Monday, April 28, 2014

சைகோன் வீழ்ச்சியின் 40ம் ஆண்டு

1975 ஏப்ரல் 29 அன்று அமெரிக்க ஆட்களுடன் சைகோனிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஹெலிகாப்டர் விமானம்/ 1975 ஏப்ரல் 30 அன்று சைகோன் அதிபர் மாளிகை முன்வாயிலைக் கடந்து முன்னேறும் வியட்நாம் புரட்சிப்படையின் டாங்கு.
உலகின் மாபெரும் ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவை ஒரு சாதாரண விவசாய நாடான வியட்நாம் மண்டி போட வைத்த வியட்நாம் போரின் இறுதிக்கட்ட 24 மணி நேரம் தொடங்கிய நாள் இது . 1975 ஏப்ரல் 29 அன்று வியட்நாமின் தலைநகரான சைகோனை( இன்று அதற்கு ஹோ சி மின் நகரம் என்று பெயர்) விட்டு அமெரிக்க துருப்புகளின் மிச்சசொச்சமும், தென்வியட்நாமில் இருந்த அமெரிக்க தூதரும் வெளியேறிய நிகழ்வு ஏப்ரல் 29 அன்று தொடங்கி ஏப்ரல் 30 அன்று முடிவுற்றது. அமெரிக்காவின் “ தோல்வி அடைந்த சிலுவைப்போர்” என்று இழிவான பெயருடன் முடிவடைந்த இந்த யுத்தம் பத்தாண்டுகள் நீடித்தது.
அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க அரசு சந்தித்த மிகப்பெரிய அரசியல் மற்றும் ராணுவ தோல்வி வியட்நாம் மண்ணில் நடந்தது. கடைசி நாளன்று 1373 அமெரிக்கர்கள், 5680 வியட்நாமியர்களுடன், களைத்துப்போனவரும், வியாதியால் துன்புற்று வந்தவருமான அமெரிக்க தூதர் மடித்துச் சுருட்டப்பட்ட அமெரிக்க தேசியக் கொடியை ஒரு கையிலும் மற்றொரு கையில் அவருடைய வளர்ப்பு பிராணியுடன் உயிரைக் கையில் பிடித்தபடி பறந்தோடிய நாள் ஏப்ரல் 29. அமெரிக்காவின் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த போர் என்ற அவப்பெயர் கொண்ட இந்த போர் அமெரிக்கா தோல்வி அடைந்த முதல் போரும் ஆகும். பின்னொரு நாளில் வடக்கு வியட்நாம் போரில் பங்கேற்ற வியட்நாம் கர்னல் ஒருவர் ஒரு அமெரிக்க செய்தியாளரிடம் பரிமாறிக்கொண்ட கருத்துகளின் படி அமெரிக்க ராணுவம் வியட்நாம் மண்ணில் நடந்த எந்தவொரு குறிப்பிடத்தக்க போரிலும் தோற்கவில்லை என்று நகைமுரண்பாடாகக் கூறியது பொருத்தமானதாகும்.
வியட்நாமின் போர்க்களங்களில் நீங்கள் தோற்கவில்லை, மாறாக அமெரிக்காவின் நகரங்களிலும், கிராமங்களிலும் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று சைகோனில் அரசியல் ஆலோசகராக இருந்த கர்னல் பா தாங் கூறியதை அமெரிக்க செய்தியாளர் வேறொரு சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறார். கர்னல் பா தாங் வியட்நாமின் போர்த்தந்திரத்தை விளக்குகிறார். மிகவும் வலிமையான எதிரியை ராணுவரீதியில் வெல்வோம் என்று நாங்கள் நம்பவில்லை. எங்களுடைய வியூகம் நாங்கள் உயிர் பிழைத்து, போரை மிகவும் நீண்ட நாட்களுக்கு நீட்டித்துச் செல்வது, அதனால் அமெரிக்கர்களாகிய நீங்கள் களைப்படைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எண்ண வேண்டும். நாங்கள் நினைத்ததுதான் நடந்தது. உங்களை அரசியல் ரீதியாக இரு கூராக்கி விட்டோம். சில அமெரிக்கர்கள் தாங்கள் அறியாத நாட்டில் நடக்கும் போரின் மீது காட்டும் அக்கறையின்மை உங்களின் உறுதியை சிதைத்து விட்டது என்று அவர் அமெரிக்கச் செய்தியாளருக்கு பின்னொரு நாளில் விளக்கினார். 1960களில் வியட்நாம் போர் பற்றி கேட்கும் போதெல்லாம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கூறும் கிளிப்பிள்ளை வாசகம் என்னவென்றால் சுரங்கத்தின் மறுமுனையில் வெளிச்சம் தெரிகிறது என்பதுதான்.
