Thursday, June 12, 2014

வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை
வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒருஅடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர்.உமாநாத்.நாட்டின் வரலாற்றில் சுதந்திரப்போராட் டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்பு போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “ஆர்.யு.” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை. சிறுவனாக வறுமையோடு போராடிய அவர், உயர் கல்விக்கானவாய்ப்பு கிடைத்தபோது, அதனைத் தனது சொந்த வறுமை யைப் போக்கிக்கொள்வதற்கான வழியாக அமைத்துக்கொள்ளாமல், தேசத்து மக்களின் வறுமைக்குக் காரணமான முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறையை ஒழிப்பதற்காகவும், அதற்கெதிராக ஒன்றுபட விடாமல்மக்களைக்கூறுபோடும் மதவாத-சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர்.
உழைப்பாளிகள் இன்று அனுபவிக்கிற உரிமைகளில் அவருடைய குருதியும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.1939ல் இயக்கப் பணிகளில் கூடுதல் முனைப்புடன் ஈடுபட அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்துவெளியேறினார் உமாநாத். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.அவரை,போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள். அலிப்பூர் சிறையில் அவர் மற்ற தோழர்களோடுஅடைக்கப்பட்டார். இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும் போது அந்நாட்களில் சிறை வாழ்க்கை என்பதுமிக கொடூரமானதாக, சொல்லொணா துயரங்கள் மிகுந்ததாக இருந்தது. அரசியல் கைதிகள் மற்ற கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்பட்டனர். விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து ஊக்கமிழக்க செய்வது, அரசியல் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதன் நோக்கம்.
ஆனால், நாடும் மக்களும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டதை எதிர்த்துபோராட புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், சிறைச்சாலைக்கு உள்ளேயும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார்கள். கம்யூனிஸ்ட் டுகளின்அத்தகைய போராட்டங்களால்தான் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் சிறையின் மற்றகைதிகளுக்கும் பல்வேறுஅடிப்படை உரிமைகளையும் சலுகைகளை யும் வழங்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஸ் அரசுக்கு ஏற்பட்டது.சிறையில் இருந்து விடுதலையான பின் பம்பாய் நகருக்கு சென்ற உமாநாத் அங்கே கட்சி அலுவலகத்தில் தங்கி பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு, தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளர்களிடையே செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பன்முகப் பணிகள் மகத்தானவை.
அன்றைய சூழலில் கோவையின் ஆலைகளில்வேலை செய்த தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுத படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தனர். அவருடைய உரிமைகளை பற்றி, சட்டங்கள் பற்றி, அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமான பணி.நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவது டன், பல்வேறு பிரச்சனைகளில் தொழிலாளர் களுடன்கலந்தாலோசிப்பது, எடுக்கப்படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, படிப்படியாக அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்று ஒவ்வொரு பணியையும் தனக்கே உரிய தனித்தன்மையோடு திறம்பட மேற்கொண்டார் அவர்.இன்று இருப்பது போன்ற நவீன ஒலிபெருக்கி ஏதுமற்ற அந்த நாட்களில், ஆலை வாயில் கூட்டங்களில் உரத்தக்குரலில் பேசியாக வேண்டும். ‘மெகாபோன்’ என்ற எளிய உலோக கூம்பு வடிவ கருவிதான்அன்றைய ஒலிபெருக்கி. அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களை உமாநாத், கே. ரமணி ஆகியதலைவர்கள் அணிதிரட்டினார்கள்.இதில் உமாநாத்தின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும் தமிழை தாய் மொழியாக கொண்டிராத அவர் தொடக்க நாட்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டி இருந்தது. அவரது பேச்சை கே. ரமணி தமிழாக்கம் செய்வார்.
தொழிலாளரோடு நெருங்குவ தற்கு மொழி ஒரு முக்கியத் தேவை என்ற புரிதலோடு உமாநாத் தமிழ் கற்றார். பிற்காலத்தில் பொதுமக்களிடத்திலே மிகச் சிறப்பாகதமிழிலியேஉரையாற்றக்கூடிய, சக்தி வாய்ந்த தொரு பேச்சாளராக அவர் உருவெடுத்தார்.இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட உழைப்பாளிகள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சக்திகளால் தொழிலாளர்கள் விழிப்படைவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோவை முதலாளிகள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நாடினர். 1948ல் ஒரு கொலை வழக்கில் உமாநாத்தின் பெயர் மோசடியான முறையில் சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றையசூழலில் அவர் சிறையிலிருந்து வெளியே வருமாறு கட்சி கூறியது! அதை ஏற்று, கோவை மத்திய சிறையிலிருந்து, கடுமையான கண்காணிப்புகள் இருந்தும் காவலர்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டுத் தப்பிய உமாநாத், திருச்சி நகரத்தை வந்தடைந்தார்.அவரது தொழிற்சங்க அனுபவம் ரயில்வே தொழிலாளர்களை அணிதிரட்டப் பயன்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதனை ஏற்று ரயில்வே தொழிலாளர்களிடையே செயல்பட்டு, அவர்களது போராட்டங்களுக்கு அவர் வழிகாட்டினார்.
