Tuesday, May 27, 2014

உலக பாரம்பரியச் சின்னம் பட்டியலில் சேர்க்க திட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் துறையினர் ஆய்வு



குழித்துறை, மே 27-உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 500 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. முழுவதும் தேக்கு மரத்தால் கட்டப்பட்ட இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள இடைகல் குகை ஆகியவை உலக பாரம்பரிய நினைவு சின்னங்களின் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை தயார் செய்து ஒப்படைக்கும் பணிக்காக கேரள கலா மண்டலம் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரேஷ் தலைமையில் சிறப்பு அலுவலர் எலிசபெத் மற்றும் ஊழியர்கள் கொண்ட தனிக்குழு கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை குறித்த விவரங்கள், படங்கள், வரைபடம் அடங்கிய ஆவணங்களை தயார் செய்யும் பணிகளை இந்தக்குழு தொடங்கியுள்ளது.
இப்பணிகளை இந்த குழுவினர் அரண்மனையில் தங்கியிருந்து மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்குமார் கூறுகையில், “கேரள அரசின் முயற்சியால் இந்த பணிகள் நடந்து வருகிறது. 5 மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்று ஆவணங்கள் தயார் செய்யப்படும். அதை தொடர்ந்து ஆவணங்கள் யுனெஸ்கோவிடம் தாக்கல் செய்யப்படும். மேலும் அரண்மனையின் முன் காலியாக உள்ள பகுதியில் டிக்கெட் கவுண்டர், வரவேற்பு அறை, காவலர் அறை, தகவல் மையம் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வுக்கான இடம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்

No comments:

Post a Comment