Wednesday, February 12, 2014

`நமோ’ என்கிற அபஸ்வரம்


இந்தியா தனது 65வது குடியரசு தின விழாவினை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளது. குடியரசு தினவிழாவில்,இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படை உரிமை, ஆட்சியில் இருப்பவர்களுக்கோ, அது மக்களின் நம்பிக்கைகளைக் காக்கும் புனிதக் கடமை” என்று கூறியுள்ளார்.இந்தியாவில் பின்பற்றப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகமாகும் (ஞயசடiஅநவேநசல னுநஅடிஉசயஉல). நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சியோ, அல்லது கூட்டணி கட்சிகளோ, இணைந்து தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு அரசு அமைக்க முடியும். ஆனால், அந்தத் தலைவரும், அரசும் மக்களுக்குத் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது அமெரிக்கா அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ளதைப் போன்று அதிபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கி, நாட்டினை ஆட்சிபுரிய அனுமதி வழங்கும் முறையன்று.
இந்தியா பலவிதமான, மொழி, கலாச்சார, இன மதங்கள் பின்பற்றும் மக்கள், ஒற்றுமையுடன் வாழும் நாடு. இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஸ்திர தன்மைக்கும் வழிகோலும்.ஆனால் இன்றைக்கு “நமோ” என்கிற அபஸ்வரம் இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தூண்களை அரிக்கத் துவங்கியுள்ளது. இந்திய நாட்டின் சர்வ அதிகாரத்தையும் மோடி என்கிற தனிநபர் கைகளில் தந்துவிட வேண்டும் என்கிற பிரச்சாரம் நடைபெறுகிறது.1970களில் ஒருமுறை, அவ்வாறு தனிநபர் கைகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகாரம் வந்து சேர்ந்த போதுதான், அவசரநிலைக் காலத்தின் கோரத்தாண்டவத்தை மக்கள் உணர்ந்தனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் சட்டம், “இந்தியா அதாவது பாரதம் என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு; இந்தியாவின் இத்தகைய அடிநாதமான கூட்டமைப்பு தத்துவத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்” என்று கூறுகிறது.இந்தியாவின் தேசப்பிதாவான மகாத்மா காந்தியிடம், நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து கேட்டபோது, இதன் வேர்களை நாம் கிராமப் பஞ்சாயத்து முறைகளில் பார்க்க முடியும் என்று கூறினார்.அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கர், நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதி செய்வதற்கு நாடாளுமன்ற ஜனநாயகம்தான் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.இன்றைக்கு, காங்கிரஸூம், பிஜேபியும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சிக்கின்றன. மோடியையும், ராகுலையும் முன்னிறுத்தி 2014 தேர்தலை சந்திக்க முயல்கின்றனர்.வேலையின்மை, கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வு, கல்விக்கான செலவு, பொருளாதார வீழ்ச்சி, விவசாய நெருக்கடி போன்ற பிரச்சனைகளை மக்களை மறக்கச் செய்வதற்கு மோடிக்கும், ராகுலுக்கும் இடையே மல்யுத்தப் போட்டியினை நடத்தி வருகின்றன.
இவ்விரண்டு கட்சிகளும் இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து, அதிபர் ஆட்சி முறையினை நோக்கி இந்தியாவை நகர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1991ல் பிஜேபி தனது தேர்தல் அறிக்கையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிபர் முறை ஆட்சியை இந்தியாவில் அமல்படுத்துவதை ஆராய கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இன்றைக்கு இந்தியாவில் பொருளாதாரக் கொள்கையில் மாற்று தேவைப்படுகிறது. இந்தியாவில் ஏழை மக்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கமான இடைவெளி குறைவதற்கு, நாட்டின் செல்வங்களும், வளங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது மாற்று பொருளாதாரக் கொள்கை மூலமே சாத்தியம். பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் பெரும் செல்வந்தர்களின் நலன் சார்ந்ததாக இருக்கிறது என்பதுதான் இந்திய மக்களின் அனுபவம்.நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்க மதச்சார்பற்ற மாற்று தேவை.
முசாபர்நகர் நிகழ்வுகள் பிஜேபியின் உண்மை முகத்தினை மீண்டும் தோலுரித்துக் காட்டியுள்ளது. அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அனுமதிக்காது என்பதைத் தான் இந்நிகழ்வு சொல்கிறது.காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் நாடாளுமன்ற விரோத நடவடிக்கைகளை இந்தியர்களாகிய நாம் எளிதில் உணரமுடியும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; யாதும் ஊரே யாவரும் கேளிர் ; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - இவையெல்லாம் இந்தியர்களின் மாண்புகள்.இந்திய குடியரசின் மாண்புகளை பாதுகாக்கவும், இந்தியாவின் இறையாண்மையைப் பேணிக்காக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை உயர்த்திப்பிடிக்கவும், இந்தியர்களாகிய நாம், மாற்றுப் பொருளாதாரக் கொள்கை, மதச்சார்பற்ற மாற்று, இவற்றின் தேவை குறித்து தொடர்ந்து உரக்கப் பேசுவோம்.- வெ.ராகுல்ஜி

No comments:

Post a Comment