1949 மார்ச் மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வீரம் செரிந்த வேலைநிறுத்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றது. திருச்சி பொன்மலை பகுதியில் தீரமிக்க தியாகிகளை உருவாக்கிய அந்தப் போராட்டத்தில் உமாநாத்தின் பங்களிப்பு தலையாயது.தொடர்ந்து தலைமறைவாகவே செயல்பட வேண்டியிருந்த நிலையில், பின்னர் சென்னைக்கு வந்து, பல்லாவரம் காவல்நிலையத்திற்கு அருகிலேயே தங்கினார்.அவருடன் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், லட்சுமியம்மாள், அவரது மகள் பாப்பா ஆகியோரும் தங்கியிருந்து ரகசியமான முறையில் இயக்கப்பணிகளை மேற்கொண்டனர். ஆயினும் அவர்கள் அங்கே இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்தபோலீஸ்காரர்கள், அவர்கள் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். போலீசார் சூழ்ந்துகொண்டதை அறிந்ததும், மற்ற இடங்களில் இருக்கக்கூடிய தோழர்களைப் பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த பல ரகசிய ஆவணங்களை எரித்துவிட்டார் லட்சுமியம்மாள். மாடியில் ஏறித் தப்பிக்க முயன்ற உமாநாத், தவறி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. கால் முறிந்தும் மன உறுதிமுறியாத அவர் மீதும் மற்றவர்கள் மீதும்போலீசார் திருச்சி சதி வழக்குப் பதிவு செய்தனர்.இத்தகைய வழக்குகள் நீதிமன்றம்வந்தபோது, தோழர்கள் தரப்பில் தானே நீதிபதிமுன் வாதாடுகிற அளவுக்கு சட்ட ஞானத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட திறமைகளை இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்திய அவர், 1970 முதல் 1990ம் ஆண்டுகள் வரையில் பொதுவாகத் தமிழகம் முழுவதும், குறிப்பாகத் திருச்சியில் செங்கொடியின் கீழ் தொழிற்சங்கங்களைக்கட்டி வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல,அனைத்துப் பகுதி மக்களின் பிரதிநிதியாக வும் நாடாளுமன்றமக்களவை, மாநில சட்டப்பேரவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பணியாற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைக்குப் புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்து இரண்டுமுறை, தமிழக சட்டமன்றத்திற்கு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு அவைகளிலும்அவர் நிகழ்த்திய உரைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்களாகத் திகழக்கூடியவை. அதற்குக்காரணம், விவாதிக்க இருக்கும் எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகப் புரியதுகொள்வதிலும், அதுதொடர்பான உண்மைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார்.இவ்வாறு திரட்டிய உண்மைகளின் பலத்தோடு அவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் அவர் வாதாடுகிறபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறிப்போவார்கள்.மக்களின் பிரதிநிதியாக வெற்றிகரமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமாகப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன.
ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒரு நிகழ்வைக் காணலாம்: தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் வலுவானதொரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரியும், விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களைத் தொடங்கிய அந்தச் சங்கம் விரைவிலேயே முக்கியமானதொரு அமைப்பாக அடையாளம் பெற்றது. திருச்சியின் திருவெறும்பூர் அருகில் உள்ளகூத்தப்பா கிராமத்தில், தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்த அந்தச்சங்கத்தினர், தலித் மக்களை விரட்டவும் முயன்றனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமாநாத்உடனடியாக அந்தப் பிரச்சனையை அவையில்எழுப்பினார். தலித் மக்களுக்காக சட்டமன்றத் திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
அந்தப் பாட்டாளிகளின் நிலம் மீட்கப்பட்டது; அவர்களுக்கு அநீதியிழைக்க முயன்ற நாராயணசாமி நாயுடு சங்கம் தனதுமுக்கியத்துவத்தை இழந்தது.‘சிம்கோ’ நிறுவன தொழிலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராட்டக் களம் இறங்கினர். 125 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தையொட்டி தினமும் சட்டமன்றத்தில், அந்தத் தொழிலாளர்களின் நியாயத்தை எதிரொலித்தார் உமாநாத். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தொழிலாளர்களுக்குத் துணையாகத் திரட்டினார். இறுதியில்அன்றைய எம்.ஜி.ஆர். அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. கட்சியின் முழுநேர ஊழியராக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு முறை, அவருடனும் தோழர்கள் கே. ரமணி,வெங்கிடு ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருந்தபோது, தொடக்கத்தில் ஊதியம்என எதுவும் இல்லாமல் பல நாட்கள், தொழிலாளர்கள் கொண்டுவந்து தரும் உணவைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தனர்.