ஆனால் அவர் வழக்கமாக கூறும் வாசகம் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை. உண்மை நிலை அங்கு மாறுதலாக இருந்தது.1975ம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் வடக்கு வியட்நாம் அரசு வியட்நாம் நாட்டின் 75 விழுக்காட்டை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து இருந்தது. இதையடுத்து சைகோன் நகரத்தில் பெரும் மயான அமைதி நிலவியது. நகரின் மதுபானக்கடைகளும், சைகோன் தேநீர் விற்கும் கடைகளும் வழக்கத்துக்கு மாறாக மூடப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி நூடுல்ஸ் சூப்பும், வெள்ளைக்காப்பியும் விற்பவர்கள், ஏழைகள், நூற்றுக்கணக்கான வீடில்லா குழந்தைகள் அனைவரும் தெருக்களை விட்டு அகன்று விட்டனர். தையல் வேலையில் ஈடுபட்ட இந்திய தையல் தொழிலாளி ஒருவர் செங்கொடிகளையும், வியட்நாம் தேசியக்கொடிகளையும் தைக்கத் தொடங்கி விட்டார். 1975ம் ஆண்டில் லிண்டன் பி.ஜான்சன் அமெரிக்க கடற்படைகளை 1965ம் ஆண்டில் அனுப்பினார். 1973ம் ஆண்டில் பாரீஸ் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதான் அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவில் தலையிட தொடங்கிய ஆண்டு என்று யாரும் எண்ண வேண்டாம். 1950ம் ஆண்டில் ஹாரி ட்ரூமன் வியட்நாமுக்கு ஆலோசகர்களை அனுப்பிய நாளிலேயே அமெரிக்காவின் தலையீடு தொடங்கி விட்டது. சைகோன் வீழும் போது அமெரிக்காவின் தலையீடு முப்பது ஆண்டுகளை நெருங்கி விட்டது இந்தக் காலகட்டத்தில் 31லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் வியட்நாமில் ராணுவப்பணியில் இருந்துள்ளனர். 1973ம் ஆண்டில் பாரீஸ் உடன்பாடு ஏற்பட்ட போது அமெரிக்கா ஆணும் பெண்ணுமாக 58173 பேரை பலி கொடுத்துள்ளது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நொறுங்குண்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து நான்காயிரம் பேராகும் . வியட்நாமில் பணிபுரிந்த பன்னிரண்டு அமெரிக்கரில் ஒருவர் பலியாகியுள்ளார். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் போரை செய்தியாக்கச் சென்ற 105 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலகப்போரில் பசிபிக் போர்க்களத்தில் போரிட்ட ஒரு அமெரிக்க வீரர் நான்காண்டுகளில் 40 நாட்கள்தான் போர்க்களத்தில் இருந்துள்ளார். ஆனால் வியட்நாம் போரில் அவர் ஓராண்டில் 240 நாட்கள் போர்க்களத்தில் இருந்துள்ளார். இந்த போரில் அமெரிக்கா 16500 கோடி டாலர்களை இழந்துள்ளது. வியட்நாமின் இழப்பு அமெரிக்காவை விட அதிகமாகும். முப்பது லட்சம் வியட்நாமியர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பத்து லட்சம் வடவியட்நாமியரும், வியட்காங் வீரர்களும் அடக்கம்.
தென் வியட்நாமில் 2.5 லட்சம் படைவீரர்களும், 20லட்சம் பொதுமக்களும் இறந்துள்ளனர் என்று வியட்நாம் தொழிலாளர், போரில் முடமானோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்ட வட வியட்நாமியரும், வியட்காங் வீரர்களும் காயம் அடைந்தனர். தென் வியட்நாமில் ஐந்து லட்சம் தென் வியட்நாம் துருப்புகள் காயம் அடைந்தனர். இரு வியட்நாமிலும் சேர்த்து சுமார் இருபது லட்சம் மக்கள் கண்ணி வெடி, பீரங்கித் தாக்குதல், ரசாயன ஆயுதங்கள், குண்டுகள், போர்க்குழப்பங்களில் காயமடைந்தனர் என்றும் அது கூறுகிறது.வியட்நாமின் போர் அமெரிக்காவின் மன உறுதியை குலைத்து விட்டது.
அமெரிக்க மக்களை போருக்கு எதிராக உசுப்பி விட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் புதிய வியட்நாம்கள் வேண்டாம் என்ற கோஷம் முழு வீச்சுடன் முழங்கப்படுகிறது. வியட்நாம் போரின் வெற்றியின் கடைசி நாளில் அப்பாடா தப்பித்தோம் என்று அமெரிக்கர்கள் ஹெலிகாப்டரில் ஏறி தொலைவில் நங்கூரமிட்டு இருந்த அமெரிக்க போர்க்கப்பலுக்கு தப்பியோடினர். வியட்நாம் தோல்விக்குப் பின் இன்று வரை அமெரிக்க தென்கிழக்கு ஆசியாவில் ராணுவ ரீதியாக தலையிட இன்று வரை தயங்குகிறது.

No comments:

Post a Comment