Friday, September 5, 2014

‘பேனாவின் முனை கூர்மையானது’



புதுதில்லிக்கு அருகில் உள்ள குர் கானில் வீட்டு வேலைகள் செய்து வரும் பேபி ஹைதர், உண்மையிலேயே `வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது’ என்கிற முதுமொழியை அறியாமல் இருக்கக்கூடும். ஆயினும் அவர் எழுதிய சுயசரிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழு தும் சென்றபின் அந்த முதுமொழி முற்றிலும் உண்மை என்பதை அவர் மெய்ப்பித்து விட்டார். பேபி ஹைதர் வங்கத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையின் அனைத்துவிதமான கொடுமைகளுக்கும், ஒடுக்குமுறைக்கும், அவமதிப்புகளுக்கும் உள்ளானவர்.
கல்வி மறுக்கப்பட்டதுடன், சிறுமியாக இருக்கும்போதே கர்ப்பிணி யாக்கப்பட்டார். இத்தகைய கொடூரமான அனுபவங்கள் ஒருவரை சின்னா பின்னமாக சிதைத்துவிடக்கூடும். ஆயி னும், பேபி ஹைதர் வித்தியாசமானவராக இருந்ததால், அவற்றையே அவர் தன் சுயசரிதையாக எழுதியதன் மூலம் இன்று உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.39 வயதாகும் பேபி ஹைதர் புது தில்லி அருகேயுள்ள குர்கானில் வீட்டு வேலையாளாகப் பணிசெய்து வருகிறார். இவ்வாறு கூறுவது என்பது, பேபி ஹைதரின் ஒட்டமொத்த அடையாளத்தின் ஒருசிறு துளியேயாகும். உலகத்தின் கண் களுக்கு, அதிலும் குறிப்பாக, அவரதுவாசகர்களுக்கு, அவர் ஒரு சிறந்தஎழுத்தாளர்.
விரைவில் வெளிவரவிருக் கும் அவரது மூன்றாவது நூலை வாங்குவதற் காக அவரது வாசகர்கள் அனைவரும்ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பேபி ஹைதரின் முதல் புத்தகம், வங்கமொழியில் வெளியான `ஆலோ ஆந்தாரி’ என்பதாகும். பின்னர் இது ஆங்கிலத்தில் `மிகவும் சாதாரணமானவள் வாழ்க்கை` (ஹ டுகைந டுநளள டீசனiயேசல) என்னும் பெயரில் வெளியானது. 2002இல் ஊர்வசி புட்டாலியா என்பவர் மொழியாக்கம் செய்து சுபான் புக்ஸ் என்னும் பதிப்பகத்தாரால் வெளி யிடப்பட்டது. இதில் அவர் தன் கதையை அனைவரது நெஞ்சத்தையும் தொடும் வண்ணம் சித்தரித்துள்ளார். இந்நூலில் தனக்கு தன் வாழ்வில் ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களைத் தன் வாசகர்களுடன் பேபி பங்கிட்டுக் கொள்கிறார். எப்போதும் தன்னைத் திட்டிக் கொண்டிருக்கும் தந்தைமற்றும் தன்னை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிச் சென்ற தாய். அவரது அக்கா, அவரு டைய கணவரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள்.
பேபிக்கும் கூட 12 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. குடிகாரக் கணவன்மார்களின் கொடுமை களிலிருந்து தப்பிப்பதற்காக எல்லாப் பெண்களும் செய்வதுபோலவே பேபி ஹைதரும் ரயிலேறி குர்கானில் உள்ள தன் சகோதரரின் வீட்டிற்கு வந்தார். ஆயினும் வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறியது. அவர் வீட்டு வேலையாளாகச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள் அற்ப ஊதியம் கொடுத்து அதிக வேலை வாங் கினார்கள். இரவு வெகுநேரம் கழித்துதான் வேலையை முடித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். அதன்காரணமாக தன் குழந்தை களையே அவரால் பார்க்க முடியவில்லை. தன் தாய் வரும் வரைக்கும் சிறிய பொந்து மாதிரி இருந்த அறைக்குள்தான் அவர்கள் அடைபட்டுக் காத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அந்த வீட்டில் வேலை செய்வதை விட்டுவிட பேபி தீர்மானித்தார்.