விடுமுறைநாட்களில் வெறும் பட்டாணியும் வேர்க்கடலையுமே உணவு!இந்த எளிமையும், தியாகமும், கூரிய அரசியல் தெளிவும், அயராத ஈடுபாடும்தான் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது. நாடு தழுவிய பிரச்சனைகளில் கட்சி சரியான நிலைபாடுகளை மேற்கொண்டதில் பங்களித்தார்.பொதுவாழ்க்கைக்கு வருகிற எல்லோராலும் தங்களது சொந்தக் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடிவதில்லை. தோழர் உமாநாத் - தோழர் பாப்பா இவர்களின் குடும்பம் இதிலேயும் மிகச்சிறந்த முன்னுதாரணம். தலைமறைவாகக் கட்சிப் பணிகளைச் செய்துகொண்டிருந்த நாட்களில்தான் இருவரது நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது இணக்கமும் இயக்கப் புரிதலும் எல்லாத்தலைமுறைகளுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் என்றே சொல்லலாம். அது அவர்கள் இருவரோடு நின்றிடவில்லை.
அவர்களது மூன்று மகள்களுமே இயக்க வாழ்க்கையோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள்தான். திண்டுக்கல்லில் மருத்துவராகப் பணியாற்றி காலமாகிவிட்ட லட்சுமி, திருச்சியில் வழக்கறிஞராக உழைப்பாளிகள் தரப்பில் வாதாடும் நிர்மலா ராணி, இன்று கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவராகச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் வாசுகி, இவர்களது குடும்பத்தினர் என எல்லோருமே இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.இயக்கப்பணியாற்றுகிற பலரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில்லை என்பதைப் பார்க்கிறோம். வேறுசில கட்சிகளிலோ, குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டு அதிகார பீடத்தில் ஏறிக்கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களோ, மக்கள் பணிக்காகவே அரசியல் என்று உணர்வுப்பூர்வமாகத் தங்களை ஒப்புவித்துக் கொண்டவர்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படை, குடும்பஜனநாயகம் என்ற கோட்பாட்டை நிஜவாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் உமாநாத் - பாப்பாஇணை என்பதேயாகும். இப்படி வாழ்ந்து காட்டியது என்பதும், பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கான ஒருபடிப்பினைதான்.
கட்சியின் மாநாடுகளில் அதிகக் காலம் சிறைவாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் சந்தித்தவர்களில் ஒருவராக உமாநாத் பெயரும் பெருமிதத்தோடு அறிவிக்கப்படும். தேசத்தின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக எட்டரை ஆண்டுகள் சிறைவாசம்! ஐந்து ஆண்டுகள் வனவாசம்போன்ற தலைமறைவு வாழ்க்கை! அருமையான இளமைக்காலத்தை வெறும் பொழுதுபோக்கு அல்லதுசுயநல வேட்கைஎன்று கடத்துகிறவர்களாக இளம் தலைமுறைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல். அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற, சமுதாய நலனுக்காக வாழ்வதே மானுட அழகு என்று உணர்த்துகிற வரலாற்றுச் சான்றாகியிருக்கிறார்தோழர் உமாநாத்.இப்படியொருவரை எப்போது இனி காண்போம் என்று ஏங்குவதற்கு மாறாக, முன்னெப்போதையும் விடஇடதுசாரிகளின், கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான தலையீடும் பரந்த இயக்கமும் வலுவான செயல்பாடும்கட்டாயத் தேவையாகியுள்ள இன்றையகாலகட்டத்தில் அவரைப் போல் நம்மையும் தகவமைத்துக்கொள்வதே அவருக்குச் செலுத்திடும் செவ்வணக்கத்தை அர்த்த முள்ளதாக்கும்.
கட்டுரையாளர் - மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நன்றி: புத்தகம் பேசுது (ஜூன், 2014)

No comments:

Post a Comment