகாதார பராமரிப்பு, தொடக்கக்கல்வி போன்ற கட்டமைப்பு திட்டங்களிலும், மற்ற நலத்திட்டங்களிலும், மேம்பாட்டு செயல்பாடுகளிலும் செலவிட ஒதுக்கிடுவோம். என்று கூறினார். மதத்தின் பெயரால் சாமியார்களால் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதை தபோல்கர் எதிர்த்தார்.ஜோசியம், மந்திரசக்தி போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து சமரசமில்லாத கருத்துப்போரை இவர் நடத்தி வந்தார். மகாராஷ்டிராவில் இன்றும் நிலவும் தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தவர். மனநோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியவர். பெரியார் போன்று மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர் களுக்காகவும், புறக்கணிக்கப் பட்டவர்களுக்காகவும் போராடி வந்த இவரை ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியன்று திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். 68ம் வயதில்கொலை செய்யப்பட்ட இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உண்டு. இவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்த போதும் இவர் காவல்துறையை அணுகவில்லை. “அறியாமையை ஒழிக்க” நடத்தப்படும் போராட்டம் இது என்று அவர் கருதினார். அந்தப் போராட்டத்திற்கு அவருக்கு ஆயுதங்கள் தேவைப்படவில்லை” என்று அவருடைய மகன் ஹமித் கூறினார். வட இந்தியாவில் நிலவிவந்த கட்டைப்பஞ்சாயத்துகளை இவர் சாடிவந்தார். சாதிமுறையை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்து வந்தார். மகாராஷ்டிராவில் விநாயக சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதை எதிர்த்த இவர் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சிலைகளை ஆறுகளிலோ, ஏரிகளிலோ கரைக்கக் கூடாது என்றும் செயற்கையான நீர்நிலைகளை உருவாக்கி அதில் கரைக்க வேண்டும் என்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி சிலைகள் செய்யக்கூடாது என்றும், இயற்கைக்கு உகந்த பொருட்களை மட்டும் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இவருடைய பிரச்சாரம் சிறார் திருமணம், மதுஒழிப்பு, கௌரவக்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகக்கொடுமைகளை எதிர்த்து நடைபெற்று வந்தது.தபோல்கரின் கொலைக்கு பின்னர் மாநில அரசு வெகுகாலமாக நிறைவேற்ற தயங்கி வந்த மூடநம்பிக்கைக்கு எதிரான அவசரச்சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டத்தில் பல குறைகள் இருக்கின்றன. இச்சட்டம் குறித்து தபோல்கர் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவருடைய உயிரை மதவெறியர்கள் பலி வாங்கிய பின்னராவது சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு தைரியம் வந்தது பாராட்டத்தக்கது. பகுத்தறிவு வாதி நரேந்திர தபோல்கரின் பெயரை இச்சட்டம் என்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களும் தொடரும் என்பது நிச்சயம்
No comments:
Post a Comment