பின்னர் ஓய்வுபெற்ற ஒருவரின் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தார். அவர் பெயர்பிரபோத் குமார். கல்வியாளரான அவர்நாளடைவில் பேபி ஹைதரின் நண்பராக வும், வழிகாட்டியாகவும், குருவாகவும் மாறி, பேபி ஹைதரை ஒரு சிறந்த பெண் மணியாக உருவாக்கினார்.வீட்டில் நூலகத்திலிருந்த வங்க புத்தகங்கள் சிலவற்றை பேபி ஹைதர் பார்த்துப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிரபோத் குமார், பேபி மீது கோபம்அடைந்து அவரைத் திட்டவில்லை. மாறாக, அவரிடம் இருந்த அறிவு தாகத்தைத் தூண்டும் விதத்தில், அவர் படிக்கும் வண் ணம் எண்ணற்ற புத்தகங்களை அவருக்குப் பரிந்துரைத்தார். அதில் தஸ்லீமா நஸ்ரீன் எழுதிய அமர் மெய்பெலா என்னும் நூல் பேபி ஹைதரின் சிந்தனையிலும் ஒரு தெளிவைக் கொண்டு வந்தது.
தஸ்லீமா நஸ்ரீனின் அந்த நூல் கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அவர் கருதினார். எனவே ஏன் நாமும் அதுபோல் நம் வாழ்க்கையை எழுதக்கூடாது என்று சிந்தித்தார். சிந்தித்ததை பிரபோத் குமாரிடம் பகிர்ந்துகொண்டபோது அவர் எழுதச் சொல்லி ஊக்கமளித்தார்.தான் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வோம் என்று பேபி ஹைதர் கனவிலும் எண்ணிப்பார்த்ததில்லை. “என் துன்ப துயரங்களை என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் நான் எழுதத் தொடங்கினேன். இவ் வாறு எழுதுவது என்னைச் சற்றே சாந்தப்படுத்தியது. எனவே எழுது வதைத் தொடர்ந்தேன்,’’ என்று பேபி ஒப்புக்கொள்கிறார். ஆயினும் அவரது முதல் புத்தகத்தை ஒரு பதிப்பகம் வெளி யிட்டு, அது பின்னர் ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் விவாதம் செய்யக்கூடிய அளவிற்கு உயர்ந்தது. பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்கு அவர் வரவழைக்கப்பட்டு உலகின் சிறந்த எழுத்தாளர்களுக்கு இணையாக அவரும் சிறப்பிக்கப்பட்டார்.
எழுத்தின் மூலம், பேபி ஹைதர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார். அவர்கள் நன்கு படித்து முன்னேறியுள்ளனர். மூத்த பெண் தற்போது ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். இவ் வாறு பேபி ஹைதர் உலகப் புகழ் பெற்ற போதிலும் பிரபோத் குமார் வீட்டில் தான் பார்த்து வந்த வேலையைமட்டும் அவர் இன்னமும் விடவில்லை. அவருடைய வீட்டு வேலையாளாகத் தொடர்கிறார். தன்னுடைய இவ்வளவு புகழுக்கும் அவர் தான் காரணம் என்றும் என்றென்றும் நான்அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன் என் றும் ஹைதர் கூறுகிறார்.கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்து அவரிடம் வினவுகிறபோது பேபி ஹைதர், “என்னைத் துன்பத்திற்குள்ளாக் கிய எவரையும் இப்போது நான் குறைகூற மாட்டேன். என்னைப் போன்றவர்களின் துன்ப துயரங்களுக்கு இந்தச் சமூகம் தான்பொறுப்பேற்க வேண்டும்.
பெண்கள் குறித்தபொதுவான அணுகுமுறை மாற வேண்டிய தேவையிருக்கிறது’’ என்கிறார். பேபி ஹைதர் மேலும் கூறுகையில், “என்னுடைய புத்தகங்கள் என்னைப் போன்ற துர்ப்பாக்கியசாலிகள் தைரியம் பெறவும், தங்களைச் சுற்றியுள்ள இருட்டிலிருந்து வெளியே வரவும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவும் ஊக்கத்தைக் கொடுக்கும்,’’ என்று தான் நம்புவ தாகக் கூறினார். மேலும் அவர்களும் இதுபோன்று தங்கள் கதைகளை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.-ச.வீ.

No comments:

Post a Comment